சேரர் வரலாறு

சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அக்கால மக்களின் அக வாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் ஒருவாறு அறிய முடிகின்றது. அரசர், அரசியர், புலவர்கள், மக்கள், அரசுமுறை, போர்முறை, கொடைத்தன்மை, பழக்கவழக்கங்கள், நாடு, எல்லைகள் ஆகியவற்றை உய்த்துணர முடிகின்றது.
சேரர் - சொல்லும் பொருளும்
இராமாயண காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர் களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும் போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.
கிரேக்கத் தூதரான மெகஸ்தனீஸ் என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.
திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும் சொற்களே வழக்கில் வந்தனவாகும்.
அசோகனது கல்வெட்டுகளை நாம் நோக்கும்போது சேர புத்திரர் என்பதைக் கேரளபுத்திரர் என்றே வடமொழி அறிஞர்கள் படித்து வந்துள்ளனர். கல்வெட்டில் உள்ள பிராமிய எழுத்துகள் சேரலபுத்திரர் என்று படிக்கும் வண்ணமும் உள்ளது. அதைப் படித்த அறிஞர்கள் கேரளபுத்திரர் என்றே படித்து வந்ததனால், பிற்கால அறிஞர்களும் கேரளபுத்திரர் என்றே கூறிவந்தனர்.
இதனால் நாம் அறிவதாவது சேரலர் தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலமானது. தமிழ்மொழியானது சிதைந்து மலை யாளமாக மாறிய காலமாயிருக்கலாம். கேரளர் என்னும் சொல்லானது
கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் மாறிற்று என்று உரைக்கத்தக்க வகையில், கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலச் சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் கல்வெட்டுகளில் கேரளாந்தகன்1 என்றே குறிப்பு உள்ளது. இன்றும் தென்னாட்டில் சிலர் தங்களது ஊர்களை வடவரிட்ட பெயராலேயே அழைத்து வருதல் காணலாம். இது வட மொழியின்மீது உள்ள பற்றினால் எழுந்ததே ஆகும். இந்த வகையில் கேரளம் எனும் சொல் வழக்கினையே பெரிதும் விரும்பி வழங்கி வந்தனர்.
நாடும் எல்லைகளும்
சேர மன்னர்களைக் கூறும் முக்கியச் சங்ககால நூல்களை நோக்குவோமானால் நாட்டினது பரப்பும் அதன் எல்லைகளும் குறிக்கப் பெறும். பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு. சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பார்ப்போமாயின் சேர நாட்டில் அடங்கியுள்ள பகுதிகள் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்ற நாடு, மலைநாடு, கொங்கு நாடு, பொறைநாடு, முதலியன ஆகும். இதில் அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, அகப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய இடங்களும் அடங்கும். பல அரசர்கள் வஞ்சியையும், சிலர் மாந்தையையும் தலைமைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் இவ் வஞ்சி நகரைப்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுள்ளது. ‘சேரன் வஞ்சி’ எனும் சிறந்த நூலை எழுதிய சா. கிருட்டினசாமி என்பார் சேர நாட்டில் பெரியாறு என்னும் ஆற்றின் அருகில் உள்ள கரூர்ப்பட்டினமே சேரர்களது வஞ்சிமாநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இதையே திரு கனகசபைப் பிள்ளையவர்களும், திரு. கே. ஜி. சேஷய்யரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கொங்கு நாட்டில் உள்ள கரூர் ஆனிலை என்ற நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் பிற்காலச் சேரர்களே வென்று தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு அதற்குச் ‘சேரர் கொங்கு’ என்ற பெயரும் வழங்கினர். எனவே, சேர நாட்டில் உள்ள கரூர்ப்பட்டினமே சங்கநூல்களில் கூறப்பெரும் வஞ்சிமா நகரம் எனக் கொள்ளவேண்டும். இவர்களது நல்லாட்சியை ஓரளவு உறவுமுறையுடன் தெரிந்துகொள்ள மேற்கூறிய நூல்கள் துணைபுரிகின்றன. அவற்றை ஒரு முறைப்படுத்தித் தெளிவான முறையில் நோக்கினால் அவர்களது வரலாற்றை அறியமுடியும்.பதிற்றுப்பத்து என்னும் நூல் சேரஅரசர்கள் பதின்மரும் அவர் களது உறவுமுறைகளும் தெரிந்துகொள்ள முழுதும் பயன்படுகிறது. இந்தப் பதின்மரின் வரலாற்றை முதலிலும் பின்னர் ஏனைய நூல்களில் காணப்படும் மற்றச் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இதையே சேர அரசர்கள், பிற சேர அரசர்கள், அரசப் புலவர்கள் என்னும் தலைப்புகளின் கீழும் காணலாம்.
பதிற்றுப்பத்து என்பது சங்ககால நூல்களில் ஒன்று. இது ஒரு தொகுப்பு நூல். இதில் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற் றிருந்தன என்பது பதிற்றுப்பத்து என்னும் நூலின் பெயரால் தெரிய வருகிறது. ஒவ்வொரு புலவரும் ஒவ்வோர் அரசனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அந்தப் பாடல்கள் முதற் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் முறையில் எண் குறியீட்டுப் பெயரால் தொகுக்கப் பட்டுள்ளன. இவற்றுள் முதல் பத்தும் பத்தாம் பத்தும் இதுவரை கிடைக்கவில்லை. இடையிலுள்ள எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.
கிடைத்துள்ள இந்த எட்டுப் பத்துகளில் எட்டுப் புலவர்கள் எட்டுச் சேர அரசர்களைப் பாடியுள்ளனர்.
இந்த எட்டுப் பேர்களில் ஐந்துபேர் ஒரு கால்வழியினராகவும், எஞ்சிய மூன்றுபேர் மற்றொரு கால்வழியினராகவும் இருந்தவர்கள் என்னும் உண்மையைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியரின் பதிகக் குறிப்பு வாயிலாக அறிகிறோம்.
பத்துப் புலவர்களின் பாடல்களை ஒன்றுதிரட்டிப் பதிற்றுப் பத்து என்னும் பெயருடன் நூலாக்கிய தொகுப்பாசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. எனினும், அந்தப் புலவரும் சங்க காலத்தவரே ஆவார். இந்தப் பதிற்றுப்பத்து நூலைச் சங்க நூல்களில் இறுதியாகத் தோன்றியவற்றுள் ஒன்று எனச் சிலர் கூறுகின்றனர். எனவே, பதிற்றுப் பத்துச் சேர அரசர்களைப் பற்றி இவர் தரும் பதிகச் செய்திகளை நாம் வரலாற்று உண்மை.
பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்துப் பாடல்களைப்பற்றியும் பதிகம் என்னும் பெயரில் சில தெளிவான உண்மைகளைத் தெரிவிக்கின்றார். இந்தத் தொகுப்பாசிரியர் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் இட்டுள்ளார்; இன்னின்ன சிறப்புப் பெயர் கொண்ட பாடல்கள் இன்னின்னபத்தில் அடங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்தப் பத்துப் பாடல்களையும் பாடிய புலவர் இன்னார் என்பதும், அவரால் பாடப்பட்ட அந்தப் பத்து
இன்ன சேர அரசனைச் சிறப்பித்துக் கூறுகிறது என்பதும், அந்தச் சேர அரசன் இன்னார்க்கு இன்னஉறவுமுறையினன் என்பதும் அவரது பதிகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மற்றும் இந்தப் புலவர் அந்தச் சேர அரசனை இந்தப் பத்துப் பாடியதற்காக இன்ன பரிசுபெற்று இவ்வாறு சிறப்பிக்கப்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அரசன் இத்தனை ஆண்டுகள் அரசனாய் விளங்கினான் என்னும் செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். நாம் இந்தச் செய்திகiள யெல்லாம் வரலாற்று உண்மைகள் என்றே கொள்ளவேண்டும்.
உதியன் கால்வழி
பதிற்றுப்பத்தில் இரண்டு கால்வழியைச் சேர்ந்த அரசர்கள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர் என்று கூறினோம். அவற்றுள் ஒன்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும், அவன் தம்பியையும், ஆண் மக்கள் மூவரையும் கொண்ட ஒரு கால்வழியாகும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்று கூறப்பட்டுள்ளான். இந்த உதியஞ்சேரலுக்கு முன்னோன் என்று சான்றுடன் இவனது கால் வழியில் கூறத்தக்கவர் யாரும் தெரியவில்லை. ஆதலால், இந்தக் கால் வழியை நாம் உதியன் கால்வழி என்று குறிப்பிடலாம். இந்த வகையில் உதியன், உதியன் மகன் நெடுஞ்சேரலாதன், நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன், நெடுஞ்சேரலாதனின் மக்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற முறையில் ஆறு சேர அரசர்களை நாம் அறிய முடிகிறது.
அந்துவன் கால்வழி
மற்றொரு கால்வழி மூன்று அரசர்களைச் சிறப்பித்துப் பாடுகிறது என்று கூறினோம். இந்த மூவருள் முன்னவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவான். இவன் தந்தை அந்துவன் என்று கூறப்படுகிறான். எனவே, இவர்களது கால்வழியை அந்துவன் கால்வழி என்று குறிப் பிடலாம். இந்த வகையில் அந்துவன் கால்வழி அரசர்கள் நான்குபேர்
ஆவர். அந்துவன், அந்துவன் மகன் செல்வக்கடுங்கோ, செல்வக்கடுங் கோவின் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை, மற்றும் குட்டுவன் இரும் பொறை ஆகியோரே அந்த நால்வர். இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறையையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இந்த மாந்தரஞ்சேரல் கால்வழி அரசர்கள் ஐவர் எனக் கொள்ளலாம்.
இந்த ஐந்து அரசர்கள் பெயரிலும் ‘பொறை’ என்னும் அடைமொழி உள்ளது. இதனால் இவர்களைப் `பொறையர்க்குடி அரசர்கள்’ என்று குறிப்பிடுதலும் உண்டு. பொறை அரசர்கள் என்று நோக்கும்போது, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. மாந்தரன் பொறையன் கடுங்கோ முதலான அரசர்களையும் ஒன்றுசேர்த்து எண்ணவேண்டும்.
இனி, நாம் மேலே கண்டவாறு உதியன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆறு பேர், அந்துவன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் நான்கு பேர். ஆக மொத்தம் பத்துச் சேர அரசர்களைச் சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காண்கிறோம்.
இந்தப் பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைப் பதிற்றுப்பத்து என்னும் நூலை அடிப்படைச் சான்றாகக்கொண்டு நாம் ஆராயும்போது, புறநானூறு, அகநானூறு முதலான பிற சங்கப் பாடல்களிலிருந்தும், சங்ககாலக் கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவரும் செய்திகளையும் ஆங்காங்கே இணைத்துக் காண்கிறோம். பின்னர், முறையே பிற நூல்களில் காணும் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் காண்போம்.
உதியஞ்சேரல்
உதியஞ்சேரல்1 செங்குட்டுவனின் பாட்டன்.2 வீரமும் கொடையும் இவனது வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.
போர்த்திறன்
‘நாடுகண் அகற்றிய உதியஞ்சேரல்’3 என்று இவன் குறிப்பிடப் படுகின்றான். நாட்டின் பரப்பை விரிவாக்கினான் என்பதே இதன் பொருளாகும். இதனால், இவன் தன் முன்னோரிடமிருந்து நாட்டுப் பகுதி
ஒன்றைப் பெற்றிருந்தான் என்பது தெளிவாகிறது. இவன் முன்னோர் சேர அரசர்களாய் முடியாட்சி புரிந்து வந்தனர் என்பது விளங்குகிறது.
பேய்க்குப் பெருஞ்சோறு
உதியஞ்சேரல் நாட்டின் பரப்பை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். இதனால், அவன் பகைவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டனர். ‘முதியர்’ என்னும் குடியினர் பாண்டியர்க்குப் பகைவர்; சேரருக்கு நண்பர்.4 முதியர் குதிரைப் படையில் சிறந்து விளங்கினர். இந்தக் குடியினரைப் பகைவர்கள் தாக்கினார்கள். முதியர்களில் பலர் மாண்டனர். செய்தி அறிந்த உதியஞ்சேரல் முதியர்களுக்குத் துணை வந்தான். பகைவர்கள் பலர் மாண்டனர். அவர்களின் உடல் குறுகியதும், நெடியதுமாய் வீழ்ந்து பல பேய்கள் கூட்டத்திற்குப் பெருஞ்சோறாய்5 அமைந்தன.
கொடை நலம்
இவனைப் பாடிக்கொண்டு புலவர்கள் பலர் சென்றனர். அவர்களெல்லாம் மனம் மகிழும்படி இவன் கொடை வழங்கினான். இவனை மாமூலனார் ‘உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர்’6 எனவும் ‘தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்’7 எனவும் அவன் கொடை வழங்கிய காட்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
குழுமூர்ச் சோற்றுமடம்
குழுமூர் என்பது ஓர் ஊர். அவ்வூரில் வாழ்ந்தவர்கள் ஆடு மாடு மேய்த்து வாழும் ஆயர்கள். இவ்வூரைச் சூழ்ந்த பகுதியில் ஆங்காங்கே குன்றுகளும் நிழல் தரும் மரங்களும் உண்டு. ஆயர்கள் ஆங்காங்கே அம் மரநிழல்களில் தங்குவர். அதுவே உதியனின் சோற்றுமடமாகும்.8 ‘உதியன் அட்டில்’ என்றும் இது வழங்கப்பட்டது. இதற்குக் கைம்மாறாக இவன் ஆயர்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. இந்த மடத்தில் உணவு உண்ணும் ஒலி, அருவியில் ஒலிக்கும் ஒலியின் எதிரொலிபோல் கேட்டது.
பண்புநலம்
இவன் குற்றமற்ற சொற்களையே பேசுவான்; உண்மையே பேசுவான். ‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந் தீமை இலாத சொலல்’ என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான் என்று கூறலாம்; கொடை வழங்குதலைத் தன் கடமை என எண்ணிச் செய்தான்; கோணாத தன் நெஞ்சு விரும்பியவாறு செய்தான். நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்னும் ஐம்பெரும் பூதங்களின் இயற்கைக் குணங்களாகிய பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளி போல் இவன் தனக்குப் பகைவர் பிழை செய்தபோது அப் பிழையைப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும், அவ்வாற்றலால் அவரை அழித்தலும். அவர் வழிபட்டால் அவருக்குச் செய்யும் அருளும் உடையோனாவான்.9
இசை வேட்கை
இவன் இனிய இசையுடன் முரசுகளை முழக்கி மகிழ்வது உண்டு என்பது ‘இன்னிசை முரசின் உதியஞ்சேரல்’ 10 என்று குறிப்பிடுவதால் தெரிகிறது. இவன் போர் புரியும்போது இயவர்கள் (இசைக் கருவிகள் முழங்குவோர்) ஆம்பலங் குழல்களால் ஊதினார்கள்.11
மனைவி மக்கள்
இவனது மனைவி நல்லினி ஆவாள். இவள் வெளியன்வேள் என்பவனின் மகள் ஆவாள். இவனுக்கும் நல்லினிக்கும் பிறந்த ஆண் மக்கள் இருவராவர். மூத்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; இளையவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆவான்.12
ஒப்புநோக்கம்
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பாரதப்போரில் இருதரத்துப் படை களுக்கும் சோறு வழங்கினான். அவன் வேறு, இவன் வேறு. அவனைப் பற்றிய செய்தியினைப் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம்.
நெடுஞ்சேரலாதன்
சங்ககாலத்தில் சேரலாதன் என்னும் பெயர்கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம்.
நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு முதுகில் காயப்பட்ட தற்காகப் போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர்நீத்தான். சேரவேந்தர்களைச் சிறப்பித்துப் பாடும் பதிற்றுப்பத்து என்னும் நூலில் நெடுஞ்சேரலாதன் இரண்டாம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளான்.
போர்த்திறம்
கடம்பறுத்தல்:அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேர லாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத் தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துணடால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு செய்துகொண்டான்.
கடம்பை வெட்டி வீழ்த்தும்படி நெடுஞ்சேரலாதன் ஏவினான் என்று ஒரு பாடல் கூறுகிறது.5 இவனது மகன் செங்குட்டுவன் கடம்பறுத்தவன்
என்று சிறப்பித்துப் பாராட்டப்படுகிறான். எனவே, நெடுஞ்சேரலாதன் இந்தப் போரில் தானே நேரில் ஈடுபடாமல் தன் மகனை அனுப்பி வெற்றிகொண்டானோ என எண்ண வேண்டியுள்ளது.
அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட் பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப் பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத் தீவுகளில் அதற்கு முனனர் ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்.6 மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப் போரில் ஈடுபட்டான்.7
கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும். இமய மலையில் வில்லைப் பொறித்த செயலும் இணைத்துப் பேசப்படுகின்றன.8 ஓரிடத்தில் செங்குட்டுவனை ‘வாய் வாட்கோதை’ என்று குறிப்பிட்டு, கடம்பு எறிந்ததும் வில் பொறித்ததும் அவனது செயல்கள் என்று கூறப்படுகின்றன.9 ஓரிடத்தில் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் கண்டு வாழ்த்தும் பராசரன் எனும் பார்ப்பான் கடம்பு எறிந்ததும், இமயத்தில் வில்லைப் பொறித்ததுமாகிய செயல்களை அவனது செயல்கள் என்று கூறுவதைக் காண்கிறோம்.10

6. பதிற். 20 : 3 முரணியோர்
7. காவல் மரத்தின் அடிப்படையில் குடிமக்களுக்குப் பெயர் அமைந்தமைக்கான சான்றுகள் இல்லை. பாண்டியர் காவல் மரம் வேம்பு. அவர்களை வேம்பர் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. இவ்வாறே புன்னை, அத்தி, பனை முதலான மரங்களைக் காவல் மரமாக உடைய நாட்டு மக்களும், அவ்வகை மரப் பெயரால் அழைக்கப்படுவதில்லை. ‘கடம்பர்’ என்னும் சொல் நமக்கு யாண்டும் ஆட்சியில் இல்லை. தக்கணத்தில் இருந்த கதம்பர் வேறு. அரபிக் கடல் தீவுகளில் கடப்ப மரத்தைக் காவல் மரமாகக் கெண்டிருந்த அரசு வேறு. பாடல்களில் கடம்ப வெட்டப்பட்டது என்று மட்டுமே உள்ளது. அறிஞர்கள் கடம்பர்களை ஓட்டினான் என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் கடற்கொள்ளைக்காரர்கள் என்றும், மேலைநாட்டு வாணிகக் கப்பல்களை வழிப்பறி செய்து வந்தனர் என்றும், வழிப்பறியைத் தடுக்கும் முயற்சியில் நெடுஞ்சேரலாதன் இப்போரில் ஈடுபட்டு வெற்றிபெற்றான் என்றும் கூறுகின்றனர். இவற்றிற்குச் சான்றுகள் இல்லை. ஆய்வுக்குரியன
இவற்றிற்கு மாறாகக் கடம்பு எறிந்த அரசன் கண்ணகிக்குக் கல்நாட்டு விழா நடைபெற்றபோது உயிருடன் இல்லை என்று குறிப்பிடுவதையும் காண்கிறோம்.11
ஓரிடத்தில் யவனரைப் பிணித்தவன் என்றும். பாரதப் போரில் சோறு வழங்கியவன் என்றும், கடம்பறுத்தவன் என்றும் மூன்று வரிப் பாடல்கள் சேரனை வாழ்த்துதல் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்துள்ளன.12 இச் செய்தியைப் பொதுப்படையாகக் குறிப்பிடும் இடமும் உண்டு.13
இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பார்க்கும்போது கடம்பு எறிந்தவன் நெடுஞ்சேரலாதன் என்பதையும், அவனது அச் செயல்களுக்கு உறுதுணையாகச் செங்குட்டுவனும், மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் இருந்தார்கள் என்பதையும் நாம் அறிகிறோம்.
வன்சொல் யவனர் பிணித்தல்
கடம்பு தடிந்த போர்ச்செய்தி, நெடுஞ்சேரலாதனைச் சிறப்பிக்கும் பதிகத்தில் கூறப்படவில்லை. பதிகத்தில் யவனரைப் பிணித்ததாகக் கூறப்படும் செய்தி, பாடல்களில் கூறப்படவில்லை. எனவே, கடம்பு தடிந்தது போரின் விளைவே. ‘வன்சொல் யவனர்’14 என்று குறிப்பிடப் பட்டுள்ளவர் கடம்பு தடிந்த போரில் பிடிபட்ட போர்க் கைதிகள் எனலாம். இந்தப் போர்க் கைதிகளைப் பிணித்துக்கொண்டு வரும் போது அவர்களுடைய கைகளைப் பின்புறத்தில் சேர்த்துக்கட்டியும், தலையில் நெய்யை ஊற்றியும் அழைத்து வந்தனர். போர்க் கைதிகளை இவ்வாறு அழைத்துவருவது கிரேக்கர் மரபு. நெடுஞ்சேரலாதன் சார்பில் அழைத்து வந்த செங்குட்டுவன் பகைவரின் மரபுக்கு மதிப்பளித்து அழைத்து வந்தான்.15
.
பிணிக்கப்பட்ட யவனர்கள் யார் என்பதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. மேலைநாட்டுக் கடல் வாணிகராகிய யவனர்கள் என்று சிலரும், வடநாட்டில் வாழ்ந்த சாக யவனர் என்று சிலரும் கருதுகின்றனர். சாக யவனரின் கூட்டத்தார் என்று கூறும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வெளிநாட்டுச் செலாவணியில் நாட்டின் பொருளியலை வளப்படுத்திய மேலைநாட்டு வாணிகக் குழுவினராகிய யவனரைப் பிணித்தான் என்பது பொருந்தாது என்கிறார். வடநாட்டு யவனர் வடுகரைப் போன்றும். ஆரியரைப் போன்றும் நேரே தமிழகத்தில் ஊடுருவாமல் அரபிக்கடல் தீவுகளுக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பது மறுசாரார் கருத்து. இந்தக் கருத்துகள் உய்த்துணரப்பட்டவையாகத் தென்படுகின்றன.
யவனர் யாவர் என்பதை, கிடைக்கும் அடிப்படைச் சான்றுகளை வைத்துக்கொண்டு தீர்மானிப்பதே நல்லது. யவனரின் பாவை விளக்கு,16 அன்ன விளக்கு,17 கட்குடம்18 ஆகியவை சிறப்பு மிக்க பொருள்கள் எனப் பேசப்படுகின்றன. யவனரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றதையும் நாம் காண்கிறோம்.19 இதனால் இவர்கள் பிற நாட்டிலிருந்து கடல் கடந்து வந்த வாணிகர்கள் என்பது தெளிவாகிறது. இவர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின்பொருட்டு வந்திருந்து தங்கியிருந்ததையும் நாம் காண்கிறோம்.20 மதுரை நகரில் யவனர்கள் வாளைக் கையில் ஏந்திக்கொண்டு கோட்டை வாயிலில் காவல்புரிந்து வந்ததைக் காணும்பொழுது.21 யவனர்கள் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்தனர் என்பதை அறிகின்றோம். இவ்வாறு தங்கியவர்களில் புகார் நகரில் தங்கியவர் மாடமாளிகைகளில் வாழ்ந்ததையும், மதுரையில் தங்கியவர் கோட்டையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததையும் நாம் பார்க்கிறோம்.
சேர அரசன் ஒருவன் யவனர்களின் வளநாட்டை ஆண்டான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.22 இந்த அரசன் இந்த யவனர் நாட்டுடன் தென்குமரி, இமயம் ஆகிய எல்லைக்குட்பட்ட நாட்டையும் ஆண்டான் என்று அங்குக் கூறப்பட்டுள்ளது. யவனர் நாடு தென்குமரி,
இமயம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டதென்பது விளங்காத காரணத்தால் அந்தச் சேர அரசன் ஆண்ட யவனர் நாட்டையும் இதனுடன் இணைத்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த யவனர் நாடு எது?
மேலே கூறியபடி தென்குமரி, இமயம் இவ்விரு எல்லைக் குட்பட்ட நாட்டை ஆண்ட சேர அரசன் நெடுஞ்சேரலாதன்.23 இவன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வீழ்த்தினான். கடப்ப மரம் மேற்குக் கடற்கரையை அடுத்த தீவுகளில் 24 இருந்த காவல் மரம். இந்தக் காவல் மரத்தை உடையவர்கள் அந்தத் தீவு மக்கள். மேலை நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியே கலம் செலுத்தி வாணிகம் செய்துவந்த யவனர்கள் இந்த இலக்கத் தீவுகளில் தங்கினார்கள். அங்கிருந்த மக்களைத் தம் வாணிகத்திற்குத் துணையாகக் கொண்டனர்.
சேர நாட்டில் இவர்கள் செய்துவந்த வாணிகத்தில் ஏதோ ஒரு வகையில் தவறு நேர்ந்திருக்கலாம். அந்தத் தவற்றுக்குக் கடம்புத் தீவுகளிலிருந்த மக்களும் உடந்தையாயிருந்திருக்கலாம். அரசன், தவற்றினைத் திருத்த அவர்களோடு போரிடவேண்டியதாயிற்று. இந்தப் போரின் விளைவுதான் காவல் மரமாகிய கடப்பமரம் வெட்டியதும். அதனால் முரசு செய்துகொண்டதும், யவனரைக் கைது செய்து கொண்டு வந்ததும், பிறகு அவர்களது செல்வத்தைச் சேரநாட்டு மக்களுக்கு வழங்கியதும் ஆகிய நிகழ்ச்சிகளாகும்.
இமயம் வரை வெற்றி
நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர்குடிச் சின்ன மாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப் பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த மன்னர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ணவேண்டியுள்ளது.
குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி இவனது
வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகையால், குமட்டூர்க் கண்ணனார் பாடலில் இடம்பெறாவிட்டாலும் சேர்க்கப்படவேண்டும் என்னும் கருத்து உடையவராய்ப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் தம் பதிகத்தில் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் யவனரைப் பிணித்த நிகழ்ச்சியை இமயத்தில் வில் பொறித்த நிகழ்ச்சிபோல் அல்லாது பாடல் பாடப்பட்ட காலத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சி என்றாலும் நெடுஞ்சேரலாதன் காலத்து நிகழ்ந்தது என்று கூறினோம். அதற்கு முதன்மைக் காரணமாவது கடம்பறுத்த முக்கிய நிகழ்ச்சியானது பதிகத்தில் விடுபட்டபோதிலும் பதிகத்தில் காணப்படும் யவனரைப் பிணித்ததாகிய தொடர்நிகழ்ச்சியில் வேறுவகையில் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது என்று கொண்டதே ஆகும்.
இமயம் நோக்கிச் சென்றபோதும், அங்கிருந்து தன் நாட்டை நோக்கி மீண்டபோதும் நெடுஞ்சேரலாதன் பல மன்னர்களை வென்றான். இந்த வெற்றிகளில் ஆரியரை அடிபணியும்படி செய்த செயல் பதிகத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றிச் செய்திகள் பதிற்றுப்பத்துப் பாடல்களிலும்25 கூறப்பட்டுள்ளன.
இவனது வடநாட்டுப் போரில் பல அரசர்களை வென்றான்; ஆயினும் அவர்களது நாடுகளைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இதனைச் சமுத்திரகுப்தனின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு ஒப்புமையாகக் காட்டலாம். இமயம் சென்ற வழியில் சிலர் நெடுஞ்சேரலாதனைவிட அவர்களது அரசர்கள் மேம்பட்டவர் எனப் புகழ்ந்து கூறினர்.26 அவர்களது பேராற்றல் அழியும்படி வென்றான். இவ்வாறு புகழ்ந்து கூறியதால் பேராற்றல் அழிக்கப்பட்டவரே ஆரியர். இவனது இமயப் படையெழுச்சி வடநாட்டு அரசர்களின் வரலாற்றில் எங்கும் காணப்படாமைக்கு இதுவே காரணமாகும்.
இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று கூறும் பதிகம் அப் பகுதிகளில் தமிழகத்தின் பெயர் விளங்கும்படி தன் கோலை நிலை நாட்டினான் என்றும் கூறுகிறது.27 கோலை நிலைநாட்டினான் என்றால் ஆட்சியை நிலைநாட்டினான் என்பது பொருள். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆட்சியை நிலைநாட்டுதல் என்பது அரசாளுதலை
மட்டும் குறிக்கும் சொல் அன்று. பிறர் பணிந்து கொடுத்துப் பின்னர் மீண்டாலும் திறை தந்த நாடு. திறைபெற்ற மன்னனின் ஆட்சிக்குக்கீழ் இருந்ததாகவே கருதப்படும்.28
இந்த வகையில் நெடுஞ்சேரலாதன் இமயமலைப் பகுதியில் ஆட்சியை நிலைநாட்டினான் என்று பதிகம் கூறுவதாவது, இமயம் முதல் குமரிவரை வென்றான் 29 என்று பொருளாகும். எல்லை காண முடியாத அளவுக்கு இவன் நாடு விரிந்தது 30 என்ற பாடற் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மைகளேயாகும்.
நெடுஞ்சேரலாதனின் போர்முறைச் செய்திகள்
‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’ 31 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’ 32 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.
இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;33 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;34 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.35 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந் தான்.36 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.37 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.38 படைகளைத் தழுவிச் செல்லும் முறையில் படையின் கவசமாக விளங்கினான்.39 வெற்றிக்கொடி நாட்டும் படையை ஏராகக் கொண்டு இவன் பகைவர்களாகிய நிலத்தை உழுபவன்.40 இவ்வகைச் செய்திகள்
எல்லாம் இவனது படைஎழுச்சி நிலையைக் காட்டுகின்றன. படையில் இருந்த இயவர்கள், உலகமெல்லாம் பாதுகாப்புக்காக இவனுடைய குடை நிழலின் கீழ் வரவேண்டும் என்று கூறி வெற்றி முரசினை முழக்கினர்.41
இவன் படையெடுத்துச் சென்றபோது கூளியர்கள் காட்டுப் பாதைகளில் படைசெல்ல வழி அமைத்துக் கொடுத்தனர். இதற்கு மாறாக நெடுஞ்சேரலாதன் வெற்றிபெற்ற நாடுகளில் உணவுப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டனர். வயவர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு ஏந்திச் சென்றனர். முரசு முழக்குவோர் குருதிபாயும் போர்க்களத்தைக் காணும் விருப்பத்தோடு செந்தினையில் குருதியைக் கலந்து தூவிப் போர் முரசை முழக்கினர். இவனது படையினர் போருக்கெழுந்த நாள் முதல் போர் முடியும் நாள் வரை தம் போர் உடைகளைக் களைந்ததே இல்லை.42 இவ்வாறு இவனது படையெடுப்பு நிகழ்ந்தது.
நெடுஞ்சேரலாதன் தன் போர்ப் பாசறையில் நீண்டநாள் தங்கினான்,43 ஓர் ஆண்டுக்குமேல் தொடர்ச்சியாகத் தங்கியதும் உண்டு.44
போரில் இவன் பகைவர்களது மதில்களையும் கதவுகளையும் அழித்தான்;45 அவர்களது ஊர்களைத் தீக்கிரையாக்கினான்.46 வளமுடன் விளங்கிய பகைவரது நாடுகளும் இவனை எதிர்த்தமையால் அழிந்து தம் பொலிவை இழந்துபோயின.47 அரிமாக்கள் நடமாடும் இடங்களில் பிற விலங்குகள் தலைகாட்டாமைபோல நெடுஞ்சேரலாதன் தோன்றிய நாடுகளில் மன்னர்கள் ஒடுங்கினர்.48
தும்பைப் பகைவரை வெல்லுதல்
வடநாட்டில் இவனை எதிர்த்துத் தாக்கும் மன்னர்கள் இல்லை என்று கூறினோம். தமிழ் நாட்டில் இத்கைய நிலை இல்லை. இவன் போர் தொடுக்காமல் இருந்தபோதே இவனைச் சில அரசர்கள் இவனது நாட்டை அடையக் கருதிப் போர்தொடுத்தனர்.49 அவர்களை எதிர்த்துப் போரிட்டு நெடுஞ்சேரலாதன் அழித்தான்.50 இது தற்காப்புப்  thoturao




கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. சேஅரசர்கள் கேரளத்தான் ஆனது நல்ல விளக்கம்.
    பதிற்றுப்பத்து சேர அரசர்கள் தமிழர் என்று விளக்கியது அருமை.
    நன்றி.ர

    பதிலளிநீக்கு
  2. Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
    Find Harrah's 세종특별자치 출장샵 Cherokee Casino & Hotel, Cherokee and 여주 출장샵 Save BIG 계룡 출장안마 on Your Next Stay! Compare 이천 출장안마 Reviews, Photos, & Availability w/ Travelocity. Start Saving 전주 출장안마 Today!

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்