2100 ஆண்டுகள் பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு.




2100 ஆண்டுகள்
பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு.


கோவை மாவட்டம் வெள்ளலூரில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று
ஆய்வு மையத்தை சேர்ந்த தூரன்சுவேலுச்சாமி, புலவர் கணேசன் ,
க.பொன்னுச்சாமி , செ.ரா.ரவிச்சந்திரன், சு.சதாசிவம் , ச.ரஞ்சித் மற்றும்
பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் நடத்திய மேற்ப்பரப்பு ஆய்வில் 2100
ஆண்டுகள் பழைமையான ரோமன் காசு ஒன்றும் , 1700ஆண்டுகள் பழைமையான ரோமன்
காசுகள்ஐந்தும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இதைப்பற்றி ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது,

கொங்கு நாடு மலைகளும், காடுகளும்நிறைந்த நாடு. பாலக்காட்டுக் கணவாய்
கொங்கு நாட்டு வரலாற்றை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியது.40கி.மீ
தொலைவு பரந்து கிடக்கும் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து பலபெரு வழிகள்
தமிழகத்தின் பிற பகுதிகளுக்குச் சென்றன. ஒரு பெருவழி மதுக்கரை,
வெள்ளலூர், சூலூர், காங்கேயம், கருவூர், குளித்தலை, உறையூர் வழியாகப்
பூம்புகாரைச்சென்றடைந்தது. இதற்க்கு இக்கால கல்வெட்டில் கொங்குப்பெருவழி
என்று பெயர். இந்தப்பெருவழிகள் சங்ககாலத் தொட்டு வழக்கத்திலிருந்தவைதான்
என்பதற்கு இப்பெரு வழிகளில் கிடைக்கும் ரோமானியக் காசுகளும், கைவினைப்
பொருட்களும் சான்று. வெள்ளலூரில் ரோமனியக்காசுகள் மட்டுமன்றிஅவர்கள்
விட்டுச்சென்ற அணிகலன்களும் கிடைத்துள்ளன.மேலைக் கடற்கரைப்
பட்டினங்களுக்கு வந்த யவன வணிகர்கள் பாலக்காட்டுக் கணவாய் வழியாகக்
கொங்கு நாட்டின் ஊடே பயணம் செய்து தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள
நகரங்களுக்குச் சென்றனர். யவனர் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்கள்
முழுவதும் விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக அகநானுற்றுப் பாடல் எண்
–149இல்

சேரலர் சுள்ளி-அம் பேரியாற்றுவெண் றுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்,
பொன்னொடுவந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு-எழ வளை-இ

என்னும் பாடலில், பேரியாறு சேர அரசருக்கு உரித்தானது என்றும் அவ்வழகிய
யாற்றினது வெண்ணிற நுரை சிதறுமாறு தொழில் மாட்சிமைப்பட்ட யவனர்கள் கொண்டு
வந்த நல்ல மரக்கலம் பொன்னைக்கொண்டுவந்து விலையாகக் கொடுத்துவிட்டு மிளகை
ஏற்றிச்செல்லும் இத்தகைய வளம் பொருந்திய முசிறிப் பட்டினத்தைப்பற்றிக்
கூறுகிறது.

முசிறி-அலெக்ஸாண்டிரியா வணிக ஒப்பந்தம்,
ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள
அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி பேரியாற்று முகத்துவாரத்தில்
அமைந்துள்ள சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன்
ஒருவனுக்கும், எகிப்து நாட்டின் நைல் நதி ஆற்றின் முகத்துவாரத்தில்
அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா எனப்படும் ரோம நாட்டுத் துறைமுகத்தில்
வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டின்
இடைப்பகுதியில் (கி.பி.15௦0) ஏற்ப்படுதிக் கொள்ளப்பட்ட வணிகஒப்பந்தத்தை
விவரிக்கிறது. இச்சுவடி கிரேக்க மொழியில் இரண்டு ஆவணமாக இருபுறம்
\எழுதப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சார்ந்த வணிகன்
கையெழுத்திட்டுள்ளதால் அவ்வணிகன் கிரேக்க மொழியை அறிந்திருக்க வேண்டும்.
இதில் உள்ள முதல் ஆவணத்தின்படி கப்பலின் சொந்தக்காரர்
ஏற்றுமதிப்பொருட்கள்அலெக்ஸாண்டிரியாவை அடையும் வரை வணிகனின் முத்திரையைப்
பயன்படுத்திக்கொள்ளும் உரிமையைப் பெறுகிறார். இதில் உள்ள இரண்டாவது ஆவணம்
செங்கடலில் அமைந்துள்ள பெர்னிகே அல்லது மயோஸ் கார்மோஸ்(


MyosHarmos) என்ற
துறைமுகப்பகுதியில் ஏற்ப்படுதப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆவணம்
ஏற்றுமதிப்பொருட்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நைல் நதி
முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரை அடைவது வரை
ஏற்றுமதிப்பொருட்களுக்கு அளிக்கப்படவேண்டிய பாதுகாப்பு குறித்து
முன்பக்கத்திலும் அப்பொருட்களின் அளவு குறித்து பின்பக்கத்திலும்
எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு வாணிபத்திற்காக வணிகர்கள் பயன்படுத்திய
ரோமனியக்காசுகள்தான்இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ளன.
நமக்குக்கிடைத்துள்ள முதல் காசு  ரோமனியப்பேரரசர் லுசியல் கார்னிலியஸ்
சுல்லா கி.மு.82இல் வெளியிட்ட வெள்ளியாலான டேனாரியஸ் (காசு) ஆகும்.
இதில்ஒரு பக்கத்தில் செங்கதிர்க்கடவுளான ஜுபிடர்நான்கு புரவிகள் பூட்டிய
தேரில் பவனி வருகிறார். இன்னொரு பக்கத்தில் உள்ள அப்பலோ (கவிதைக்கும்
இசைக்கும் உரிய கடவுள்) கருங்காலி மரத்தாலான ஒரு மாலை அணிந்துள்ளார்.
அவர்கழுத்துக்குக் கீழ்வலுவான இடியுடன் கூடிய மின்னல் ஒளிர்கின்றது.
இது1:16௦கிராம்எடை கொண்டது.2௦ மி.மீ ஆரம் உடையது.

காசுகள்2,3,மற்றும் 4 சால்வசிரே பெலிக்கே குடியரசின் தியோடோசியஸ்,
தியோடோசியஸ்I, வேலண்ட்டினியன்II , ஆர்க்கேடியஸ் மற்றும் ஹானரோயஸ்’னால்
கி.பி.383முதல் கி.பி.408வரை பல காலகட்டங்களில் வெளியிடப்பட்ட
செப்புக்காசுகள் ஆகும். இதன் உள் பொதிந்த பொருள் குடியரசின் பாதுகாப்பு
என்பதாகும்.மறுபக்கம் உள்ள செய்தி வெற்றியை நோக்கி முன்னேறுதல்
என்பதாகும். இடது கையால் ஓர் அடிமையை இழுத்துச்செல்லுதலும், இடப்பக்கப்
பகுதியில் ஒரு சிலுவையும் இடம் பெற்றுள்ளது.

காசு 5 தியோடோசியஸ் IIவால் கி.பி.402முதல்450 வரையிலும் மார்சியன்னால்
கி.பி450 முதல் 457வரையிலும் வெளியிடப்பட்ட செம்புக்காசு ஆகும்.
இது1.௦2௦கிராம்எடை கொண்டது. இதுஒற்றைத் தலைப்பு எழுத்துடன் அரிமாவின்
பதுங்கிப்பாயும் நிலையில் உள்ளது. இதில் இரண்டும் – இரண்டுக்கும்
மேற்ப்பட்ட நேர்த்தியான அழகு வாய்ந்த எழுத்துக்கள் அச்சுக்கோர்த்தது போல
உள்ளே பொறிக்கப்பட்டுள்ளன. ரோமானியப்பேரரசுவெளியிட்ட இத்தகைய
ஒற்றைத்தலைப்புடன் கூடிய காசுகள் பேரரசின் முத்திரைசின்னங்களுடன்
பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி.6 ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும்
முதன்மையானதான இவ்வுருவே நீடித்தது. இவை கிழக்கத்திய நாணயச் சாலைகளில்
வார்க்கப்பட்டன.

காசு6 கானிஸ்ட்டன்டியஸ் IIவால் கி.பி324 முதல்கி.பி337 வரை வெளியிடப்பட்ட
செம்புக்காசு ஆகும். இது1. 41௦கிராம்எடை கொண்டது. மேலும் இவ்வகை காசுகள்
கானிஸ்ட்டன்ஸ் , கிரேட்டியன், தியோடோசியஸ்I , வாலண்ட்டினியன் I , II,
மற்றும் ஆர்க்கேடியஸ் ஆகியோரால் கி.பி378 முதல்383 வரையிலும்
வெளியிடப்பட்டன.

இதன் மூலம் தமிழகத்தின் மேற்க்குக்கடற்க்கரையில் இருந்து கிழக்குக்
கடற்க்கரை வரை பல நகரங்கள் வெளிநாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்ததை
அறிய முடிகிறது. மேலும் இத் தமிழ் வணிகர்கள் தமிழ் மொழியுடன் கிரேக்கம் ,
லத்தின் , ஹீப்ரு , அராமிக், சீனம், போன்ற பல மொழிகள் பயின்று வலம்
வந்ததை அறிய முடிகிறது. இவ்வாணிகம் மூலம் வெள்ளலூர் தலைமை சான்ற ஊரக
எழுச்சி பெற்று இருத்ததும் தெரிய வருகிறது என்றார்.

இதைப்பற்றி உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரும் , தமிழகத்
தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனருமான முனைவர்
ர.பூங்குன்றனாரிடம் கருத்துக் கேட்ட போது அவர் பாலக்காட்டுக் கணவாயின்
அருகிலிருக்கும் பலஊர்களில் வாழ்ந்த வீரர்களின் தலைவர்கள் வேளிராக
எழுச்சி பெற்றனர். அவர்கள் பல குடிகளை உள்ளடக்கிய அமைப்பிற்குத்
தலைவர்களாக விளங்கியவர்கள். கொங்கு நாட்டில் வாணிக வளம் பெற்ற நகரங்களில்
தங்கி ஆண்டனர். எனவே வெள்ளலூர்ரில் வேளிர் ஆட்சி செய்ததால் வேளிலூர்
(வேள்+இல்+ஊர்) என்று அழைக்கப்பட்டடுப் பின்னர் வெள்ளலூர் ஆனது.
வாணிகத்தில் மேற்கையும் – கிழக்கையும்  இணைத்த அலெக்ஸாண்டிரியாவை ஜூலியஸ்
சீசர் தம்ஆதிக்கத்தில் கொண்டு வந்த பின் கொங்கு நாட்டுப்பெருவழிகளில்
யவனர் பயணம் செய்தனர். இங்கு 15௦௦00 உரோமானியக் காசுகள் புதையல்களாகக்
கிடைத்துள்ளன. இவை ரோமானியர்கள் வேளிர்களுக்குத் திரையாக அல்லது
காணிக்கையாகக் கொடுத்தவை ஆகலாம். இப்போது கிடைத்துள்ள நாணயங்கள் ரோமானிய
வணிகர்கள் அன்றாடப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தியவை ஆகும். வெள்ளலூரில்
கிடைக்கும் தொல்பொருட்கள் அனைத்தும் அவ்வூர் யவன உலகத்துடன் கி.மு2
ஆம்நூற்றாண்டு முதல் கி.பி6 ஆம் நூற்றாண்டு வரை நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்தது என்பதை வலியுறுத்தும் என்றார்.






கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. அருமையானப் பதிவிது! நாணயங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதற்குரிய காலம் முதலானத் தகவல்களைத் தந்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்