கி.மு. 3000 - கி.பி. 300

பன்மொழிப்புலவர்
கா.அப்பாத்துரை

   தென்னாட்டின் நாகரிக வரலாற்றுக்கு மண்ணூல் உதவுகிறது. புதை
பொருளாராய்ச்சி உதவுகிறது. சிந்துவெளி ஆராய்ச்சி அத்துறைக்கு மிகவும் வளம்
தருகிறது. ஆனால் அரசியல் வரலாற்றை இவை விளக்கப்போதவில்லை. புராண மரபு,
மக்கள் மரபு, இலக்கிய மரபு ஆகிய மூன்றும் இத்துறையில் ஓரளவு உதவுகின்றன.
ஆனால் அவை தரும் ஒளி, மின்னல் ஒளியாகவோ, மின்மினி ஒளியாகவோதான்
இருக்கிறது. முதல் இரண்டு மரபுகளின் மெய்யுடன் பொய் கலந்துள்ளது. எது பொய்,
எது மெய் என்று பிரிப்பது எளிதாயில்லை. இறுதி மரபு நிறைய செய்திகள் தருகின்றன.
ஆனால் அவற்றை முற்றிலும் காலவரிசைப்படுத்த நமக்கு இன்னும் போதிய சாதனங்கள்
கிட்டவில்லை.
     திருவிளையாடற் புராணம் பாண்டியர் மரபின் வரிசைப் பட்டியலும், பல சோழ
மன்னர் பெயர்களும் தருகின்றது. ஆனால் இவை நமக்குத் தெரிந்த வரலாற்றுச்
செய்திகளுக்கு முரண்படுகின்றன. இலக்கியத்தால் அறியப்படும் செய்திகளுக்கும்
மாறுபடுகின்றன. இந்நிலையில் அப்புராணம் நமக்குச் சிறிதும் பயன்படவில்லை.
     திருவிளையாடற் புராணம் ஒன்றல்ல - பல. அவை ஒன்றுடன் ஒன்று
மாறுபடுகின்றன.
     சேர, சோழ பாண்டியர் முத்தமிழரசர். அவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகள்
தமிழகத்தில் ஆண்டனர். இதை நாம்

வரலாற்றில் தெளிவாக அறிகிறோம். ஆனால் மக்கள் மரபும் இலக்கிய மரபும் அவர்கள்
உலகத்தொடக்க முதலே மூன்று அரசர் மரபுகளாக இருந்தன என்று கூறுகின்றனர்.
     மூன்றும் முதலில் ஒரே அரச மரபாயிருந்தது என்று மலையாள நாட்டு மக்கள்
மரபும் இலக்கிய மரபும் குறிக்கின்றன. அதன்படி 'மாவலி' என்ற அரசன் தென்னாடு
முழுவதையும் ஆண்டான். அவன் பாண்டிய மரபைச் சேர்ந்தவன். அக்காலத்தில்
தென்னாட்டில் ஒரே மொழி, பழந்தமிழ்தான் வழங்கிற்று. சாதி வேறுபாடு, உயர்வு
தாழ்வுகள் இல்லை. ஆனால் மாவலிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள்
பாண்டியன், சோழன், சேரன், ஆந்திரன், கன்னடன் என்பவர். ஐவரும் தந்தையுடன்
முரண்பட்டனர். அத்துடன் ஒருவருடன் ஒருவர் போராடினர். வெளிநாட்டுச்
சூழ்ச்சிக்காரனான வாமனன் அவர்களைத் தூண்டிவிட்டான். மாவலி, புதல்வர்
மடமைக்கு வருந்தினான். அதே சமயம் அவன் போரையும் விரும்பவில்லை. ஆகவே
நாட்டை ஐவருக்கும் பிரித்துக் கொடுத்துச் சென்றான். ஐந்து நாடும் ஐந்து மொழி
நாடுகள் ஆயின. சோழனும் பாண்டியனும் பிற்காலத்தில் ஒன்றுபட்டதனால், இரண்டு
நாடுகளும் ஒரே செந்தமிழ் நாடு ஆயின. மற்றவை கொடுந்தமிழ் நாடுகளாயின.
     பாண்டியன் என்ற சொல்லின் பொருள் இந்த மலையாள நாட்டு மரபுக்கு வலிமை
தருகிறது. 'பண்டு' என்றால் பழைமை. பாண்டியநாடு பழம் பெருநாடு என்று தமிழ்
இலக்கியத்தில் போற்றப்படுகிறது.
     அது மட்டுமன்று, மூன்று தமிழரசுகள் இருந்தாலும், தமிழுக்கு முதலுரிமை
பெற்றது பாண்டி நாடே. அதில் மட்டுமே சங்கம் இருந்தது.
     தமிழ் நாட்டு மக்கள் வாய்மொழி, இலக்கியம் இரண்டிலும் இரண்டு பழம்
பெருமரபுகள் நமக்கு வந்து எட்டியுள்ளன.
    ஒன்று கடல் கொண்ட தமிழக மரபு. மற்றொன்று முச்சங்க மரபு.
     கடல் கொண்ட தமிழக மரபு வருமாறு:
     குமரிமுனைக்குத் தெற்கே, இன்று குமரி மாகடல் அலைபாயுமிடத்தில், ஓர்
அகன்ற நிலப்பரப்பு இருந்தது. அதில் குமரிக் கோடு, பன்மலை முதலிய மலைகளும்;
குமரி, பஃறுளி முதலிய ஆறுகளும் இருந்தன.
     மற்றும் பஃறுளி யாற்றுக்குத் தெற்கே தென்பாலி முகம் என்ற நாடும்; பஃறுளி
குமரி ஆறுகளுக்கிடையில் ஏழ்தெங்க நாடு, எம்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு,
ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகாரை நாடு, ஏழ்குறும்பானைநாடு ஆகிய
49 நாடுகளும், குமரியாற்றுக்கு வடக்கே பன்மலையை அடுத்துக் குமரி கொல்லம்
நாடுகளும் ஆகமொத்தம் 52 நாடுகள் இருந்தன.
     பஃறுளி ஆற்றின் கரையில் பாண்டியர் முதல் தலை நகரமான தென் மதுரையும்,
குமரியாற்றின் கடல் முகத்தில் இரண்டாம் தலைநகரமான அலைவாய் அல்லது
கவாடபுரமும் இருந்தன. இத்தனையும் கடல் கொண்டபின் வைகையாற்றின் கரையிலுள்ள
மதுரை கடைசித் தலைநகரமாயிற்று.
முச்சங்க மரபு
     முச்சங்க முத்தமிழ் மரபு கடல்கொண்ட தமிழக மரபுடன் இயையும் தொடர்பும்
உடையது. இறையனார் அகப்பொருள் என்ற நூலின் பழமையான உரை இதை
விளக்கமாகத் தருகிறது.
     பாண்டியர் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள்
நிறுவினார்கள்.
     தலைச்சங்கம் காய் சினவழுதி முதல் கடுங்கோன் வரை, 89 பாண்டியர்
காலங்களில் 4440 ஆண்டுகள் தென்மதுரையில்
நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 549. பாடும் பெருமை சான்ற 7 பாண்டியர்
உட்பட பாண்டிய புலவர் தொகை 4449. தலைசிறந்த புலவர்கள் திரிபுரமெரித்த
விரிசடைக் கடவுள், குன்றமெரித்த குமரவேள், நிதியின் கிழவன், அகத்தியன்,
முரஞ்சியூர் முடிநாகராயர் முதலியோர். மற்றும் அதங்கோட்டாசான், தொல்காப்பியனார்,
பனம்பாரனார் ஆகியோரும் இச்சங்கத்தவர் என்று கூறப்படுகிறது.
     இச்சங்கத்தில் பாடல் பெற்ற நூல்கள் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியம்; இயல்
தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம்; முதுநாரை, முதுகுருகு போன்ற இசைநூல்கள்;
முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நாடக நூல்கள் ஆகியவை. மற்றும்
பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அவிநயம், நற்றத்தம்வாமனம்,
புறப்பொருள், பன்னிருபடலம் ஆகியவையும் இச் சங்க காலத்தவை என்று
குறிப்பிடப்படுகின்றன.
     இடைச்சங்கம் வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை, 59
பாண்டியர் காலங்களில், 3700 ஆண்டுகள், கவாடபுரம் அல்லது அலைவாயில்
நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 59. பாடும் பெருமைசான்ற 5 பாண்டியர்
உட்பட, பாடிய புலவர் தொகை 3700. தலைசிறந்த புலவர்கள் அகத்தியர்,
தொல்காப்பியர் நீங்கலாக, இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்காப்பியன்,
சிறுபாண்டரங்கன், துவரைக்கோன், கீரந்தை ஆகியவர்கள்.
     அரங்கேற்றப்பட்ட நூல்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல்
ஆகியவை. தவிர, மேற்கோள் நூல்களாக மாபுராணம் இசை நுணுக்கம், பூதபுராணம்
ஆகியவையும் கொள்ளப்பட்டன.
     கடைச்சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 பாண்டியர்
காலங்களில், 1950 ஆண்டுகள், வைகைக் கரையிலுள்ள மதுரையில் நடைபெற்றது. அதன்
உறுப்பினர்
தொகை 49. பாடும் பெருமைசான்ற 3 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 449.
தலைசிறந்த புலவர்கள் சிறுமேதாவியார். சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்
குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார்,
கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள்.
     பாடப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு; குறுந்தொகை நானூறு, நற்றிணை
நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல்,
கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன.
புராண மரபும் தமிழ் மரபும்
     இந்த இரண்டு மரபுரைகளும் புராண மரபுரைகள் அல்ல. ஆனாலும் அவற்றில்
புராணமணம் வீசாமலில்லை. தெய்வங்கள் புலவருடன் வந்து இடம் பெறுகின்றனர்.
ஆண்டுகள் ஆயிரப் பதினாயிரக் கணக்கில் காட்சியளிக்கின்றன.
     ஆனால் இவற்றைப் பொய் என முற்றிலும் விலக்கிவிடவும் முடியவில்லை.
அவற்றில் போதிய உண்மைகள் இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம், சங்க
இலக்கியம், சிலப்பதிகாரநூல் மரபு, உரைமரபு முதலியவை வலியுறுத்துகின்றன.
     சங்க இலக்கியம் என்ற பெயரில் இன்று நம்மிடையே இருக்கும் இலக்கியம்
கடைச்சங்க இலக்கியம். மரபுரையில் குறிப்பிட்ட நூல்களின் விவரங்களுடன் அது
பெரும்பாலும் ஒத்துள்ளது. தொல்காப்பியம் இடைச்சங்கம் அல்லது முதல் சங்கத்துக்கு
உரியது.
     முச்சங்க மரபின் பெரும் பகுதி உண்மை என்பதை இவை காட்டுகின்றன.
தவிர, சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட முத்தமிழ் மரபைச் சிலப்பதிகாரமும் அதன்
உரையும் மறுக்கமாட்டாத நிலையில்
நமக்கு விளக்குகின்றன. இயல், இசை, நாடகம் என்ற மூவகைத் தமிழில், சங்க
இலக்கியமும் தொல்காப்பியமும் தெரிவிப்பது இயல் ஒன்றையே, சிலப்பதிகாரம்
தெரிவிக்கும் இசை, நாடகம் ஆகியவற்றின் இலக்கண இலக்கியங்கள் அவற்றுக்கு
முற்பட்டனவாதல் வேண்டும் என்பது தெளிவு.
     உலக இலக்கிய கலை ஆராய்ச்சிகள் சிலப்பதிகாரம் தரும் விளக்கொளிக்கு
இன்னும் வலிமை தருகின்றன. ஏனென்றால் சிலப்பதிகாரத்தால் நாம் அறியும்
தமிழ்நாடக மரபுடன், மலையாள நாட்டு நாடக மரபு, சமஸ்கிருத நாடகமரபு,
தென்கிழக்காசிய மரபு, கிரேக்க உரோம மரபுகள் ஆங்கிலேய நாட்டு மரபு, பண்டை
அமெரிக்க 'மய' நாகரிக மரபு ஆகியவை தொடர்புடையவை.
     கடல்கொண்ட தமிழ் மரபைச் சங்கநூற் பாட்டுக்கள் மெய்ப்பிக்கின்றன. தற்கால
மண்நூல் நில நூலாராய்ச்சிகளும் பிறநாட்டு மரபுகளும் இதனுடன் பெரிதும்
பொருந்துகின்றன.
     இவற்றுடன் சிந்துவெளி ஆராய்ச்சி தமிழின் பழமைக்கும் தமிழினத்தின்
பெருமைக்கும் புதிய சான்றுகள் தரத் தொடங்கி யுள்ளது.
     தமிழகத்தில் மூவேந்தர்கள் மட்டுமல்ல. வேறு பல சிற்றரசர்களும் இருந்தனர்
என்று தமிழ் இலக்கியத்தால் அறிகிறோம். இவர்கள் வேளிர் அல்லது குறுநில
மன்னர்கள் எனப்பட்டார்கள். மூவேந்தர்கள் முடிஉடைய அரசர்கள். வேளிருக்கு முடி
கிடையாது. ஆகவே அவர்கள் குடி அரசர்கள் என்று குறிக்கப் படுகிறார்கள்.
     தமிழகத்துக்கு அப்பால் ஆந்திர தெலுங்குப் பகுதியில் இத்தகைய குடி அரசர்
இருந்தனர். தமிழக எல்லையில் இவர்கள் திரையர், பல்லவர், குறுபர் என்றும்,
அதற்கப்பால், சளுக்கர், கடம்பர் என்றும் அழைக்கப்பட்டனர்.
   தமிழகத்துக்கு வெளியே இந்தக் குடியரசர்கள் முடியரசர்களுக்கு முற்பட்டவர்கள்.
சளுக்கர் முதலிய பல பிற்கால முடியரசு மரபுகள் இக்குடியரசுகளிலிருந்தே வளர்ந்தன.
     தமிழகத்திலும் சேர சோழ பாண்டியர்கள் தொடக்கத்தில்
குடியரசர்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருத இடமுண்டு. பல குடியரசர்கள்
சேர்ந்தும், பல குடியரசர்களைவென்றும் அவர்கள் முடியரசர்களாயிருக்கக் கூடும்.
     பாண்டியருக்கு வழுதி, பஞ்சவர், பழயர், செழியர், கௌரியர் முதலிய பல
பெயர்கள் உண்டு. சோழருக்குச் செம்பியர், சென்னியர், வளவர், கிள்ளிகள் முதலிய
பெயர்களும், சேரர்களுக்கு வானவர், கொங்கர், வில்லவர், பொறையர், கோதைகள்,
குடவர், குட்டுவர் முதலிய பெயர்களும் இருந்தன. இவை அவர்களுக்கு உட்பட்ட
அல்லது அவர்களால் வெல்லப்பட்ட குடியரசுகளின் பெயர்களாயிருக்கலாம்.
     சேர அரசு கடைசிவரை குடியரசுகளின் இணைப்பு (confederation) ஆகவே
இருந்து வந்தது.
     பண்டைக் குடியரசுகளின் இணைப்புக்களில் ஒன்றுதான் ஆந்திர அரசு. அது
இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பே பேரரசாக விளங்கிற்று.
     விந்தியமலைக்கு அப்பால் இக்குடியரசுகள் மூன்றாம் நூற்றாண்டு வரை
அழியாமல் இருந்தன. புத்தர் பிறந்த சாக்கியர் குடி, லிச்சாவி குடி ஆகியவை இவற்றுள்
சில.
     தொடக்ககால அரசு ஒரு சிறு எல்லைக்குட்பட்டது. அது முதலில் குடியரசாகவே
இருந்தது. நாட்டாண்மை முறையாக அது இன்றுவரை இருந்து வருகிறது. ஆனால்
குடியரசைத் தனிமனிதர் கைப்பற்றி வேளிர் ஆயினர். இவர்கள் பிற வேளிரை வென்று
முடியரசர் ஆயினர்.
   இவை மூவரசர் தோன்றுமுன் இருந்த, இருந்திருக்கக் கூடிய, நிலைமைகள்.
     ஆனால் மூவரசர் காலமே ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை உடையது.
குடியரசுக்காலம் இன்னும் பழமையுடையதாயிருக்க வேண்டும்.
வரலாற்றில் முற்பட்ட கடல் வாணிகத் தொடர்புகள்
     தமிழ் நாகரிகம் தென்னாடு முழுவதும் பரந்திருந்த பழம் பெரு நாகரிகம். அதன்
கிளைகள் தென்னாடு கடந்து உலகெங்கும் பரந்து மனித நாகரிகத்தை வளர்த்தன.
     தென்னாட்டு நாகரிகத்தை நாம் இன்று தமிழின நாகரிகம் அல்லது திராவிட
நாகரிகம் என்கிறோம்.
     தமிழின நாகரிகம் ஃவினீய நாரிகத்தைப் போல ஒரு வாணிக நாகரிகம். கடல்
வாணிக நாகரிகம். கடலும் கடல் வாணிகமும் மிகமிகப் பழங்காலந்தொட்டே தமிழ்
இனத்தவர் உயிர் மூச்சாயிருந்தது. அவர்கள் பழங்காலக் கடல் வாணிக வாழ்வு பற்றிய
பல குறிப்புகளை நாம் பரிபாடல் போன்ற பழந்தமிழ் நூல்களில் காணலாம்.
     சுமெரிலும் ஏலத்திலும் சிந்துவெளிக் குடியேற்றங்கள் இருந்தன. அந்நாகரிகங்களே
சிந்துவெளி நாகரிகத்தின் கிளைகள் என்று பல அறிஞர் கருதுகின்றனர். ஆனால்
சிந்துவெளி மூலமாக மட்டுமன்றி, நேரடியாகவே தென்னாட்டு வாணிகப் பழமை பற்றிய
சான்றுகள் நமக்குக் கிட்டுகின்றன.
     கி.மு. 4000-க்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தில் தென்னாட்டின் மயில்,
யானை, தந்தம், பொன் ஆகிய பொருள்களையும் நாகரிகத் தொடர்பையும்
காண்கிறோம். அதே காலத்துக்குரிய சுமேரியரின் தலைநகரான 'ஊ'ரில்
உத்தரங்களுக்குத் தென்னாட்டுத் தேக்கமரங்கள் வழங்கின. கி.மு. 3000-ல் தென்னாட்டு
வணிகரே
பாபிலோனுக்குத் தம் சரக்குகளை அனுப்பினர். செங்கடல் வாணிகத்தை அராபியர் தம்
கைக்குள் வைத்திருந்ததால், கி.மு.2600 முதல் தென்னாட்டினர் எகிப்தியருக்கு வேண்டிய
மிளகு, திப்பிலி, தேக்கு, குங்கிலியம், தானியங்கள், புலித்தோல், தந்தம், பொன் ஆகிய
சரக்குகளைக் கிழக்காப்பிரிக்கா மூலம் அனுப்பினர். ஆப்பிரிக்காவிலேயே
கட்டடத்துக்குரிய மரங்கள் இருந்தாலும், தென்னாட்டுத் தேக்கே உயர்வாகக்
கருதப்பட்டு உயரிய கட்டடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. தவிர, அவுரியும்
நல்லெண்ணெயும் தென்னாட்டினராலேயே அங்கே வாழ்வில் புகுத்தப்பட்டன. 'பண்டு'
நாட்டிலிருந்தும் *'ஒஃவிர்' என்ற அதன் துறைமுகத்திலிருந்தும் கலங்கள் அடிக்கடி
சென்று வந்தன. 'பண்டு' என்பது தென்னாட்டுப் பாண்டிய நாடு, 'ஒஃவிர்' என்பது
கன்னியா குமரியை அடுத்த உவரி என்ற பண்டைத் துறைமுகம். அது தங்கத்துக்கும்
முத்துக்கும் பேர் போனதாயிருந்தது.
     கீழ்த்திசையில் தமிழர் சீனரிடமிருந்து செவ்வந்திக்கல், பட்டு முதலிய பொருள்கள்
தருவித்தனர். கரும்புப்பயிர்த் தொழிலைச் சீனரிடமிருந்தே பண்டைத் தமிழ்
வேளிர்களுள் ஒருவன் கொண்டு வந்ததாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. ஆனால்
எகிப்துக்குச் செல்லும் சீனரின் சரக்குகள் பெரும்பாலும் நிலவழியாகவே சென்று வந்தன.
கி.மு.2000-ல் ஆரியர் படையெடுப்பால், நில வழிநாடுகளில் சீர்குலைபு ஏற்பட்டது.
அவ்வாணிகம் அதுமுதல் தமிழகக் கடல் வழியாகவே சென்றது. பெரும்பாலும் சரக்குகள்
கீழ்க்கடல் துறைகளில் இறங்கிப் பொதிமாடுகளால் சோழ பாண்டிய நாடுகள் கடந்து
மேல் கடல் துறைகளில் மீண்டும் கப்பலேற்றப்பட்டன.
     பண்டைய உலக வாணிகத்தில் தமிழகத்துக்கு இருந்த சிறப்பை இன்னும்
உலகமொழிகள் காட்டுகின்றன. அரிசி, இஞ்சி, அகில்,சந்தனம், கருவாப்பட்டை, மிளகு,
திப்பிலி ஆகிய சொற்கள் கிட்டத்தட்ட எல்லா உலகமொழிகளிலும், கிரேக்க,
எபிரேய, சமஸ்கிருத மொழிகள் வாயிலாகப் பரந்துள்ளன. குரங்கு, தந்தம், மயில்
ஆகியவற்றுக்கான சொற்களும், கப்பல் என்பதற்கான சொற்களும் (தமிழ் நாவாய்,
சமஸ்கிருதம் கிரேக்கம் நவுஸ்) கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில்
பரவின.
     'சிந்து' என்ற சொல் பாபிலோனிய மொழியில் ஆடையைக் குறித்தது. இது
சிந்துவெளியில் செய்த ஆடையின் பெயராயிருந்தால் கூடத் தமிழகத் தொடர்பையே
சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் நிலவழியாகச் சென்ற சொற்கள் மொழி முதல் 'ச' கரத்தை
இழந்து விடுவது வழக்கம். அறிஞர் பி.டி. சீனிவாச அய்யங்கார் சிந்து என்பது துணி
என்ற பொருளுடைய பழந் திராவிடச் சொல்லே என்று கருதுகிறார். இது தமிழில் கொடி
என்ற பொருளையும் கன்னடதுளு மொழிகளில் துணி என்ற பொருளையும் தருகிறது.
     வேத, ஆரிய, மொழியில் வாணிகச் சொற்கள் மட்டுமின்றி, அணு, அரணி
(காட்டுச்சுள்ளி), கருமாரா (கருமான்), பலம் (பழம்), பீசம் (விதை), மயூரம் (மயில்),
ராத்திரி (இரவு), ரூபம் (உருவம்), மீனம் (மீன்), நீரம் (நீர்), புஷ்பம் (பூ), நானா
(பல=நால்+நால்), காலம், குடி, கணம் முதலிய சொற்களும் தமிழின மொழிகளிலிருந்தசென்று கலந்துள்ளன என்று மொழி நூலார் காட்டுகின்றனர்.
 கி.மு.1000 முதல் 800 வரை வாழ்ந்த *ஹோமர், ஹெஸீயட், பிண்டார் ஆகிய
கிரேக்க கவிஞர் தமிழகச் செல்வத்தைப் புகழ்ந்துள்ளனர். கி.மு. 1000 முதல் 900 வரை
பாலஸ்தீனின் முதலரசராயிருந்த தாவீதும், சாலமனும், தயர் நகரின் ஃவினீசிய
அரசனானஹீரமும், தென்னாட்டு உவரிக்குக் கலங்களை அனுப்பி, முத்து, பொன்,
வெள்ளி, தந்தம், குரங்குகள் ஆகியவற்றைத் தருவித்தனர். சாலமன் சந்தனமும் மயிலமதருவித்தான்.
கி.மு.9-ம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை தென்னாட்டு யானைகள்
அசிரியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. கி.மு.6 முதல் 2-ம் நூற்றாண்டு வரை
பெருக்கமுற்றது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புத்த நூலாகிய பவேருசாதகம்
தென்னாட்டிலிருந்து முதல் முதல், மயில் பாபிலோனுக்குச் சென்றது பற்றிய சுவையான
கதை ஒன்றைக் கூறுகிறது.
     தென்னாட்டு வணிகருடன் வட ஆரியர் கடல் கடந்து வாணிகம் செய்வதை
ஆரிய சுமிருதி வாணரான போதாயனர் கண்டிக்கிறார். கி.மு.4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த
சாணக்கியர் அல்லது கௌடில்யர் தென்னாட்டு வாணிகத்தைச் சிறப்பித்துள்ளார். சிந்து
கங்கைவெளி அந்நாளில் கம்பிளி, தோல், குதிரை ஆகிய மலிவான சரக்கையே
அனுப்பிற்று என்றும்; ஆனால் தென்னாடு முத்து, வைரம், தங்கம் ஆகிய விலையேறிய
பொருள்கள் அனுப்பிற்று என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
     யவனர் தமிழகத்திலிருந்து மிளகு, இஞ்சி, அரிசி, மெல் ஆடை ஆகியவற்றைப்
பெற்றனர். திரைச்சீலை, பாவை விளக்கு முதலிய கலைப் பொருள்களையும்,
கோட்டைகளுக்கான பொறிகளையும், அரசர் பெருமக்களுக்கான புட்டி மதுவையும்
தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். யவனப் பெண்டிர் ஆடர் மகளிராகவும், ஆடவர்
மெய்க்காப்பாளராகவும் கலைஞராகவும் அல்லது காவிரிப்பூம்பட்டினத்திலும் யவனச்
சேரிகள் இருந்ததாகத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன. மேற்குக் கடல் துறைமுகமாகிய
முசிறியில் (கிராங்கனூர்) உரோமக் குடியிருப்பும் கோயிலும் உரோமக் காவல் வீரர்
2000பேரும் இருந்ததாக *பியூட்டிங்கெரியன் பட்டயம் குறிக்கிறது. புதைபொருள்
ஆராய்ச்சியால் புதுச்சேரியிலும் உரோமக் குடியிருப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கமுன்பே இருந்ததாக அறிகிறோம்
 கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி.6-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற
உரோம யவன வாணிகம் கி.மு. முதலாம் நூற்றாண்டில் உச்ச நிலை அடைந்தது.
வாணிக வளர்ச்சி கருதி கி.மு.20 கி.பி. 107, 138, 336 ஆகிய ஆண்டுகளில் பாண்டியன்
உரோமப் பேரரசிடம் அரசியல் தூதர் அனுப்பியதாக அறிகிறோம். கி.மு.20-ல் ஒரு
தூது, மெய்க்காப்பாளர் படைக்கு வீரர் தருவிப்பதற்காக யவனப் படைத் தலைவரிடம்
அனுப்பப்பட்டிருந்தது.
     கிரேக்க உரோமருடன் தமிழகம் நடத்திய வாணிகம் பற்றிய பல விரிவான
குறிப்புகளை டாலமி என்ற எகிப்திய நில நூலாசிரியரும், பிளினி என்ற உரோம
வரலாற்றாசிரியரும் பிறரும் தந்துள்ளனர். உரோம மன்னர், உயர்குடிமக்கள்,
பெண்மணிகள் ஆடை அணி மணி இனப்பொருள்களுக்காகச் செலவு செய்த
பொன்னால், உரோம உலகு வறுமையுற்றும், தமிழகம் வளமுற்றும் வந்தது கண்டு
பிளினி அங்கலாய்த்துக் கொண்டார். ஆண்டுதோறும் சீன, தென்னாடு, அராபியா
ஆகிய நாடுகளுக்கு உரோமர் வாணிகத்துக்காக அனுப்பிய 100 கோடி *செஸ்டாஸ்களில்
பாதி தென்னாட்டுக்குச் சென்றதாக அவர் கணித்தார். இதற்கேற்ப, கிட்டத்தட்ட எல்லாப்
பேரரசர் கால நாணயங்களையும் புதைபொருளாராய்ச்சியாளர் தென்னாட்டில்
ஏராளமாகக் கண்டெடுத்துள்ளனர். உரோம நாட்டில் அடித்த நாணயங்களில்
பெரும்பகுதி தமிழகத்திலேயே வந்து நிலையாகத் தங்கிற்று என்பதை இது காட்டுகிறது.
கீழ்திசைத் தொடர்பு
     கி.மு.6-ஆம் நூற்றாண்டில் இலங்கையின் முதல் அரசனான விசயன், பாண்டியன்
மகளை மணம் புரிந்து கொண்டான். பாண்டிய இளவரசி சென்ற கப்பலில் யானைகள்,
தேர்கள், அரசியற் பணியாளர்கள், பதினெண் தொழிற் குழுக்களுக்குரிய
ஆயிரம் குடிகள், 75 பணிப்பெண்கள், 700 பணியாட்கள் ஆகியோர் சென்றதாக
அறிகிறோம். மன்னரைப் போலவே மக்களும் இரு நாடுகளிலும் மணத்தொடர்பு
கொண்டிருந்தனர்.
     'எலாரா' என்ற சோழ நாட்டுத் தமிழ் வீரன் இலங்கையை வென்று கி.மு.205
முதல் 161 வரை யாவரும் புகழ ஆண்டதாக அறிகிறோம். தமிழ் மரபில் இவன்
ஏலேலசிங்கன் என்று குறிக்கப் படுகிறான். ஏழு கடல் கடந்தாலும் ஏலேலசிங்கன் கப்பல்
திரும்பி வரும், என்ற பழமொழியும், 'ஏலேலோ' என்ற கப்பற் பண்ணும் தமிழரிடையே
அவன் மரபை நினைவூட்டுகின்றன. இவன் திருவள்ளுவரின் மாணவனும் வள்ளலும்
ஆவான் என்று தமிழ் மரபுரை ஒன்று கூறுகிறது.
     ஏலேலசிங்கனைப் பின்பற்றித் தமிழர் பலகால் இலங்கைக் கரையில்
மாந்தோட்டத்தில் இறங்கித் தம் வாள் வலியால் செல்வமும் குடியிருப்புகளும்
அமைத்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் குளங்களும், அவர்கள் வெற்றிகட்கும்
கலைப் பண்புக்கும் சான்றுகளாயுள்ளன.
     கி.மு.44 முதல் 25 வரையில் சில தமிழ் மன்னர் இலங்கையில் ஆண்டனர். ஐந்து
- ஏழாம் நூற்றாண்டுகளில் இருபுறமும் படையெடுப்புகளும் எதிர்ப் படையெடுப்புக்களும்
நிகழ்ந்தன.
     தமிழர் படையெடுப்புக்களும் குடியேற்றங்களும் கிறிஸ்து பிறப்பதற்குப் பல
நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தே அந்தமான், பர்மா, மலாயா, சுமாத்ரா, சாவா, இந்து-சீனா ஆகிய கடல் கடந்த நாடுகளில் பரவின. இவ்வெல்லா நாடுகளிலும் உள்ள பெரிய
கோயில்களும், கல்வெட்டுக்களும் அவற்றின் இலக்கியங்களும், மொழியும், ஊர்ப் பெயர்
குடிப் பெயர்களும், பழக்க வழக்கங்களும், கலைகளும் இத்தொடர்புக்கு இன்றளவும்
சான்று பகர்கின்றன.
     மதுரை என்ற தமிழக நகரின் பெயர் யமுனை ஆற்றங் கரையிலுள்ள ஒரு
பண்டை நகரப் பெயராகவும் சாவக நாட்டில்
56
உள்ள ஒரு தீவின் பெயராகவும் இயங்குகிறது. சாவக நாட்டின் பண்டைக்கால அரசர்
பெயர்களுள் சீர்மாறன் என்ற பாண்டியர் குடிப்பெயர் காணப்படுகின்றது. முற்காலப்
பாண்டியருள் ஒருவனும் பிற்காலப் பல்லவரும் சோழரும், கடல் கடந்த பேரரசுகள்
நிறுவியிருந்தனர்.
     அகச்சான்றாக முச்சங்க மரபால் தெரியவரும் தமிழகத்தின் பழமை, பெருமை
ஆகியவை மேற்கண்ட புறச் சான்றுகளால் வலிமை பெறுகின்றன. தொல்காப்பியம்,
கடைச்சங்க நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் நூல்களில் கடலக
வாழ்வு, வாணிகம், யவனர், சாவகம் ஆகியவைபற்றிய ஏராளமான குறிப்புக்கள் காணக்
கிடக்கின்றன.
     காதலன் காதலியைப் பிரிந்து ஆண்டுக்கணக்காகக் கல்விக்காகவும், கடல் கடந்த
வாணிகத்துக்காகவும், அரசியல் பணிகளுக்காகவும் செல்வதுண்டு என்று தொல்பழந்தமிழ்
நூலான தொல்காப்பியமே எடுத்துக் காட்டுகிறது.
     பாரத இராமாயண காலச் செய்திகளைப் பற்றியும் கி.மு.4-ம் நூற்றாண்டில் கங்கை
வெளியில் ஆண்ட நந்தரைப் பற்றியும், கி.மு. 3-ம் நூற்றாண்டில் சிறிதளவில்
நடைபெற்ற மோரியர் படையெடுப்பைப் பற்றியும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.
     வரலாற்று நோக்குடன் ஆராய்பவர்க்குத் தமிழ் இலக்கியம் ஒப்புயர்வற்ற ஒரு
வரலாற்றுக் கருவூலம் என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன. சோழ பாண்டிய மன்னர்
பலரைப் பற்றியும், பல குறுநில மன்னரைப் பற்றியும் அவை நமக்கு எத்தனையோ
செய்திகள் தருகின்றன. அவற்றுள் ஒரு சிலவே இதுகாறும் காலவரிசைப்
படுத்தப்பட்டுள்ளன. புதிய ஆராய்ச்சிகளாலும், புதிய கல்வெட்டு, பழம்பொருள்,
புதைபொருள் ஆராய்ச்சிகளாலும் இன்னும் பல செய்திகள் விளக்கப்படலாகும்.
 

 

.







கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. sir, excellent, please try to translate it into english, because we (tamils) know about our history but non tamils should know all these facts, then only we can substantiate our past glory and regain our pride because our tamil brahmins are doing role or traitors they have become enemy of our own tamils. what makes them to do so i cannot understand it. Thanks a lot for your hard work sir. i am in chennai. thank you bye sir.

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்