செஞ்சிக்கோட்டை

செஞ்சி என்ற ஊர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில்
உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர்
உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக்
கோட்டை உள்ளது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின்
வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார்
கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள
மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார்
கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண
கோனார்
செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்
என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது
என்றும் கூறப்படுகிறது.
கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சி விஜய நகர
அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விஜய நகர அரசுக் காலத்தில்
செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது.
விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-1529)
நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத் தம்
பிரதிநிதியாகச் செஞ்சியில் நியமித்தார். வையப்பர் செஞ்சியைத்
தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி
புரியலானார் (1526). இவர் விஜய நகர மன்னர்களிடம் விசுவாசமாக
நடந்துகொண்டார். வையப்பரை அடுத்து துபாகி கிருஷ்ணப்பர்
என்பவர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி
கிருஷ்ணப்பர் காலத்தில் அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக்
கோட்டை’
என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி
மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று
குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார்.
இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர், இரண்டாம்
கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின்
ஆளுநர்களாக இருந்தனர்.
இரண்டாம் கிருஷ்ணப்பர் (1570-1608) வலிமைமிக்க
மன்னராகத் திகழ்ந்தார். சிறந்த ஆட்சியாளராக விளங்கினார்.
இவரது மேலாதிக்கத்தை வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க
வம்சத்தினரும் ஏற்றனர். இவர் ஆட்சிக் காலத்தில் செஞ்சி
தமிழ்நாட்டில் புகழ்மிக்க நகராக விளங்கியது. இவர்
டச்சுக்காரர்களுக்குக் கடலூருக்கு அருகில் வாணிபத்தலம் அமைக்க
அனுமதி கொடுத்தார். இவர் விஜய நகர அரசருக்குக் கப்பம்
செலுத்தத் தவறியதால், விஜய நகர அரசர் முதலாம்
வெங்கடன்
செஞ்சிமீது படையெடுத்து வென்றார், இரண்டாம்
கிருஷ்ணப்பர் சிறை பிடிக்கப்பட்டார். இவருக்குப்பின் செஞ்சி
நாயக்க அரசு வலிமையற்றதாகிவிட்டது. கி.பி.1649இல் கடைசி
செஞ்சி நாயக்கரைத் தோற்கடித்து பீஜப்பூரின் படைகள்
செஞ்சியைப் பிடித்தன. பீஜப்பூர் படைகள் செஞ்சியை
பாதுஷா பாத்
என்று பெயரிட்டு ஆட்சி புரிந்தன. 1677இல்
மராட்டிய தலைவர் சிவாஜியால் செஞ்சி கைப்பற்றப்பட்டது.
சிவாஜி காலத்தில் இக்கோட்டை வலுவானதாக்கப்பட்டது.
மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் அவர் தளபதி
சுல்பிகர்கானின்
நீண்ட முற்றுகைக்குப்பின் செஞ்சி
மராட்டியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. சுல்பிகர்கான்
சொரூப்சிங்
என்ற இராஜ புத்திரரிடம் செஞ்சியின்
ஆட்சியை ஒப்படைத்தார். பின் செஞ்சி மொகலாயருக்கு
உட்பட்ட, கர்நாடக நவாபின் ஆட்சிப்பகுதி ஆயிற்று.
சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன் ஆவார்.
இவர் ஆர்க்காட்டு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து,
அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆர்க்காட்டு நவாப்
சாதத் உல்லா-கான்
கி.பி. 1713இல் ஒரு படையுடன் தேசிங்கு
ராஜனைத் தாக்கினார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய
போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாகப் போரிட்டார்.
அவருக்கு மாபத்கான் என்ற நண்பரும் உதவினார்.
இருப்பினும் தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டார்.
ஆர்க்காட்டு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின்
மனைவி உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப்
பாராட்டி ஆர்க்காட்டு
நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆர்க்காட்டுக்கு
அருகில் உண்டாக்கினார்.
கி.பி. 1750இல் புஸ்ஸி என்ற பிரெஞ்சுத் தளபதி
செஞ்சியைக் கைப்பற்றினார். 1750முதல் 1761வரை செஞ்சிக்
கோட்டை பிரெஞ்சுக்காரர் வசம் இருந்தது. 1761இல் ஸ்டீபன்
சுமித்
என்ற ஆங்கிலேயரால் செஞ்சி கைப்பற்றப் பட்டது.
1780இல் மைசூர் மன்னர் ஹைதர் செஞ்சியைப் பிடித்தார்.
ஆனால், மைசூர் போரின் இறுதியில் செஞ்சி ஆங்கிலேயர்
வசம் வந்தது. இதன்பின் செஞ்சிக்கோட்டை அதன் இராணுவ
முக்கியத்துவத்தை இழந்தது. இன்று செஞ்சிக் கோட்டை ஒரு
தொல்பொருள் சின்னமாகக் காட்சியளிக்கிறது.
இன்றைய செஞ்சிக் கோட்டை
கிருஷ்ணகிரி, இராஜகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை
வளைத்து, சுமார் 5 கி.மீ. சுற்றளவில் முக்கோண வடிவில் செஞ்சிக்
கோட்டை கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலுள்ள இக்கோட்டை
கீழ்க்கோட்டை (Lower Fort) எனப்படும். ஒவ்வொரு குன்றின்மீதும்
பாதுகாப்பான கோட்டையும் கொத்தளங்களும் உள்ளன. கீழ்க்
கோட்டையினுள் நுழைய ஆர்க்காடு அல்லது வேலூர் வாயில்,
பாண்டிச்சேரி வாயில்
என்ற இரு வாயில்கள் உள்ளன.
திசைகளை வைத்துப் பார்ப்பின் கிருஷ்ணகிரிக் கோட்டை
வடக்கிலும், இராஜகிரிக் கோட்டை மேற்கிலும், சந்த்ரயன் துர்க்கம்
தெற்கிலும் உள்ளது. இம்மூன்று மலைக்கோட்டைகளின்
உச்சிகளுக்கும் செல்லப் படிக்கட்டு வசதி உள்ளது. இம்மூன்றில்
இராஜகிரிக் கோட்டையே மிகவும் உயர்ந்தது. இதன் உயரம்
235 மீட்டர் ஆகும்.
கிருஷ்ணகிரி மலைக்கோட்டை
செஞ்சி-திருவண்ணாமலை சாலைக்கு வெகு அருகில்
சாலையின் வலதுபுறம் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது.
மலைமீது ஏறி உச்சிக்குச் செல்லும் வழியில் இரு பெரிய
தானியக் களஞ்சியங்களைக்
காணலாம். இதையடுத்துத் தெய்வ
மில்லாத ரெங்கநாதர் கோவிலும் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும்
இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன.

இராஜகிரி மலைக்கோட்டை
செஞ்சி-திருவண்ணாமலை சாலையின் இடதுபுறம்
சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இராஜகிரி
மலைக்கோட்டை உள்ளது. இராஜகிரிக்குச் செல்லும் வழியில்
பட்டாபி ராமர் கோவில் உள்ளது. இராஜகிரி கோட்டைக்குள்
மராத்தியக் கட்டடக்கலை முறைப்படி உருவான கல்யாண
மண்டபம்
உள்ளது. 7 அடுக்குகளைக்கொண்ட இக்கட்டடம்
மரத்தைப் பயன்படுத்தாது கட்டப்பட்டுள்ளது. கல்யாண
மண்டபத்தை அடுத்து வெடிமருந்துச்சாலை, பெரிய தானியக்
களஞ்சியம், வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்கள், இராஜா தேசிங்கின்
உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் மேடை, வெங்கட
ரமணா கோயில்
ஆகியவை உள்ளன. வெங்கடரமணா
கோவிலின் வேலைப்பாடுமிகுந்த ஒற்றைக் கற்றூண்கள்
சிலவற்றைப் பெயர்த்து, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்குக்
கொண்டு சென்றுள்ளனர்.
இராஜகிரி மலைக்கோட்டையில் 9 வாயில்கள் உள்ளன.
எட்டாவது வாயிலுக்குள் நுழையுமிடத்தில் மரப்பாலம் ஒன்று
உள்ளது. உச்சியில் நாணயச்சாலை, தெய்வமில்லாத ரெங்க
நாதர் கோவில்,
இராஜா தேசிங்கு ‘தர்பார்’ மண்டபம், மணிக்
கூண்டு ஆகியவற்றைக் காணலாம்.
இராஜகிரி மலைக்கோட்டையை அடுத்து உட்கோட்டை(Inner Fort) உள்ளது. இக்கோட்டைப் பகுதியில் புதுச்சேரி
வாயில், வேலூர் வாயில்
ஆகியவை உள்ளன. புதுச்சேரி
வாயில் அருகில் பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டடங்களின்
எஞ்சிய பகுதிகள் உள்ளன. வாயிலருகிலுள்ள கோட்டைச்
சுவரில், ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாகான்
கி.பி. 1713இல் தேசிங்குராஜனை வீழ்த்தி இக்கோட்டையைப்
பிடித்த வெற்றிச் செய்தியைக் குறிக்கும் ‘பாரசீக மொழிக்
கல்வெட்டு’ உள்ளது.
இராஜகிரி மலைக்கோட்டைக்குத் தெற்கில் சந்த்ரயன்
துர்க்கம் மலைக்கோட்டை உள்ளது.
தமிழ்நாட்டில் செஞ்சி கோட்டையைப்போல் சிறப்பு
மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம். இக்கோட்டை நமது
பண்பாட்டை அறிய உதவும் சிறந்த தொல்பொருள் சின்னமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்