புலி, வில், கயல் சின்னங்கள் இமயமலையில் இல்லை



தொல்லியல் ஆய்வாளர் ர. பூங்குன்றன்
சங்கப் பாடல்களில் பல தொன்மங்கள் கூறப் பெற்றுள்ளன. வேளிர் பற்றிய தொன்மம், துங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் பற்றிய தொன்மம், புறாவைக் காப்பாற்றிய சிபியைப் பற்றிய தொன்மம் எனப் பல தொன்மங்கள் பரவலாகப் பேசப் பெற்றுள்ளன. இந்தத் தொன்மங்களைப் போலவே இமயமலையில் புலி, வில், கயல் பொறிக்கப்பட்டன என்பதும் ஒரு தொன்மமே. தொன்மங்கள் என்பவை உண்மை அல்ல.
1936-இல் கே.என். சிவராஜப் பிள்ளை இமயம் என்பதைப் பனி என்று எடுத்துக் கொண்டு, தமிழகத்திற்கு வடக்கே இருந்த ஏதோ ஒரு மலையில் இந்தப் பொறிப்பு நடந்திருக்கலாம், அது இமயம் அல்ல என்று கருத்துத் தெரிவித்தார்.
இன்னும் பல அறிஞர்கள் இதேபோல மறுத்துள்ளனர். சங்க இலக்கியத்தில் கூறப்பெறும் இத்தகைய கதைகளை வரலாறாகப் போற்றும் மரபு இன்றுவரை நடந்து வருகின்றது என்பது உண்மையே. தொன்மங்கள் வரலாறுகள் அல்ல. அவை தாம் தோன்றிய காலத்துச் சமூகத்தின் உணர்வுகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பவை.
இன்று தொன்மங்களை அறிவியல் நிலையில் ஆய்வுசெய்து பல அரிய முடிவுகளை வெளிக் கொணர்ந்துள்ளனர். சங்க இலக்கியங்கள் கூறும் தொன்மங்களை, அறிவியல் நிலையில் வைத்து ஆய்வு செய்யும் நிலை தொடங்கியுள்ளது. இது வரவேற்கத் தக்கது. நாவலந்தீவின் வடஎல்லை இமயமலை. அந்த எல்லை வரை ஆண்ட முதல் மன்னன் அசோகன் இன்று லடாக் என்று அழைக்கப்படுகின்ற பகுதி வரை அவன் ஆட்சி பரவியிருந்தது. பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மன் திபேத் வரை படை நடத்தினான் என்று சீன வரலாற்றுக் குறிப்புகள் சான்றளிக்கின்றன.
சங்கப் பாடல்களில் புறம் 58&ஆம் பாட்டில் புலி, கயல் பொறித்தமை பற்றிக் கூறுவதைக் காணலாம். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகியோரைப் புகழ்ந்து பாடிய புறப்பாட்டில் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் மேலே கூறிய செய்தியைக் குறிப்பிடுகிறார். புலியும் கயலும் பிறர் ஆளும் நாடுகளில் உள்ள மலை உச்சிகளில் பொறிக்கும் அளவிற்கு, வெற்றி பெறும் வீரராகிடுக என்று வாழ்த்துகிறார். இமயமலையில் புலியையும் கயலையும் பொறித்துவிட்டதாகக் கூறவில்லை என்பதைப் பாடலடிகளால் படியுங்கள் :

இன்றேபோல்க நும்புணர்ச்சி வென்றுவென்று / அடுகளத்து உயர்க நும்வேலே; கொடுவரிக் / கோள்மாக்குயின்ற சேண்விளங்கு தொடுபொறி / நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த / குடுமியஆக பிறர் குன்றுகெழு நாடே (புறம் : 58 : 28&32).
பிறநாட்டில் உள்ள குன்றுகளில் புலி, கயல் ஆகியவற்றைப் பொறிக்கும் வகையில் வெற்றி பெறுக என்றுதான் இந்தப் பாடலில் புலவர் பாடியுள்ளாரே ஒ-ழிய, இமயத்தில் புலி, கயல் ஆகியவற்றைப் பொறித்துவிட்டனர் என்று கூறவில்லை. பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் பற்றிய இரண்டாம் பத்து -& பதிகத்தில்தான் அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து என்று பதிகம் கூறுகிறது. ஆனால் இரண்டாம் பத்து முதல் பாடலில்
கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னம் குமரியோடு ஆயிடை
மன்மீக கூறுநர் மறம்தபக் கடந்தே” (பதிற்று. 11 : 21&25)
புலவர் பாடிய இந்தப் பாடலிலும் இமயத்தில் வில் பொறித்தான் என்று கூறவில்லை என்பது உறுதி. சங்கப் புலவர்கள் தெளிவாகவே இருந்துள்ளார்கள். சங்க காலத்திற்குப் பின் வந்த பாடல்களின் மூலம்தான் இந்தச் செய்தி உருவாக்கப் பெற்றிருக்க வேண்டும். சங்கப் புலவர்கள் செய்திகளைக் கூறும்போது மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை மேலே காட்டிய செய்யுள்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலே காட்டப்பெற்ற சான்றுகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதிப்பட்டாலொழிய, இமயப் பொறிப்புகளை உறுதிப்படுத்த முடியாது. வடநாட்டில் கி.மு. 6&ஆம் நூற்றாண்டிலிருந்து வலிமையான அரசுகள் தோன்றிவிட்டன. மகதப்பேரரசு உருவாகிவிட்டது.
அஜாதசத்ரு லிச்சவிகளை வென்று கங்கையின் வடகரையிலும் தன்னாட்சியைச் செலுத்தினான். லிச்சவிகளை அடக்க நடந்த போர் பற்றிப் புத்தமத நூல்களும், சமண மத நூல்களும் விரிவாகப் பேசுகின்றன. எதிரிகளின் தேர்களை வெட்டி வீழ்த்தும் கருவிகள் பொருத்திய தேர்களை அவன் பயன்படுத்தினான் என்று அந்த நூல்கள் பேசுகின்றன.
அவர்களுக்குப் பின் வந்த நந்தர்கள், லட்சக்கணக்கான படைவீரர்களைப் பெற்றிருந்தார்கள் என்று, அலெக்சாண்டருடன் வந்த வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளார்கள். அதுகண்டு அஞ்சி அலெக்சாண்டர் நாடு திரும்பினான் என்ற கருத்தும் உண்டு. நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்கள் தெற்கே மாஸ்கி வரை ஆட்சி நடத்தினார்கள் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மௌரியர்களுக்குப் பின் சுங்கர்கள், குஷாணர்கள் எனப் பல வலிமையான அரசமரபினர் வடநாட்டை ஆண்டுள்ளனர்.
கி.மு. முதல் நூற்றாண்டுத் தொடங்கி கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை ஆந்திரத்தில் சாதவாகனர் ஆண்டனர். சேதி அரசன் காரவேலன் கல்வெட்டு கி.மு. முதல் நூற்றாண்டில் ஆண்ட அவன் கல்வெட்டில்தான், பாண்டியர் தலைமையிலான தமிழர் கூட்டணியை வென்றேன் என்று கூறிக் கொள்கிறான். அவனுக்கு முன் எந்த அரச மரபினரும் தமிழ் வேந்தர்களுடன் போரிட்ட செய்தி கிடைக்கவில்லை.
சாதவாகனரும்கூட தமிழ் வேந்தர்களுடன் போரிட்டதாகக் கூறிக்கொள்ளவில்லை. சிலப்பதிகாரத்தில் வரும் நூற்றுவக் கண்ணர் சாதவாகனர் என்று கொள்ளப் பெறுகின்றனர். இக்கருத்து ஆய்வுக்குரியது. சதம் என்பது குதிரை என்றும், கர்ணி என்பது காது என்றும், சதகர்ணி என்பது குதிரைக் காது என்று பொருள் கொள்கின்றனர். (கொங்குநாட்டில் முழுக்காதன் என்று கூறுவதுபோல்).
அதனால் இளங்கோ கூறும் நூற்றுவக் கண்ணர் வேறு குடியாகலாம். உண்மையிலேயே இமயத்தில் புலி, வில், கயல் பொறிகளைப் பொறித்தார்கள் என்றால், வடநாட்டில் ஆண்ட மன்னர்களை வென்ற பின்தான் இமயத்தில் பொறித்திருக்க வேண்டும்.
ஆனால், வடநாட்டு நூல்களிலோ அல்லது பொறிப்புகளிலோ மூவேந்தர் அங்கு படையெடுத்துச் சென்றது பற்றிய குறிப்பு இல்லை. மேலும் வடநாட்டு வேந்தர்களுடைய போர் முறைகளும், போர்க் கருவிகளும் உலக அல்லது யவனப் போர் முறைகளையும், போர்க் கருவிகளையும் ஒத்திருந்தன.
அஜாதசத்ரு லிச்சவிகளுடன் நடத்திய போரில் கல் வீசும் எந்திரங்களைப் பயன்படுத்தினான். இந்த எந்திரத்தை ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடித்தார் என்பது கிரேக்க வரலாற்றில் கூறப் பெற்றுள்ளது. (இந்தக் கண்டுபிடிப்பு அஜாத சத்ருக்கு முற்பட்டதா, பிற்பட்டதா என்பது உறுதியான பின்பே கல் வீசும் எந்திரத்தின் பயன்பாடு பற்றிய செய்தியை உறுதிப்படுத்த முடியும்).
எது எப்படி இருந்தபோதிலும் மூவேந்தர் வடநாட்டுப் படையெடுப்புப் பற்றித் தெளிவான சான்று இல்லை என்றே கருத வேண்டும். காரவேலன் கல்வெட்டில் 113 ஆண்டுகளாக நிலைபெற்றிருந்த பாண்டியர் தலைமையிலான தமிழர் கூட்டணியைக் காரவேலன் வென்றான் என்று கூறுவதுகூடக் கற்பனை என்று கொள்ளலாம். அதே கல்வெட்டில் யவனர்களை வென்றதாக காரவேலன் கூறுகிறார்.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரெக் என்ற இடத்தில் இந்தோகிரேக்க மன்னன் மினேண்டார் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. அதுவரையிலும் இந்தோகிரேக்க மன்னர் ஆட்சி பரவியிருந்தது எனலாம். அந்த இந்தோகிரேக்க மன்னர்களை வென்ற செய்தியைத்தான் யவனர்களை வென்றதாகக் காரவேலன் கூறிக் கொள்கிறான்.
இமயத்தில் புலி, வில், கயல் பொறிப்புப் பற்றிக் கூறும் இலக்கியச் செய்திகள் வேறு சான்றுகளால் உறுதிப்படுத்தப் பெற வேண்டும். இலக்கியச் செய்திகளில் உண்மையைக் கண்டறிய கல்வெட்டு, செப்பேடு, அகழ்வுச் சான்று, பிற நாட்டார் குறிப்பு ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளுடன் உரசிப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் துறைகளில் கிடைக்கும் செய்திகளில் இமயத்தில் புலி, வில், கயல் பொறிப்புப் பற்றிச் சான்று கிடைக்கவில்லை. சான்று கிடைக்கும் வரை இந்தப் பொறிப்புப் பற்றிய செய்தி ஒரு புனைவு அல்லது கற்பனை என்றே கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்


  1. வில், புலி, கயல் சின்னம்
    அங்கு-? இல்லை என்று சொல்லுகின்ற தாங்கள்,
    எங்கு எல்லாம் உண்டு என்பதையாவது
    தாங்கள் முதற்கண் தெரிவித்து,
    அதன் பின்னர் தங்களின் இயலாமையைத்
    தெரிவித்து இருக்க வேண்டும்.
    தெரிவிக்காததன் பொருள் என்னவோ?

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்