கட்டிடக்கலை

     மிகப் பழைய காலத்திலே நமது நாட்டுக் கோயில் கட்டடங்கள்
மரத்தினால் அமைக்கப்பட்டன. அதன் பிறகு செங்கல், சுண்ணாம்பு, மரம்
முதலிய பொருள்களால் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அதற்குப் பின்னர்
பெரிய பாறைகளைக் குடைந்து  குகைக் கோயில்கள்1 அமைக்கப்பட்டன.
கடைசியாகத் தனித்தனிக் கருங்கற்களைக் கொண்டு கற்றளிகள்
அமைக்கப்பட்டன. கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக
அடுக்கிக் கட்டப்படுவது கற்றளி எனப்படும். வெறும் மண்ணால் கட்டப்பட்ட
கோயில்களுக்கு (மண் தளி) என்பது பெயர்.
 
மரக்கட்டடங்கள்

     பழங்காலத்திலே கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன என்று
கூறினோம்.மரத்தைத் தகுந்தபடி செதுக்கிக் கட்டடம் அமைப்பது எளிது.
பண்டைத் தமிழகமான இப்போதைய மலையாள நாட்டின் சில இடங்களில்,
இன்றும் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.
சிதம்பரத்தின் சபாநாதர் மண்டபம் இப்போதும் பெற்றிருக்கிறது.
சிதம்பரத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
 

ஆலயம், முற்காலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டிருந்தது; பிற்காலத்தில்
கருங்கல்லினால் கட்டப்பட்டது. கல்லினால் கட்டப்பட்டாலும், அதன்
தூண்கள், கூரை (விமானம்) முதலிய அமைப்புகள் மரத்தினால்
அமைக்கப்பட்டது போலவே காணப்படுகின்றன. சிதம்பரக் கோயிலின்
பழைய கட்டடங்கள் எல்லாம் மரத்தினாலே அமைக்கப்பட்டிருந்தன
என்பதில் சிறிதும் ஐயமில்லை. திருக்குற்றாலத்துச் சித்திரசபைக்
கோயில் ஆதியில் மரத்தினால் கட்டப்பட்டிருந்தது. முற்காலத்தில்
மரத்தினாலே  கோயில் கட்டடங்கள் கட்டப்பட்டன என்பதற்குச் சான்று,
பிற்காலத்தில் கல்லினால் அமைக்கப்பட்ட கோயில் கட்டடங்களிலே,
மரத்தைச் செதுக்கி அமைக்கப்பட்டது போன்ற அமைப்புகள்
காணப்படுவதுதான்.
 
     மரக் கட்டடங்கள் வெயிலினாலும் மழையினாலும் தாக்குண்டு
விரைவில் பழுதுபட்டு அழிந்துவிடும் தன்மையன. முக்கியமாக
மேல்பகுதியாகிய விமானம் விரைவில் பழுதடைந்தது. ஆகவே, அவை
பழுதுபடாதபடி அவற்றின் மேல் செப்புத் தகடுகளை வேய்வது பண்டைக்
காலத்து வழக்கம். செப்புத் தகடு வேய்ந்த கூரை  விரைவில பழுதடையாது.
முற்காலத்தில், சிதம்பரம் முதலிய கோயில்களின் கூரைகளில்,  சில
அரசர்கள் செப்புத் தகடுகளையும் பொற்றகடுகளையும் வேய்ந்தார்கள் என்று
கூறப்படுகின்றனர். அக்காலத்தில் மரத்தினால் கட்டடம்
அமைக்கப்பட்டிருந்தபடியினால், அவை விரைவில் பழுதாகாதபடி செப்புத்
தகடுகளையும் பொற்றகடுகளையும் அரசர்கள் கூரையாக வேய்ந்தார்கள்.
 
செங்கற் கட்டடங்கள்
 
     மரக் கட்டடம் விரைவில் பழுதடைவதோடு எளிதில் தீப்பிடித்துக்
கொள்ளும். ஆகவே, பிற்காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம் முதலியவை
கொண்டு கோயில்களைக் கட்டத் தொடங்கினார்கள். செங்கற் கோயில்கள்,

மரக் கோயில்களைவிட உறுதியானவும் நெடுநாள் நீடித்திருக்கக்
கூடியனவுமாக இருந்தன. இவைகளும் சில நூற்றாண்டுகள் வரையில்தான்
நீடித்திருந்தன. செங்கற் கட்டடங்கள்,ஏறக்குறைய 200 அல்லது 300
ஆண்டுகளுக்கு மேல் நிலைபெறுவதில்லை. கி.பி.600-க்கு முற்பட்ட
காலத்திலே இருந்த நமதுநாட்டுக் கோயிற் கட்டடங்கள் எல்லாம் செங்கற்
கட்டடங்களே.
 
        சங்க காலத்திலே கட்டப்பட்ட கோயில்கள், செங்கற்
கட்டடங்களையும் மர விட்டங்களையும் கொண்டு அமைக்கப்பட்டு,
சுவர்மேல் சுண்ணம் பூசப்பட்டிருந்தன. இத்தகைய செங்கற் கட்டடக்
கோயில்கள் அவ்வப்போது செப்பனிடாமற்போனால், அவை சிதைந்து
அழிந்துவிடும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்கப்
புலவர், இடிந்து சிதைந்துபோன செங்கற் கட்டடக் கோயில் ஒன்றைக்
கூறுகிறார்.

     ‘‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
    மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
    எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
    ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை’’1

என்பது அச்செய்யுட்பகுதி.

     கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த சோழன் செங்கணான்,
சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் ஆக எழுபதுக்கு மேற்பட்ட
கோயில்களைக் கட்டினான். இதனை, 

    ‘இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு
    எழில்மாடம் எழுபதுசெய் துலக மாண்ட
    திருக்குலத்து வளச் சோழன்’’

என்று, செங்கட் சோழனைப் பற்றித் திருமங்கையாழ்வார் கூறுவதிலிருந்து
அறியலாம். மேலும்,
 
    ‘பெருக்காறு சடைக்கணிந்த பெம்மான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ டெட்டும்.’’1
 
என்று திருநாவுக்கரசர் கூறுவதும் சோழன் செங்கணான் அமைத்த
பெருங்கோயில்களையேயாகும். சோழன் செங்கணான் அமைத்த
பெருங்கோயில்கள் எழுபத்தெட்டும் செங்கற் கட்டடங்களே. ஏனென்றால், கற்றளிகள் - அதாவது, கருங்கற் கட்டடங்கள் - கட்டும் முறை
அக்காலத்தில் ஏற்படவில்லை. செங்கற் கட்டடங்கள் ஆகையினாலே, அவை
இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் நிலைபெற்றிருக்க
இடமில்லை.
 
பாறைக் கோயில்கள்
 
       கி. பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொண்டை நாட்டையும்
சோழ நாட்டையும் மகேந்திர வர்மன் என்னும் பல்லவ அரசன்
அரசாண்டான். இவன் ஏறக்குறைய கி. பி. 600 முதல் 630 வரையில் ஆட்சி
செய்தான். இவன் காலத்தில் திருவாவுக்கரசு சுவாமிகள் இருந்தார்.
இவ்வரசன் கோயிற் கட்டட அமைப்பில் புதிய முறையை ஏற்படுத்தினான்.
பெரிய கற்பாறைகளைக் குடைந்து
அழகான ‘குகைக் கோயில்களை’ (பாறைக்
கோயில்களை) அமைத்தான். பாறையைச் செதுக்கித் தூண்களையும்
முன்மண்டபத்தையும் அதற்குள் திருவுண்ணாழிகையையும் (கருப்பக்
கிருகத்தையும்) அமைக்கும் புத்தம் புதிய முறையை இவன் உண்டாக்கினான்.
 
     மகேந்திரவர்மன் கற்பாறைகளைக் குடைந்து அமைத்த
குகைக்கோயில்களில ஒன்று மண்டகப்பட்டு என்னும் ஊரில் இருக்கிறது.
இவ்வூர், தென் ஆர்க்காடுமாவட்டத்தில்,
விழுப்புரம் தாலுகாவில் உள்ள விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து,
வடமேற்கே 13மைல் தூரத்தில் இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கில் 1/2 மைல்
தூரத்தில் சிறு பாறைக்குன்றின் வடக்குப் பக்கத்தில் இந்தக் குகைக் கோயில்
அமைந்திருக்கிறது. இக்குகைக் கோயிலில் இருக்கிற வடமொழிச் சாசனம்
ஒன்று இவ்வாறு கூறுகிறது:
 
     ‘செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை
     இல்லாமலே பிரம, ஈசுவர, விஷ்ணுக்களுக்கு
     விசித்திர சித்தன் என்னும் அரசனால் இக்கோயில்
     அமைக்கப்பட்டது.’’
 
     இந்த சாசனத்தின் கருத்து என்னவென்றால், செங்கல், சுண்ணாம்பு,
மரம், உலோகம் முதலியவற்றைக் கொண்டு கோயில் கட்டடங்களை
அமைக்கும் பழைமை முறையை  மாற்றி, அப்பொருள்கள் இல்லாமலே
மும்மூர்த்திகளுக்குப் பாறையில் கோயிலை அமைத்தான் விசித்திர சித்தன்1
என்னும் அரசன் என்பது.
 
    மகேந்திரவர்மன் காலத்துக்கு முன்னே, நமது நாட்டுக் கோயிற்
கட்டடங்கள் செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலிய பொருள்களைக்
கொண்டு உண்டாக்கப்பட்டன என்பதும், இவ்வரசன் காலத்தில்தான்
பாறைகளைச் செதுக்கி உண்டாக்கப்படும் குகைக்கோயில்கள் புதியவாகச்
சமைக்கப்பட்டன என்பதும் இதனால் தெரிகின்றன.
 
     குகைக்கோயிலை அமைக்கும் புதிய முறையை ஏற்படுத்திக் கட்டடக்
கலையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய மகேந்திரவர்மன், வேறு பல குகைக்
கோயில்களையும் அமைத்திருக்கின்றான். சென்னைக்கு அடுத்த
பல்லாவரத்திலும், காஞ்சிபுரத்துக்கு அடுத்த பல்லாவரத்திலும்,
திருச்சிராப்பள்ளி மலையிலும், மண்டகப்பட்டு,
மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, வல்லம், மாமண்டூர், தளவானூர்
சித்தன்ன வாசல முதலிய ஊர்களிலும் இவ்வரசன் அமைத்த குகைக்
கோயில்கள் உள்ளன.1
 
   மகேந்திரவர்மனுக்குப் பிறகு, அவன் மகன் மாமல்லனான
நரசிம்மவர்மனும், அவனுக்குப் பின்னர் பரமேசுவரவர்மன் முதலியவர்களும்
மாமல்லபுரம் (மகாபலிபுரம்), சாளுவன் குப்பம் முதலிய இடங்களில்
குகைக்கோயில்களையும் ‘இரதக்’கோயில்களையும பாறைகளில்
அமைத்தார்கள்.2

  கருங்கற் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்குகைக்
கோயில்களில், மரத்தில செய்யப்பட்ட மரவேலைபோன்ற சில அமைப்புகள்
காணப்படுகின்றன. இந்த அமைப்புகள்,முன்பு கூறியபடி, பண்டைக் காலத்தில்
மரங்களினால் கோயில்கள் கட்டப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
 
கற்றளிகள்
 
     கி. பி. 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம்
நரசிம்மவர்மன் ஆன இராஜசிம்மன் காலத்தில் கற்றளிகள் அமைக்கும் முறை
ஏற்பட்டது. கற்றளி என்றால் கற்கோயில் என்பது பொருள். கருங்கற்களை
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயில் கட்டடங்களுக்குக்
கற்றளி என்பது பெயர். சுண்ணம் சேர்க்காமலே இக்கட்டடங்கள்
அமைக்கப்பட்டன.
மகாபலிபுரத்தில் கடற்கரையோரமாக உள்ள கற்றளியும், காஞ்சிபுரத்தில்
கயிலாசநாதர் கோயில் என்று இப்போது பெயர் வழங்கப்படும்
இராஜசிம்மேச்சரம் என்னும் கற்றளியும், பனைமலை என்னும் ஊரிலுள்ள
கற்கோயிலும் முதன் முதல் அமைக்கப்பட்ட கற்றளிகளாகும். இக் கற்றளிகள்
உண்டாக்கப்பட்டு ஏறக்குறைய 1,200 ஆண்டுகளாகியும்,அவை இப்போதும்
உள்ளன. இராஜசிம்ம பல்லவன் காலத்துக்குப் பிறகு கற்றளிகள் பல
தோன்றின.
 
     செங்கற் கோயில்களைவிடக் கற்றளிகள் பல காலம் நிலை நிற்பவை.
கி.பி.8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல அரசர்கள் கட்டிய
கோயில்களில் பெரும்பாலானவையும் கற்றளிகளே. கி. பி. 10ஆம்
நூற்றாண்டில் சோழர்கள் பல்லவ அரசரை வென்று சிறப்படைந்தார்கள்.
இச்சோழர்களுக்குப் பிற்காலச் சோழர் என்பது பெயர். இச்சோழர்கள்
புதியவாகப் பல கோயில்களைக் கற்றளியாகக் கட்டினார்கள். மேலும், பழைய
செங்கற் கட்டடக் கோயில்களை இடித்துவிட்டு அக்கோயில்களைக்
கற்றளியாகக் கட்டினார்கள். இச்செய்திகளை நாம் சாசனங்களிலிருந்து
தெரிந்து கொள்கிறோம்.
 
     இதுவரையில் கோயிற் கட்டடங்களை எந்தெந்தப் பொருள்களால்
அமைத்தார்கள் என்பதைக் கண்டோம். இனி, நமது நாட்டுக்கோயில்
அமைப்புகளையும் அவற்றின் விதங்களையும் பற்றி ஆராய்வோம்.
 
மூன்று வகைப் பிரிவுகள்
 
     பாரத (இந்திய) நாட்டுக் கட்டடங்களைச் சிற்பக் கலைஞர், மூன்று
பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை நாகரம், வேசரம்,
திராவிடம்
என்பன.
 
     இவற்றில் நாகரம் என்பது வட இந்தியக் கட்டடம். இது நருமதை
ஆற்றுக்கு வடக்கே வட இந்தியாவில்
அமைக்கப்பட்டவை. அடிமுதல் முடிவரையில் நான்கு பட்டையாக (சதுரமாக)
அமைக்கப்படுவது இது. இது தமிழ்நாட்டில் இடம் பெறவில்லை. ஆகவே,
இது நமது ஆராய்ச்சிக்கு உட்படவில்லை.
 
     இரண்டாவதான வேசரம் என்னும் பெயருள்ள கட்டடவகை, பண்டைக்
காலத்தில பெரிதும் பௌத்த மதத்தாரால் வளர்ச்சி அடைந்ததாகத்
தோன்றுகிறது. இந்த வேசரக் கட்டடங்கள், தரை அமைப்பிலும், உடல்
(கட்டட) அமைப்பிலும், விமான (கூரை) அமைப்பிலும் வட்டவடிவமாக
அல்லது நீண்ட அரை வட்டவடிவமாக இருக்கும். இந்தக்
கட்டட அமைப்பு முறை, தமிழ் நாட்டுக் கோயிற் கட்டட அமைப்பு
சிலவற்றில் இடம்பெற்றுள்ளது. இதைப் பற்றிப் பின்னர் அதற்குரிய இடத்தில் கூறுவோம்.
 
     மூன்றாவது பிரிவான திராவிடம் என்னும் பிரிவு தென் இந்தியக்
கோயிற் கட்டடங்களாகும். இவை வடக்கே கிருஷ்ணா நதிமுதல் தெற்கே
கன்னியாகுமரி வரையில் காணப்படுகின்றன. திராவிடக் கோயிற் கட்டட
வகையில் தமிழர், சளுக்கியர், ஹொய்சளர் முதலிய உட்பிரிவுகள் உள்ளன.
இந்த உட்பிரிவுகளை விடுத்துத் தமிழ்நாட்டுக் கோயில்களை மட்டும்
ஆராய்வோம். தமிழ்நாட்டுக் கோயில்களிலும் பல்லவர் காலத்துக்
கோயில்கள், (பிற்காலச்) சோழர் காலத்துக் கோயில்கள், பாண்டியர்
காலத்துக் கோயில்கள், விஜயநகர அரசர் காலத்துக் கோயில்கள் என்று
உட்பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளைத் தூண்கள், கூடுகள் முதலிய
அமைப்புகளிலிருந்து கண்டுகொள்ளலாம். நாம் இங்கு ஆராயப்
புகுவதெல்லாம் தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிய பொதுவான
அமைப்புப் பற்றிய மேற்போக்கான செய்திகளையேயாகும்.
கோயில்களின் தரையமைப்பு
 
     பொதுவாக எல்லா இந்துக் கோயிலும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி
இருக்கும். சில கோயில்கள் தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும்
அபூர்வமாக இருப்பதுண்டு. பொதுவாகக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே
கோயில்களை அமைப்பது வழக்கம்.
 
     கோயிற் கட்டடத்தின் தரையமைப்பு, அக நாழிகையை
(கருப்பக்கிருகத்தை)யும் அதன் முன்புறத்தில் சிறிய இடைகழியையும்
உடையது. கருப்பக்கிருகத்தைச் சார்ந்தஇடைகழிக்கு இடைநாழிகை (அர்த்த
மண்டபம்) என்பது பெயர். அகநாழிகை (கருப்பக்கிருகம்) பெரும்பாலும்
சதுரமான அமைப்புடையது. சில அகநாழிகைகள் நீண்ட சதுரமாக
இருப்பதும் உண்டு. சில அகநாழிகைகள் நீண்ட அரைவட்டமாக
அமைந்திருக்கும். மிகச் சில, வட்ட வடிவமாக இருக்கும்.

 
1.                   திருவுண்ணாழிகை (அகநாழிகை)யும் இடைநாழிகையும், சதுர அமைப்பு
திருவுண்ணாழிகைக்குக் கருப்பக்கிருகம் என்றும், இடைநாழிகைக்கு அர்த்த
மண்டபம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
 
2.                  வட்டவடிமான அகநாழிகை, காஞ்சிபுரத்துச் சுரகரீசுவரர் கோயிலும்,
புதுக்கோட்டையைச் சேர்ந்த நார்த்தா மலை, மேல்மலையில் உள்ள
விஜயாலய சோழீசுவரமும், மதுரையை அடுத்த கள்ளழகர் கோயிலும்
இவ்விதத் தரையமைப்பையும் உடலமைப்பையும் கொண்டவை.
 
3.                 பாறைக் கோயிலின் தரையமைப்பு, மகேந்திர வர்மன் காலத்துக்
குகைக்கோயில்கள் எல்லாம் பொதுவாக இந்த அமைப்பையுடையன
.
4.    நீண்ட சதுரமுள்ள அகநாழிகை. யானைக் கோயிலின் தரையமைப்பு.

5.    நீண்ட அரைவட்டமுள்ள அகநாழிகை அமைப்பு. மாமல்லபுரத்துக்
கணேச ரதம் முதலியவை.

6.    பனைமலையில் (தென் ஆர்க்காட்டு மாவட்டம், விழுப்புரம் தாலுக்கா)
உள்ள பல்லவர் காலத்துக் கோயிலின் தரையமைப்பு. மத்தியில் உள்ள
அகநாழிகையைச் சூழ்ந்த நாற்புறமும் அகநாழிகைகள் இருக்கின்றன.

7.    காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்)
தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு
அகநாழிகைகள் அமைந்துள்ளன.

     காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலிலும் பனைமலைக் கோயிலிலும்
கருவறையைச் சார்ந்து வேறு சில கருவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன.
இவை இரண்டும் விதிவிலக்காக, அபூர்வமாக ஏற்பட்டவை.
 
     பல்லவ அரசர் காலம் வரையில். திருவுண்ணாழிகையும்
இடைநாழிகையும் (கருவறையும், அர்த்தமண்டபமும்) ஆகிய கட்டடங்களே
அமைக்கப்பட்டன. இவற்றைச் சூழ்ந்து வேறு மண்டபங்கள் பெரும்பாலும்
அமைக்கப்படவில்லை.
 
     கி. பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர்கள் கருவறையைச்
சுற்றிலும் மண்டபங்களை அமைத்தனர். அன்றியும், அர்த்த மண்டபத்துக்கு
முன்பு இன்னொரு மகா மண்டபத்தையும் அமைத்தனர். ஏனென்றால், 10ஆம்
நூற்றாண்டுக்குப் பிறகு  நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய மூர்த்தங்களை
அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு அகநாழிகையைச்
சூழ்ந்து சுற்று மண்டபங்களை
அமைத்தபடியினாலே, அம் மண்டபங்கள், மத்திய கோயிலின்
பார்வையையும் அழகையும் மறைத்துவிட்டன. சில இடங்களில் மத்திய
கோயிலின் விமானம் தெரியாதபடி மறைத்துவிட்டன.அன்றியும்,
கோயிலுக்குள் வெளிச்சம் புகாதபடி செய்து, பட்டப் பகலிலும்
கோயிலில் இருள் நிறைந்துவிட்டது. நமது கோயில்களில் பட்டப்
பகலிலும் இருள் சூழ்ந்திருப்பதன் காரணம், இந்தச் சுற்று மண்டபங்களே
ஆகும்.
 
மாடக்கோயில்கள்
 
     மாடக்கோயில்கள் என்றால், மாடிபோல் அமைந்த கோயில்கள் என்பது
பொருள். ஒன்றின்மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளையுடைய மாடக்
கோயில்களைச் சிற்ப நூல்கள் கூறுகின்றன. இக்காலத்தில் இரண்டு நிலை,
மூன்று நிலையுள்ள மாடக்கோயில்கள்தாம் இருக்கின்றன. மாடக் கோயில்கள்,
பல்லவர் காலத்துக்கு முன்பே, அதாவது, கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்கு
முன்னரே இருந்தன. ஆனால், அக்காலத்து மாடக்கோயில்கள்
செங்கல்லினால் அமைக்கப்பட்டவை. ஆகவே, அவை இக்காலத்தில் நிலை
பெற்றிருக்கவில்லை. அக்காலத்திலேயே அழிந்து விட்டன.
 
     சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ள திருநாங்கூர் திருமணி
மாடக்கோயிலைத் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில்
கூறுகிறார். இன்னொரு மாடக்கோயிலாகிய திருநறையூர் மாடக்கோயிலையும்
திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அதனைச் சோழன் செங்கணான்
கட்டியதாகவும் கூறுகிறார்.
 
     ‘‘செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’’
 
என்று அவர் கூறியது காண்க. திருநறையூருக்கு இப்போது நாச்சியார்
கோயில் என்று பெயர் கூறுகிறார்கள்.

     திருவைகல் என்னும் ஊரில் இருந்த ஒரு மாடக் கோயிலைத்
திருஞானசம்பந்தர் கூறுகிறார். திருவைகல் மாடக்கோயில் என்பதே
அக்கோயிலின் பெயராக இருந்தது. அதனைக் கட்டியவரும் செங்கட்
சோழன் என்று ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகிறார்.
 
     இந்த மாடக்கோயில்களைச் சோழன் செங்கணான் கட்டியதாக
ஆழ்வாரும் நாயனாரும் கூறுகிறபடியினாலே, இவை கி. பி. 7ஆம்
நூற்றாண்டுக்கு முன்னே கட்டப்பட்டவை என்றும், இவை செங்கல்லினால்
கட்டப்பட்டவை என்றும் தெரிகின்றன. ஆனால், இந்த மாடக் கோயில்கள்
எத்தனை நிலையை (மாடிகளை)க் கொண்டிருந்தன என்பது தெரியவில்லை.
மூன்று நிலை மாடக் கோயில்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
 
மாமல்லபுரத்து மாடக்கோயில்கள்
 
     கி. பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த செங்கற்
கட்டடங்களாலான மாடக் கோயில்களின் மாதிரியைப் பல்லவ அரசனான
நரசிம்மவர்மன் (மாமல்லன்) மாமல்லபுரமாகிய மகாபலிபுரத்திலே
கருங்கல்லினால் அமைத்திருக்கிறான். அவை இரண்டு நிலை, மூன்று
நிலையுள்ள மாடக்கோயில்கள் மாதிரி1 ஆகும்.
 
     அர்ச்சுனன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற
கோயில், இரண்டு நிலை (இரண்டு அடுக்கு) மாடக்கோயிலின் அமைப்பு
ஆகும். தருமராஜ இரதம் என்று தவறாகப் பெயர் வழங்குகிற இன்னொரு
மாடக்கோயில் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலின் அமைப்பு ஆகும்.2
சகாதேவ இரதம் என்பதும் மூன்று நிலையுடைய
மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். இந்த மாடக்கோயில்களின் அமைப்பைக்
கருங்கற் பாறையில் அமைத்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் மத்திய
காலம் ஆகும். இவை பழைய செங்கற் கட்டடங்களாலாய
மாடக்கோயில்களின் உருவ அமைப்புடையவை.
 
வேறு மாடக்கோயில்கள்
 
     கற்றளியாக அமைக்கப்பட்டு இப்போதும் வழிபாட்டில் உள்ள
மாடக்கோயில்கள் இரண்டு உள்ளன. அவை காஞ்சிபுரத்தில் உள்ள
பரமேச்சுர விண்ணகரமும், உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் ஆலயமும்
ஆகும். காஞ்சிபுரத்துப் பரமேச்சுர விண்ணகரத்தை இப்போது வைகுண்டப்
பெருமாள் கோயில் என்று கூறுவார்கள். இக்கோயிலைப் பரமேசுவர வர்மன்
என்னும் பல்லவ அரசன் கி. பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
கட்டினான். இதனைத் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார். இது மூன்று
நிலையுள்ள மாடக்கோயில். ஆனால், இரண்டாவது மாடிக்கு மட்டும் படிகள்
உள்ளன. மூன்றாவது மாடிக்குப் படிகள் இல்லை. பண்டைக் காலத்தில்
மரப்படிகள் அமைந்திருந்தன போலும்; இப்போது மரப்படிகளும் இல்லை.
இது மூன்று நிலை மாடக்கோயில் ஆகும்.
 
     உத்தரமேரூர் மாடக்கோயிலும் மூன்று நிலை மாடக் கோயிலாகும்.
இதனைக் கட்டியவன் நந்திவர்ம பல்லவமல்லன் என்னும் பல்லவ அரசன்.
இவன் கி.பி.730 முதல் 795 வரையில் அரசாண்டான். எனவே இக்கோயில்
கி.பி.8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலைக்
கட்டிய பல்லவனுடைய உருவச் சிற்பமும் இக்கோயிலில் இருக்கிறது.
 
கட்டட அமைப்பும் உறுப்புகளும்
 
     கோயிற் கட்டட அமைப்பைப் பற்றியும் அவற்றின் உறுப்புகளைப்
பற்றியும் ஆகம நூற்களிலும் சிற்ப
சாஸ்திரங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கட்டடக்
கலையின் பொதுவான செய்திகளை மேலோட்டமாகக் கூறுகிறபடியால்,
அவற்றைப் பற்றிய விரிவான செய்திகளை இங்குக் கூறவில்லை. முக்கியமான
சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.
 
    கோயிற் கட்டடத்தில் ஆறு உறுப்புகள் உண்டு. அவையாவன:  அடி;
2. உடல்; 3. தோள்; 4. கழுத்து; 5. தலை; 6. முடி.
 
    இந்தப் பெயர்களுக்குச் சிற்ப நூலில் வேறு பெயர்கள் கூறப்படுகின்றன.
அப்பெயர்களாவன: 1. அதிஷ்டானம்; 2. பாதம்;  மஞ்சம்; 4. கண்டம்; 5.
பண்டிகை; 6. ஸ்தூபி. இவற்றை விளக்குவோம்.
 
     1. அடி அல்லது தரையமைப்பு. இதற்கு அதிஷ்டானம், மசூரகம்,
ஆதாரம், தலம், பூமி முதலிய பெயர்கள் உண்டு.
 
     2. உடல் அல்லது திருவுண்ணாழிகை. இதற்குக் கால், பாதம், ஸ்தம்பம்
 கம்பம முதலிய பெயர்கள் சிற்ப நூலில் கூறப்படுகின்றன. இப்பெயர்கள்
திருவுண்ணாழிகையின (கருவறையின்) சுவர்களைக் குறிக்கின்றன.1
 
     3. தோள் அல்லது தளவரிசை, இதற்குப் பிரஸ்தரம், மஞ்சள், கபோதம
 முதலிய பெயர்கள் உள்ளன.
 
     4. கழுத்து. இதற்குக் கண்டம், களம், கர்ணம் முதலிய பெயர்கள்
உண்டு.
 
     5. தலை அல்லது கூரை. இதற்குப் பண்டிகை, சிகரம், மஸ்தசம், சிரம்
முதலிய பெயர்கள் உள்ளன.   6. முடி அல்லது கலசம். இதற்கு ஸ்தூபி, சிகை, குளம் முதலிய
பெயர்கள் உண்டு.
 
     கோயிற் கட்டடத்தில் அமையவேண்டிய இந்த ஆறு உறுப்புக்களுக்கும்
சில அளவுகள் உள்ளன. அந்த அளவுகளையெல்லாம் தீர
ஆராயவேண்டியதில்லை. ஆனால் பொதுவான அளவை மட்டும்
தெரிந்துகொள்வோம்.

அந்த அளவுகளாவன:

    1.    அடி அல்லது அதிஷ்டானத்தன் உயரம் 1 பங்கு.
    2.    உடல் அல்லது பாதத்தின் உயரம் 2 பங்கு.
    3.    தோள் அல்லது மஞ்சத்தின் உயரம் 1 பங்கு.
    4.    கழுத்து அல்லது கண்டத்தின் உயரம் 1 பங்கு.
    5.    தலை அல்லது பண்டிகையின் உயரம் 2 பங்கு.
    6.    முடி அல்லது ஸ்தூபியின் உயரம் 1 பங்கு.
 
இந்த அளவு ஒருநிலையை யுடைய சாதாரணக் கோயில்களுக்காகும்.
இதுவன்றி, வேறு சில அளவுகளும் ஒருநிலைக் கோயிலுக்கு உண்டு.
 
     இரண்டு நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர்,
3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. கழுத்து, 7. கூரை, 8. கலசம் என
அமையும்.
 
     மூன்று நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர்,
3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. சுவர், 7. தளவரிசை,
8. கழுத்து, 9. கூரை, 10. கலசம் என இவ்வாறு அமையும். கோயிற்
கட்டடத்தின் பல்வேறு அமைப்புகளைச் சிற்ப நூலில் கண்டு கொள்க.
 
     கோயில் கட்டடங்கள் கட்டப்படும் பொருள்களைக் கொண்டு அவை
மூன்று பெயர்களைப் பெறுகின்றன. அவை
    
கோயிற் கட்டட உறுப்புகள்

சுத்தம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பன. முழுவதும் மரத்தினாலோ,
செங்கல்லினாலோ அல்லது கருங்கல்லினாலோ கட்டப்பட்ட
கோயில்களுக்குச் சுத்த கட்டடம் என்றும், இரண்டு பொருள்களைக் கலந்து
அமைக்கப்பட்ட கோயில்களுக்கு மிஸ்ர கட்டடம்என்றும், இரண்டிற்கு
மேற்பட்ட பொருள்களால் கட்டப்பட்ட கோயில்களுக்குச்
சங்கீர்ணம் என்றும் பெயர்கள் கூறப்படுகின்றன.
 
கோயிலின் வகைகள்
 
     கடவுள் அல்லது தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும்
 திருவுண்ணாழிகைக்கு விமானம் என்று பெயர். இந்த விமானங்களின்
வெவ்வேறு விதமான அமைப்பைக் கொண்டு இவற்றிற்கு வெவ்வேறு பெயர்
கூறுவர். முக்கியமாகக் கூரையின் அமைப்பைக் கொண்டு அவைகளுக்கு
வெவ்வேறு பெயர்களைக் கூறுகிறார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள்
தமது திருஅடைவு திருத்தாண்டத்தின் 5ஆம் செய்யுளில், கோயில் கட்டட
வகைகளின் பெயர்களைக் கூறுகிறார். அச்செய்யுள் இது:
 
     ‘‘பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
        பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும்
    கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
        கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
    இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
        இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
    திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
        தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.’’
 
 
இப்பாடலிலே, சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டுக் கோயில்களைக
கூறிய பின்னர், கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில்,
இளங்கோயில்,
மணிக்கோயில், ஆலக்கோயில் என்று சில வகையான கோயில்களைக்
கூறுகிறார்.
  
         சிற்ப நூல்கள் விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம்,
ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், கேசரம் என்னும் ஏழு விதமான கோயில்களைக்
கூறுகின்றன. காமிகாகமமும் இப்பெயர்களைக் கூறுகிறது.
  
         திருநாவுக்கரசு சுவாமிகள் தமிழ்ப் பெயரால் கூறுகிறதையே சிற்ப
நூல்கள் வடமொழிப் பெயரினால் கூறுகின்றன. பெயர் வேற்றுமையே தவிரப்
பொருள் வேற்றுமை இல்லை. எந்தெந்தக் கோயில்களுக்கு எந்ததெந்தப்
பெயர் என்பதற்குச் சிற்ப நூல்களில் விளக்கம் கூறப்படுகின்றன. ஆனால்,
திருநாவுக்கரசர் கூறுகிற பெயர்களுக்கு விளக்கம் இப்போது தெரியாத
படியினாலே, அவை எந்ததெந்தக் கோயிலின் பெயர்கள் என்பது
தெரியவில்லை. இதைக் கண்டறியவேண்டியது நமதுநாட்டுச் சிற்பக்
கலைஞர்களின் கடமையாகும். ஆயினும், நம்மால் இயன்ற அளவு
இதனை ஆராய்வோம்.
  
ஆலக்கோயில்
  
         முதலில், ஆலக்கோயில் என்று திருநாவுக்கரசர் கூறிய
கோயிலை ஆராய்வோம். ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில்
என்பதன் மரூஉ. சிலர் ஆலமரத்தினால கட்டப்பட்ட கோயில் என்று
கருதுகிறார்கள். இது தவறு. ஆலமரம், கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற
உறுதியான மரம் அன்று. ஆலமரத்தினால் கட்டடம் கட்டும் வழக்கம்
இல்லை. வேறு சிலர் ஆலமரத்தின்கீழ் அமைந்த கோயில் என்று
கருதுகிறார்கள். இதுவும் தவறு. ஆலக்கோயில் என்பது கோயிற் கட்டட
வகைகளில் ஒன்றென்பது தெளிவானது. ஆலக்கோயிற் கட்டடம், மேலே
கூறியது போல ஆனைக்கோயில் வடிவமாக இருக்கும். சிற்ப சாஸ்திரங்களில்
இக்கோயில் கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும், ஹஸ்திபிருஷ்ட
விமானக் கோயில் என்றும்
ஹஸ்திபிருஷ்ட விமானக் கோயில் என்றும் கூறப்படுகிறது. கஜம், ஹஸ்தி
என்னும் சொற்களுக்கு யானை என்பது பொருள். யானையின் முதுகு
போன்று இந்தக் கோயிலின் கூரை அமைந்திருப்பதனால் இதற்கு இப்பெயர்
ஏற்பட்டது. தமிழிலே இது யானைக் கோயில் என்று வழங்கப்பட்டுப் பிறகு
ஆலக்கோயில் என்று மருவிற்று. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கச்சூர்
ஆலக்கோயிலைக் கூறுகிறார்.
 
     திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு
 திருக்கழுக்குன்றத்துப் பக்தவத்சல ஈசுவரர் கோயில், திருவானைக்கா முதலியவை ஆலக்கோயில் எனப்படும் கஜபிருஷ்டவிமானக் கோயில்கள் ஆகும். மகாபலிபுரத்துச் சகாதேவ ரதம் என்னும் கோயிலும் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலாக அமைந்த ஆலக் கோயிலாகும்.1
 
 
 
 

ஆலக்கோயில் (ஆனைக் கோயில்)
இளங்கோயில்

    இளங்கோயில் என்பதனைச் சிலர் பாலாலயம் என்று கூறுவர். பழைய
கோயிலைப் புதுப்பிக்கிறபோது, கோயில் திருப்பணி முடிகிறவரையில்
அக்கோயில் மூலவிக்கிரகத்தைத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு
கட்டடத்தில் வைத்திருப்பார்கள். இந்தத் தற்காலிகமான ஆலயத்திற்குப்
பாலாலயம் என்பது பெயர். ஆனால், திருநாவுக்கரசர் கூறுகிற
இளங்கோயில் பாலாலயம் அன்று; கோயிற் கட்டட வகைகளில்
ஒன்றைத்தான இளங்கோயில் என்று கூறுகிறார். சிலர், இளங்கோயில்
என்பது முருகன் கோயிலுக்குப் பெயர் என்று கூறுவர். இதுவும் சரியன்று
     இளங்கோயிலைப் பற்றித் தேவாரத்திலும் சாசனங்களிலும்
கூறப்படுகிறது. சோழநாட்டு மீயச்சூர் கோயில் இளங்கோயில் என்று அப்பர்
சுவாமிகள் கூறுகிறார்.மீயச்சூர் என்பது இப்போது பேரளம் என்று
வழங்கப்படுகிறது. ‘‘கடம்பூர் இளங்கோயிலிலும் கயிலாய நாதனையே
காணலாமே’’ என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். ஆகவே, கடம்பூர்க்
கோயிலும் இளங்கோயில் எனத் தெரிகிறது. (கடம்பூர்க்
கோயிலில் கரக்கோயிலும் உண்டு. கடம்பூர்க் கரக்கோயிலைத்
திருநாவுக்கரசரே வேறு இடத்தில் கூறுகிறார். கடம்பூர்க் கோயிலிலே
கரக்கோயில், இளங்கோயில் என்னும் இரண்டுவகையான கட்டடங்களும்
உள்ளன.)

     பூதத்தாழ்வார் தமது இரண்டாந்திருவந்தாதியில்1 ‘வெள்ளத்
திளங்கோயி’லைக் கூறுகிறார். இராஜராஜன் காலத்துச் சாசனம் ஒன்று
கடம்பூர் இளங்கோயிலைக் குறிப்பிடுகிறது.2  திருச்சி மாவட்டம்
குளித்தலைத் தாலுகா

இரத்தினகிரி என்னும் ஊரில் உள்ள சாசனம், பாண்டியன் ஜடாவர்மன் ஆன
திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத் தேவர் (கி. பி. 1254 - 1264)
காலத்தில் எழுதப்பட்டது. இதில், திருவாலீசுரமுடைய நாயனார்,
திருக்கயிலாயமுடைய நாயனார் என்னும் இரண்டு கோயில்களும்
இளங்கோயில்கள் என்று கூறப்படுகின்றன.1
 
 
 
 
இளங்கோயில் (ஸ்ரீகரக் கோயில்) விமானம்
 
     சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுக்கா திருச்சோகினூரில் இருந்த ஒரு
கோயில் இளங்கோயில் என்று பெயர்பெற்றிருந்தது. இக்கோயிலில் இருந்த
கடவுளுக்குத் திரு இளங்கோயில் பெருமானடிகள் என்று பெயர் இருந்தது.
இக்கோயில் சில காலத்துக்கு முன்னர் இடிக்கப்பட்டது.
 
     நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் உள்ள ஒரு வடமொழிச் சாசனம்
எளங்கோயில் ஒன்றைக் கூறுகிறது. இளங்கோயிலைத்தான் இந்த
வடமொழிச் சாசனம் எளங்கோயில் என்று கூறுகிறது.2 சிலர் கருதுவதுபோல்
இளங்கோயில் பாலாலயமாக இருந்தால், இந்த வடமொழிச் சாசனம்
வடமொழிச் சொல்லாகிய பாலாலயம் என்பதையேறியிருக்கும். ஆனால், இளங்கோயில் என்று கூறுகிறபடியால்,
இளங்கோயில் பாலாலயம் அன்று என்பதும், கோயில் அமைப்பில் ஒரு
வகையானது என்றும் ஐயமறத் தெரிகிறது.
 
     தமிழில் இளங்கோயில் என்று கூறப்படுவதும், சிற்ப நூல்களில்
ஸ்ரீகரக் கோயில் என்று கூறப்படுவதும் ஒரே விதமான கட்டடம் என்று
தோன்றுகிறது. ஸ்ரீகரம் என்னும் கட்டடம் நான்கு பட்டையான விமானத்தை
(சிகரத்தை) உடையது என்று காமிகாகமமும் சிற்ப நூல்களும் கூறுகின்றன.
மகாபலிபுரத்துத் திரௌபதையம்மன் இரதம் என்று இப்போது தவறாகப்
பெயர் வழங்கப்படுகிற கொற்றவை கோயில் அமைப்பு, ஸ்ரீகரம்
என்னும் அமைப்புடையது. இளங்கோயில் என்பதும் இதுவாக இருக்கக்கூடும்.
 
கரக்கோயில்
 
     திருக்கடம்பூர் கோயில் அமைப்பு கரக்கோயில் அமைப்பு என்று
திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் கூறியிருக்கிறார். (திருக்கடம்பூர்
கோயிலில் இளங்கோயிலும் ஒன்று உண்டு.) சுந்தரமூர்த்தி சுவாமிகளும்
கடம்பூர்க் கரக்கோயிலைக் குறிப்பிடுகிறார்.1
 
     கரக்கோயிலைக் கற்கோயில் என்னும் சொல்லின் திரிபு என்று சிலர்
கருதுவது தவறு. கரக்கோயில் என்பது கோயில் வகையில் ஒரு விதத்தைக்
குறிக்கிறது.விஜயம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டட அமைப்பு,
கரக்கோயிலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. வட்டமான விமானத்தை
(சிகரத்தை) உடைய
கோயிற் கட்டடத்திற்கு விஜயம் என்று சிற்ப நூல்கள் பெயர் கூறுகின்றன.
 
ஞாழற் கோயில்
 
     ஞாழற் கோயில் என்பதைக் குங்கும மரத்தினால் அமைக்கப்பட்ட
கோயில் என்று சிலர் கூறுவர். இது தவறு. ஞாழல் என்று குங்கும
மரத்திற்குப் பெயர் உண்டு. ஆனால், ஞாழல் மரத்தினால் அமைக்கப்பட்ட
கோயிலுக்கு ஞாழற் கோயில் என்று கூறுவது  தவறு. அப்படியானால்,
ஏனைய மரங்களினாலே அமைக்கப்பட்ட கோயில்களுக்கு அந்தந்த
மரங்களின் பெயர் அமைய வேண்டுமல்லவா? அப்படிப் பெயர்
இல்லாதபடியினாலே,  ஞாழல் மரத்தினாலே கட்டப்பட்ட கோயில் என்று
கூறுவது தவறு. ஞாழற்கோயில் என்பது கோயில் வகையில் ஒரு வகையாகும்.
 
     இந்தக் கோயிலின் அமைப்பு எப்படி இருக்கும் என்று இப்போது
கண்டறிய முடியவில்லை.
 
கொகுடிக் கோயில்
 
     கொகுடி என்பது ஒரு மரத்தின் பெயர் என்றும், அம்மரத்தினால்
அமைக்கப்பட்ட கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று பெயர்
உண்டாயிற்றென்றும் சிலர் கூறுவர். இதுவும் தவறு. ‘‘கருப்பறியல்
பொருப்பனைய கொகுடிக் கோயில்’’ என்று கூறுகிறார்
திருநாவுக்கரசர். சுந்தரரும் திக்கருப்பறியலூர்ப் பதிகத்தில் இக்கொகுடிக்
கோயிலைக் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தரும்,
 
    ‘குற்றமறியாத பெருமான் கொகுடிக் கோயிற்
    கற்றென விருப்பது கருப்பறிய லூரே’’
 
என்று கூறுகிறார்.
 
     இந்தக் கோயிலின் விமான (சிகர) அமைப்பு எப்படி இருந்ததென்று
திட்டமாகச் சொல்வதற்கில்லை. ஆயினும்

ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டடங்களில்
ஒன்றாகக் கொகுடிக் கோயில் இருக்கக் கூடும் என்று ஊகிக்கலாம்.
வட்டமான சிகரத்தை உடையது விஜயம் என்று பெயர் பெறும் என்பதை
மேலே (கரக்கோயிலில்) கூறினோம். அந்த வட்டமான சிகரம் கர்ண
கூடத்துடன்
 
 
 
 
 
கரக்கோயில் (விஜயம்) விமானம்
 
அமையப் பெற்றால் ஸ்ரீபோகம் எனப் பெயர்பெறும் என்றும், அதுவே
நடுவில் பத்ரவரிசையுடன் கூடியதானால் ஸ்ரீவிசாலம் எனப் பெயர் பெறும்
என்றும் காமிகாகமம்1 கூறுகிறது. கொகுடிக் கோயில் என்பது ஸ்ரீபோகம்
அல்லது ஸ்ரீவிசாலமாக இருக்கக்கூடும் என்று கருதலாம்.

மணிக்கோயில்
 
     மணிக்கோயிலின் அமைப்பைப் பற்றியும் நமக்கு ஒன்றும்
தெரியவில்லை. ஆயினும், எட்டுப் பட்டை அல்லது ஆறு பட்டையான
சிகரத்தையுடைய கோயிலாக இருக்கக்கூடும் என்று யூகிக்கலாம். சிற்ப
நூல்கள் ஸ்கந்த காந்தம் என்று கூறுகிற விமானக் கோயிலே
மணிக்கோயில் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது.
 
    எட்டுப் பட்டையையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த
காந்தம் என்று காமிகாகமம் கூறுகிறது. ஆறு பட்டையை உடைய
சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த காந்தம் என்று வேறு பாட
பேதத்தையும் காமிகாகமம் கூறுகிறது.1
 
     நமது நாட்டில் ஆறுபட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக்
காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக்
காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப்
பட்டையான சிகரமுள்ள கோயிலாக இருக்கக்கூடும்.
 
 
 
 
மணிக்கோயில் (ஸ்கந்த காந்தம்) விமானம்

     திருநாவுக்கரசர் கூறிய கரக்கோயில், ஞாழற்கோயில்,
கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்
என்னும் கோயில் வகைகளையும் சிற்பநூல்களில் வடமொழிப் பெயராகக்
கூறப்படுகிற விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம்,
ஹஸ்திபிருஷ்டம்
என்னும் கோயில் வகைகளையும் ஒருவாறு பொருத்திக்
கூறினோம். இவற்றில் ஆலக்கோயிலும்
ஹஸ்திபிருஷ்டமும் ஒன்றே என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. ஆனால், ஏனைய பொருத்தங்கள் என்னுடைய ஊகமேயொழிய முடிந்த முடிபு அன்று. இவற்றைப் பற்றிச் சிற்ப சாஸ்திரிகள் ஆராய்ந்து முடிவு கூறவேண்டும்.
 
உயரமான கோயில்கள்
 
     மிக உயரமான விமானத்தையுடையது தஞ்சாவூர் பெரிய கோயில்.
இராஜராஜசோழன் இதைக் கி.பி. 1000இல் கட்டினான். இது 190 அடி உயரம்
உள்ளது. இதைப்போன்று அமைப்பும் உயரமும் உடையது, கங்கை கொண்ட
சோழபுரத்தில் உள்ள கோயில். இது கி.பி.1025இல் கட்டப்பட்டது. மற்றோர்

யரமான கோயில் திரிபுவனத்துக் கம்பேசுவரர் கோயில். இவை சோழர்களால்
கட்டப்பட்டவை. இவையே மிக உயரமான கோயில்கள்.பிற்காலத்துக்
கோயில்கள் இவ்வளவு உயரமாகக் கட்டப்படவில்லை.
 
காலப்பகுப்பு
 
     திராவிடக் கட்டடக் கலையைப் பழைய காலம், பல்லவர் காலம்,
சோழர் காலம், பாண்டியர் காலம், விஜயநகர அரசர் காலம் என்று ஐந்து
காலப்பகுதியாகப் பிரித்துக் கூறுவர்.
 
     பழைய காலம் என்பது கி.பி.600-க்கு முற்பட்ட காலம். அந்தக்
காலத்தில், கோயில் கட்டட அமைப்புகள் முழுவதும் அமையப்பெற்று,
மரத்தினாலும் செங்கற்களினாலும் அமைக்கப்பட்டன.
 
     பல்லவர் காலக் கட்டடம் என்பது கி.பி. 600 முதல் 900 வரையில
 உள்ள காலம். இந்தக் காலத்தில் கற்றளிகள் (செங்கற்களுக்குப் பதிலாகக்
கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டடப்பட்ட கோயிற்
கட்டடங்கள்) ஏற்பட்டன.

சோழர் காலம் என்பது பிற்காலச் சோழர் காலம். இது கி.பி.900 முதல்
1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக்
கற்றளிகளை அமைத்ததோடு, பழைய செங்கற் கோயில்களை இடித்து
அக்கோயில்களைக் கற்றளியாகப் புதுப்பித்தார்கள். அன்றியும்,
ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும், கோயில்கள் அமைக்கப்பட்ட
காலமும் இதுவே. மேலும், சிவன் கோயில்களிலே அம்மன் சந்நிதிகள்
தனியாகக் கட்டப்பட்ட காலமும் இதுவே. சோழர் காலத்துக்கு முன்பு, சிவன்
கோயில்களில் அம்மனுக்கென்று தனியாகக் கோயில் இல்லை. இச்செய்தியைச்
சோழர்காலத்துச் சாசனங்களிலிருந்து அறிகிறோம்.
பல்லவர் காலத்துத் தூண்கள்
பாண்டியர் கட்டடக் காலம் என்பது கி.பி.1300 முதல் 1500 வரையில்
உள்ள காலம்.
விஜயநகர அரசர் கட்டடக்காலம் என்பது கி.பி.1500 முதல் 1700
வரையில் உள்ள காலம்.
    கட்டடக் கலையைப் பற்றிப் பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர காலம்
என்று சொல்லும்போது, இந்தக் காலங்களில் கோயிற் கட்டடங்களில்
வெவ்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன என்று கருதக்கூடாது. பெரிய
மாறுதல்கள் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், தூண்கள், கர்ண கூடு,
கோஷ்ட பஞ்சரம் முதலிய உறுப்புகளில் அந்தந்தக் காலத்தில்
சில மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மாறுதல்களைக் கொண்டுதான்
மேற்சொன்னபடி காலத்தைப் பிரித்திருக்கிறார்கள்.
 
 
 


பிற்காலத்துத் தூண்கள்

     குகைக்கோயில்களும் பாறைக்கோயில்களும் கி.பி.600இல் இருந்து 850
வரையில் தமிழ் நாட்டிலே முதன் முதல் அமைக்கப் பட்டன.
குகைக்கோயிலைத் தமிழ்
நாட்டிலே முதன் முதலாக அமைத்தவன், முன்னர் சொல்லியபடி
மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன். அவனுக்குப் பிறகு அவன்
மகன் நரசிம்ம வர்மனான மாமல்லன், மாமல்லபுரத்தில் (மகாபலிபுரத்தில்)
குகைக் கோயில்களையும் இரதக் கோயில்கள் என்னும்
பாறைக்கோயில்களையும் அமைத்தான். அவனுக்குப் பிறகு வந்த பல்லவ
அரசர்கள்சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக்கோயில்
அமைத்தார்கள். பிறகு புதுக்கோட்டையிலும் பாண்டிய நாட்டிலும் குகைக்
கோயில்கள் அமைக்கப்பட்டன. கி.பி. 850-க்குப் பிறகு குகைக் கோயில்கள்
அமைக்கும் வழக்கம் மறைந்து விட்டது.
 
     கி.பி. 1000-க்குப் பிறகு அரசாண்ட சோழ, பாண்டிய, விஜயநகர
அரசர்கள் குகைக் கோயிலை அமைக்கவில்லை. அவர்கள்
கற்றளிகளைத்தான் அமைத்தார்கள்.
 
சுவர் உறுப்புகள்
 
     இனி, திருவுண்ணாழிகை (கருவறை)யின் சுவரின் வெளிப்புறத்தில்
அமைக்கப்படும் உறுப்புகளைப் பற்றிக் கூறுவோம். கருவறைக்கு
முன்புறத்தில் அதைச் சார்ந்து சிறிய இடைகழி ஒன்று உண்டு. இதற்கு
இடைநாழிகை (அர்த்த மண்டபம்) என்பது பெயர். இடைநாழிகை
கருவறையின் ஒரு பகுதியேயாகும். அர்த்த மண்டபத்தின் வாயிலில்
இருபுறத்திலும் துவாரபாலகர் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
  
கோஷ்ட பஞ்சரம்

     திருவுண்ணாழிகை என்னும் கருவறைச் சுவரின் வெளிப் புறத்திலும்,
அர்த்த மண்டபச் சுவரின் (இடைநாழிகையின்) வெளிப் புறத்திலும் கோஷ்ட
பஞ்சரம், கும்பபஞ்சரம் என்னும் உறுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம்.
கருவறையின் வெளிப்புறச்சுவர்களில், பின்புறச் சுவரில் ஒன்றும் வலப்புற
இடப்புறச் சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும்,
கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்த மண்டபத்தின் வலப்புற இடப்புறச்
சுவர்களில் ஒவ்வொன்றும் ஆக மூன்று கோஷ்ட பஞ்சரங்களும்,
கருவறையைச் சேர்ந்துள்ள அர்த்த மண்டபத்தின் வலப்புற இடப்புறச்
சுவர்களின் வெளிப்புறத்தில் ஒவ்வொன்றும் ஆக இரண்டு கோஷ்ட
பஞ்சரங்களும் ஆக ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள் அமைக்கப்படும்.

     கோஷ்ட பஞ்சரம் என்பது சிற்ப வேலைகள் அமைந்த மாடங்கள்
ஆகும். கோஷ்ட பஞ்சரம் என்னும் இம்மாடங்களிலே கணபதி,
தட்சிணாமூர்த்தி,

 


          கோஷ்ட பஞ்சரம்        கும்ப பஞ்சரம்

இலிங்கோத்பவ மூர்த்தி, பிரமன், நாராயணி(கொற்றவை) உருவங்கள்
அமைக்கப்பட்டிருக்கும். கோஷ்ட பஞ்சரங்களிலே இந்த தெய்வ
உருவங்களை அமைக்கும் வழக்கம் சோழர் காலத்திலே கி.பி. 10ஆம்
நூற்றாண்டுக்குப் பிறகு பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், பல்லவர் 


காலத்துக் கோயில்களிலே கோஷ்ட பஞ்சரங்களில் இத்தெய்வ உருவங்கள்
அமைக்கப்படவில்லை.

கும்ப பஞ்சரம்

     கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையே கும்ப பஞ்சரம் என்னும் சிற்ப
உறுப்பு அமைக்கப்பட்டிருக்கும். கும்ப பஞ்சரம் என்பது, அடியில் குடம்
போன்றதும், மேலே கொடிச்சிற்ப வேலையமைந்ததும் ஆன சிற்ப
வேலையாகும். இவற்றின் அமைப்புகளைப் படத்தில் காண்க.
 
தோள் உறுப்புகள்

     தோள் என்னும் பிரஸ்தரத்தின்மேலே, கர்ண கூடு, பஞ்சரம், சாலை
என்னும் உறுப்புகள் உண்டு. கர்ணகூடு என்பது பிரஸ்தரத்தின் கடைசி
மூலையில் அமைக்கப்படும் உறுப்பு. ‘சாலை என்பது பிரஸ்தரத்தின் மத்தியில்
அமைக்கப்படும். பஞ்சரம் என்பது கர்ண கூட்டுக்கும் சாலைக்கும் இடையில்
அமைக்கப்படுகிற சிற்றுறுப்பு. 


 

தோள் உறுப்புகள்

                (1) கர்ணகூடு     (2) பஞ்சரம்    (3) சாலை

     இனி, பண்டைக் காலத்திலிருந்து நாளடைவில் கோயில்கள் கட்டட
அமைப்பில் எப்படி வளர்ச்சியடைந்தன என்பதைக் கூறுவோம்
பண்டைக் காலத்திலே, அதாவது, பல்லவர் காலம் வரையில் (கி. பி. 10ஆம்
நூற்றாண்டுக்கு முன்பு), திருமால், சிவபெருமான், கொற்றவை முதலிய
தெய்வங்களுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன. திருவுண்ணாழிகை
(கருவறை)யும் அதைச் சார்ந்து அர்த்த மண்டபமும் மட்டும் அக்காலத்தில்
இருந்தன. வேறு மண்டபங்களோ துணைக்கோயில்களோ அக்காலத்தில்
இல்லை.
 
     பிற்காலத்தில், அர்த்த மண்டபத்தைச் சார்ந்தாற் போல் கோயில்
முன்புறத்திலே முகமண்டபம் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
 
பரிவார ஆலயங்கள்
 
     கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பிற்காலச் சோழர் ஆட்சியில்
சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் கட்டப்பட்டன.
இக்காலத்துக்கு முன்பு சிவன் கோயில்களிலே அம்மனுக்கென்று தனி
ஆலயங்கள் இருந்ததில்லை.தேவாரத்திலே அப்பர், சம்பந்தர், சுந்தரர்
ஆகிய நாயன்மார்கள் சிவபெருமானையும் தேவியையும் பாடியது
உண்மையே. ஆனால், அக்காலத்தில் தேவிக்கென்று சிவன்
கோயிலில் தனியாக ஆலயம் இருந்ததில்லை. தேவிக்கென்று தனி ஆலயம்
இருந்தால், அது சிவபெருமான் ஆலயத்துடன் சேர்ந்து இராமல் தனியாக
இருந்தது. உதாரணமாக, காஞ்சிபுரத்துக் காமாட்சியம்மை ஆலயத்தைக்
கூறலாம். நாயன்மார்கள் இந்தத் தேவி ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், இந்த ஆலயம் சிவன் கோயிலில் சேராத தனி ஆலயம் என்பதை
நினைவில் வைக்க வேண்டும்.
 
     கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், சோழ அரசரால் அம்மன்
ஆலயங்கள் சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டன. அம்மன் ஆலயங்கள்
புதிதாக அமைக்கப்பட்டதைக் கல்வெட்டுச் சாசனங்களினாலும் அறியலாம்
.
    சோழர்கள் காலத்திலே அடியார், நாயன்மார்களுக்கும் உருவங்கள்
அமைக்கப்பட்டன. இந்த அடியார்கள், நாயன்மார்களின் உருவங்கள்,
திருவுண்ணாழிகையின் வெளிப்புறத்தில், அதைச் சூழ்ந்துள்ள சுற்றாலை
மண்டபங்களில் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவுண்ணாழிகைக்கு
வெளியே சுற்றாலை மண்டபங்கள் அமைக்கப்பட்ட படியால்,
மூலக்கோயில்கள் கட்டட அமைப்பு மறைக்கப்பட்டது. அன்றியும், சுற்றாலை
மண்டபத்தில் சாளரங்கள் அமைக்காதபடியால், பட்டப் பகலிலும் இருள்
சூழ்ந்திருக்கிறது. மூலக்கோயிலின விமானம் மட்டும் தூரப்பார்வைக்குத்
தெரியும். மூலக் கோயிலின் அதிஷ்டானத்திலும் (அடிப்புறம்), சுவரிலும் சிற்ப
வேலைகள் அமைந்து, அப்பகுதிகளே கட்டடத்தின் அழகான பகுதிகளாக
விளங்குபவை. அப்பகுதியைச்  சுற்றிலும் மண்டபம், அமைத்து
மறைத்துவிட்டதல்லாமல், இருள் சூழும்படியும் செய்துவிட்டார்கள். இப்படிச்
செய்தது மூலக்கோயிலின் அழகையே கெடுத்துவிட்டது. இப்பொழுது உள்ள
மூலக்கோயில்களில் பெரும்பான்மையும் மூலக்கோயிலின் கட்டட அழகு
மறைக்கப் பட்டவையே. சுற்றாலை மண்டபங்களால் மறைக்கப்படாத
மூலக்கோயில்கள் மிகச்சிலவே இக்காலத்தில் உள்ளன.
 
     அண்மையில், மிகப் பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஒரு கோயிலுக்கு,
அக்கோயிலின அமைப்பை ஆராய்வதற்காகச் சென்றேன். மூலக்கோயிலின்
முன்புறத்தில மிகப்பெரிய முகமண்டபமும், அதனைச் சார்ந்து
மூலக்கோயிலைச் சூழ்ந்து சுற்றாலை மண்டபங்களும் அமைந்து
அக்கோயிலை மிகவும் இருளுடையதாக்கி விட்டது. இது
எல்லாக் கோயில்களிலும் உள்ள சாதாரண நிலை. நான் இக்கோயிலுக்குச்
சென்றது பகல்வேளை. அந்த நேரத்திலும் இக்கோயில் மிகமிக இருளடைந்து
காணப்பட்டது. மீண்டும் வெளியே வந்த போது, மறுபிறப்புப்
பிறந்தவன்போல உணர்ந்தேன். அவ்வளவு இருள் அடர்ந்து அச்சமாக
இருந்தது.     பெரிய சிவன் கோயில்களிலே பிள்ளையார் கோயிலும் முருகன்
ஆலயமும் இப்போது காணப்படுகின்றன. இக்கோயில்களும் பிற்காலத்தில்
ஏற்பட்டவை. முருகனுக்கும் கணபதிக்கும் தனித்தனியாகப் பண்டைக்
காலத்தில் கோயில்கள் இருந்தது உண்மையே. ஆனால், சிவன்
கோயிலுக்குள் பரிவார ஆலயங்களாக முருகன், கணபதி, அம்பிகை
முதலியவர்களுக்குத் தனித்தனியே பண்டைக்காலத்தில் ஆலயங்கள் இல்லை.
 
     பதினாறுகால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால்
மண்டபம் முதலிய மண்டபங்களும் சோழர் காலத்திலும் அதற்குப்
பிற்காலத்திலும் ஏற்பட்டவையே.
 
     கோயில்களின் வாயில்களில் இப்போதுள்ள முகப்புக் கோபுரங்கள்
பண்டைக் காலத்தில் இல்லை. இக் கோபுரங்கள் பிற்காலத்திலே, விஜயநகர
அரசரான கிருஷ்ண தேவர் காலத்திலே ஏற்பட்டவை. இவற்றிற்கு இராய
கோபுரம் என்று பெயர் உண்டு. சிவன் கோயில்களிலே சனீசுவரன் கோயில்,
நவக்கிரகக் கோயில் என்பவை மிகப் பிற்காலத்திலே புதிதாகச்
சேர்க்கப்பட்டவை.
 
     பெருமாள் கோயில்களிலும் கி.பி.10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ‘தாயார்
சந்நிதி’ இருந்ததில்லை. சைவ சமயமும் வைணவ சமயமும் தனித்தனி
மதமாகப் பிரிந்த பிறகு, சைவர்கள் சிவன் கோயிலில் அம்மனுக்குத் தனியாக
ஆலயம் அமைத்துக கொண்டதுபோல, வைணவர்களும் திருமகளுக்குத்
‘தாயார் சந்நிதி’ அமைத்துக் கொண்டார்கள். அன்றியும், ஆழ்வார்களுக்கும்,
ஆசாரியர்களுக்கும் மற்றும் தெய்வங்களுக்கும் உருவங்கள் அமைத்து
வழிபட்டார்கள். ஆகவே, பெருமாள் கோயில்களிலும் வெவ்வேறு
ஆலயங்களும் மண்டபங்களும் புதிதாக அமைக்கப்பட்டன.
 
     திருமால் கோயில்களில் ஆண்டாள் சந்நிதி என்று ஒரு கோயில்
உண்டு.ஆண்டாள் ஆழ்வார்களில் ஒருவர். ஆனால்,
இவருக்கு மட்டும் சிறப்பாக ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும் தனியே
ஆலயம் உண்டு. விஜய நகரத்து அரசனான கிருஷ்ணதேவராயன் மிகுந்த
வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன்
வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தான்.
அவன் காலத்திலும் அதற்குப் பிறகும் ஏற்பட்டவையே ஆண்டாள்
சந்நிதிகள்.
 
    இதுவே கோயிற் கட்டடங்களின் வரலாறு. மூலக்கோயிலைச் சூழ்ந்து
சுற்றாலை மண்டபங்கள் அமைக்கப்பட்டபடியால், மூலக்கோயிலை அடிமுதல்
முடிவரையில் ஒரே மயத்தில் பார்த்து மகிழ முடியாமலிருப்பதைக் குறிப்பிட
விரும்புகிறேன். கோயிலுக்கு வெளியே சற்றுத் தூரத்தில் சென்று
மூலக்கோயிலின் மேற்புற அமைப்பைப் பார்த்து மகிழவேண்டியிருக்கிறது.
முழு உருவத்தை ஒருமித்துப் பார்த்தால்தான் அக்கட்டடக்
கலையின் அழகை நன்கு உணரலாம். மேற்பகுதி, அடிப்பகுதி இரண்டையும்
ஒருமிக்கப் பார்த்து மகிழும் வாய்ப்பு வெகு சில கோயில்களிலேதான்
அமைந்துள்ளது. ஆனால், பல்லவர் காலத்துக் கோயில்களில் இந்த அழகை
முழுவதும் காணலாம்.
 
சிற்பாசாரியர்
 
    கோயிற் கட்டடங்களையும் சிற்பங்களையும் அமைத்த
சிற்பாசாரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. அவர்கள் பெயர்கள்
மறைந்துவிட்டன. ஆயினும், சில பெயர்கள் மட்டும் தெரிகின்றன.
 
    மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்துக் கோயில்களையும்
பாறைக்கோயில்களையும் அமைத்த சிற்பாசாரியர்களின் பெயர்கள் சில,
மகாபலிபுரத்துக்கடுத்த பூஞ்சேரிக் கிராமத்துக்கு அருகில், நொண்டி வீரப்பன்
குதிரைத் தொட்டி என்னும் ஒரு பாறையில்
பொறிக்கப் பட்டுள்ளன.1   இப்பெயர்கள் மாமல்லபுரத்துச் சிற்பங்களை
அமைத்த சிற்பாசாரிகளின் பெயர்கள் என்று கருதப்படுகின்றன. அவை:
 
         1. கேவாத பெருந்தச்சன், 2. குணமல்லன் 3. பய்யமிழிப்பான்,
4. சாதமுக்கியன், 5. கலியாணி, 6. திருவொற்றியூர் அபாஜர், 7. கொல்லன்
ஸேமகன்.
  
       கி.பி.8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தண்டி என்னும்
ஆசிரியர், தாம எழுதிய அவந்தி சுந்தரி கதை என்னும் வடமொழி நூலில்
லலிதாலயர் என்னும் சிற்பக் கலைஞரைக் குறிப்பிடுகிறார். தண்டி ஆசிரியர்
காலத்தில், லலிதாலயர் மாமல்லபுரத்தில் சிற்பக் கலைஞராக இருந்தார்
என்றும், இக்கலைஞரே சூத்ரக சரிதம் என்னும் கதையைத்
தமிழில் எழுதினார் என்றும் தண்டியாசிரியர் கூறுகிறார்.
  
       இரண்டாம் விக்கிரமாதித்யன் (733-745), காஞ்சிபுரத்தை வென்ற
பிறகு, அந்நகரிலிருந்த குண்டன் என்னும் சிற்பியை அழைத்துக் கொண்டு
போய், அச்சிற்பியைக் கொண்டு பட்டடைக்கல் என்னும் ஊரில் ஒரு
கோயிலைக் கட்டினான். இக்கோயில இப்போது விருபாக்ஷ ஈசுவரர் கோயில்
என்று வழங்கப்படுகிறது. இந்த அரசன், இச்சிற்பக் கலைஞருக்குத்
திரிபுவனாசாயார் என்றும், அநிவாரிதாசாரியார் என்றும் சிறப்புப
பெயர்களைக் கொடுத்தான்.
  
       முதலாங் குலோத்துங்க சோழன் காலத்தில், புரிசையில்
திருப்படக்காருடைய மகாதேவர் கோயில் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய
சிற்பாசாரியின் பெயர், சந்திரசேகரன் ரவி என்னும் சோழேந்திர சிம்ம
ஆசாரி என்பது.2         திருவொற்றியூர் மூலக்கோயில், இராஜேந்திரசோழன் காலத்தில்
புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய சிற்பியின் பெயர்
வீரசோழ தச்சன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ரவி என்பதாகும்.2
சிதம்பரத்து வடக்குக் கோபுரத்தைக கட்டிய சிற்பியரின் உருவங்களும்
பெயர்களும் வடக்குக் கோபுரத்து உட்சுவரில் எழுதப்பட்டுள்ளன.
அப்பெயர்களாவன: விருத்த கிரியில் கேசவப் பெருமாள்; அவர்
மகன் விசுவமுத்து. திருப்பிறைக்கோடை
ஆசாரி திருமருங்கன்; அவருடைய
தம்பி காரணாச்சாரி.
தமிழர் வளர்த்த அழகு கலைகள்
 
அறிஞர்
மயிலை சீனி வேங்கடசாமி
  



கருத்துரையிடுக

2 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்