திருஆவினன் குடி

தமிழ்நாட்டிலுள்ள முருகனது தலங்கள் யாவற்றிலும்
முதன்மையானதும், முருகனது அறுபடை வீடுகளில் சிறப்பானதும்
பழனி ஆகும். பழனி நகரின் தலவரலாற்றுச் சுருக்கம் கீழே
தரப்பட்டுள்ளது.
இன்றைய பழனி நகர்ப்பகுதி சங்க காலத்தில் கொங்கு
நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு நாட்டின்
உட்பிரிவுகளில் திருஆவினன் குடிநாடு அல்லது வையாபுரி நாடு
ஒன்றாகும். ‘ஆவினன் குடி’ என்பது இன்றைய பழனி நகர்ப்
பகுதியாகும். ஆவினர் குடியினைச் சேர்ந்த மன்னர்கள்
இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர். சங்க கால வள்ளல்கள்
ஏழுபேரில் ஓருவரான வையாவிக் கோப்பெரும்பேகன் பழனிப்
பகுதியை ஆட்சி புரிந்தார் என்று கருதப்படுகிறது. கொங்குநாட்டைச்
சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் வென்றபொழுது
பழனிப் பகுதியும் அம்மன்னர்களின் ஆட்சியின்கீழ் வந்தது. மதுரை
நாயக்க அரசு காலத்தில் (கி.பி. 1529-1736) இவ்வரசின் ஒரு
பகுதியாகப் பழனி இருந்தது. மதுரைநாயக்கர் ஆட்சி முறையில்
பல பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அப்பொழுது பழனியும்
பாளையக்காரர் ஆட்சியின் கீழ் வந்தது. பழனி நகரை அடுத்துள்ள
ஆயக்குடியும், விருப்பாச்சியும் இதர முக்கிய பாளையங்களாகும்.
பழனிப்பகுதியின் பாளையக்காரர்கள் ஆந்திராவின்
அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள அகோபிலம் பகுதியிலிருந்து
வந்த தெலுங்குப் பேசும் மக்கள் ஆவர். இவர்கள் மதுரை நாயக்க
அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதருடன் தமிழகத்திற்கு வந்தவர்கள்
என்று கருதப்படுகிறது. மதுரைக் கோட்டையின் ஒரு
கொத்தளத்தைக்
காவல் புரியும் பணியை இவர்கள் பெற்றிருந்தனர்,
பழனி பாளையத்தை முதலில் தோற்றுவித்தவர் ஆயக்குடி
பாளையக்காரர் மரபினரின் உறவினர் ஆவார். ஆயக்குடி பாளையக்காரர்களின் மரபினர், பழனி பாளையக்
காரருடன் திருமண உறவுகொண்டு, அவர்களின் நெருங்கிய
உறவினர்களாக விளங்கினர். பழனி பாளையக்காரர்கள் பழனியிலிருந்து
8 கி.மீ. தொலைவிலுள்ள பாலசமுத்திரத்தில் ஒரு கோட்டை கட்டி
அதைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். இவர்கள் தங்கள்
பெயருடன் ‘சின்னோவையன்’ என்ற குலப்பெயரையும்
பெற்றிருந்தனர். தொடைப்புயச் சின்னோவையன், காக்கிவட
வாடச் சின்னோவையன், கருப்பலச் சின்னோவையன், பெரிய
வடவாடச் சின்னோவையன்,
ஆகியோர் பழனி பாளையக்கார
மரபினரின் முன்னோர்களில் சிலர் ஆவார். கி.பி. 18ஆம்
நூற்றாண்டில் குமார விஜயகிரி வேலச் சின்னோவையன்
என்பவர் பழனி பாளையக்காரராக இருந்தார். இவர் விஜயரங்க
சொக்கநாதர்
(1706-1732) என்ற மதுரை நாயக்க மன்னரின்
சம காலத்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிறந்த கவிஞராக
விளங்கினார். வையாபுரிப் பள்ளு இவர் இயற்றிய நூல்களில்
முக்கிய ஒன்றாகும். இவர் இயற்றிய ‘சமய மாலை’ என்ற
நூலிலிருந்து இவர் பழனி மலைக் கோவிலுக்கு ஆற்றிய
திருப்பணிகள் அறியப்படுகின்றன. கி.பி. 1755இல் ஹைதர் அலி
பாலசமுத்திரக் கோட்டையைத் தாக்கி, அதன் பாளையக்காரரைத்
தண்டனைத் தொகை கட்டுமாறு செய்தார். 1761ஆம் ஆண்டு
ஹைதர் மைசூரின் மன்னரானார். எனவே, மைசூர் மன்னருக்கு
உட்பட்ட பகுதியாகப் பழனி விளங்கிற்று. 1782இல் ஹைதர்
திண்டுக்கல்லை ஆங்கிலேயரிடமிருந்து வென்ற பொழுது
திண்டுக்கல்லின் 26 பாளையங்களில் ஒன்றாகப் பழனி
விளங்கியது. ஹைதரின் மகன் திப்பு மூன்றாவது மைசூர்ப்
போரில் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்ற பின் ஏற்பட்ட
ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கையின்படி,
(கி.பி. 1792) பழனி,
திண்டுக்கல்லுடன் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
ஆட்சியில் வந்தது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
ஆட்சியில் பழனி வந்த பின், பழனி பாளையக்காரரான
வேலாயுத நாயக்கர்,
ஆங்கிலேயருக்குத் துன்பம் கொடுத்து
வந்தார். 1794ஆம் ஆண்டு இவர் ஆயக்குடி பாளையக்காரருடன்
சண்டையிடவும் செய்தார். 1795இல் ஆயக்குடிபாளையம், பழனி
பாளையத்திலிருந்து பிரிக்கப்
பட்டபொழுது இவர் கலகம் செய்தார். இவரது கலகத்திற்காக,
ஆங்கிலேயர்கள் இவரது ஜமீனை 1796-இல் இவரிடமிருந்து
பறித்தனர். இவரைத் திண்டுக்கல் கோட்டையில் காவலில்
வைத்துப் பின் சென்னைக்கு அனுப்பினர். பின் அவர் அங்கு
காலமானர்.
ஆயக்குடி பாளையக்காரர் மரபினர் முதலில் பழைய
ஆயக்குடி
யையும், பின் புது ஆயக்குடியையும் தோற்றுவித்தனர்.
ஆந்திராவின் அகோபிலப் பகுதியிலிருந்து வந்த இவர்கள்
‘அகோபில’ என்பதைச் சுருக்கி ‘ஒபில’ என்று தங்கள்
பெயர்களில் சேர்த்துக்கொண்டனர். பெரி ஒபைய கொண்டம
நாயக்கர்
ஆயக்குடி பாளையக்காரர் மரபினரின் முன்னோர்
ஆவார். மகென்சி என்பவர் சேகரித்த கையெழுத்துப் பிரதிகளின்
மூலம் கிடைத்த குறிப்புகளின்படி 1816ஆம் ஆண்டு குமார
கொண்டம நாயக்கர்
என்பவர் ஆயக்குடி பாளையக்காரர் வம்சா
வழியில் 19ஆவது பட்டம் பெற்றவராக இருந்தார்.
பழனி நகரிலிருந்து 21 கி.மீ. தொலைவிலுள்ள விருப்பாச்சி,திண்டுக்கல்லில் அடங்கியிருந்த 26 பாளையங்களில் ஒன்றாகும்.
இப்பாளையத்தின் முன்னோர், மதுரை நாயக்க அரசைத்
தோற்றுவித்த விஸ்வநாதருடன் வந்தவர்கள் ஆவர்.
இஸ்லாமியர் படையெடுப்பின்பொழுது விருப்பாச்சி பாளையக்கார
மரபினர் மதுரை திருமலை மன்னருக்கு உதவியதால், அவரிடமிருந்து
பல பரிசுகளைப் பெற்றனர். மலைப் பகுதியிலுள்ள பாச்சலூர்
என்ற கிராமத்தை இவர்கள் தோற்றுவித்தனர். கப்பத் தொகை
பாக்கியைப் பெறுவதற்காக 1755இல் ஹைதர் விருப்பாச்சியைத்
தாக்கினார்.
ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின் விருப்பாச்சி
பாளையக்காரரான கோபால நாயக்கர் தென்னிந்தியக் கலகத்தில்
(1800-1801) ஈடுபட்டார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட
‘திண்டுக்கல் அணி’யைச் சேர்ந்தவர்களில் கோபால நாயக்கர்
முக்கியமானவர் ஆவார். தென்னிந்தியக் கலகத் தலைவர்கள்,
1800ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் விருப்பாச்சியில் கூடிய
பொழுது, அக்கூட்டத்திற்குக் கோபால நாயக்கர் தலைமை
தாங்கினார். இக்கலகத்தின்போது விருப்பாச்சியை அடுத்த
பகுதிகளில் கடும் சண்டைகள் நிகழ்ந்தன. கலகத்தின் இறுதியில்
(1801) ஆங்கிலேயரே வெற்றி பெற்றனர். கோபால நாயக்கரும்,
அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் ஆங்கிலேயர்களால்
பிடிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயருக்குப்
பணியாமல், அவர்களை எதிர்த்து இறதிவரை போராடித்
தென்னிந்தியக் கலகத்தில் விருபாச்சியின் கோபால நாயக்கர்
மிக்க புகழ் பெற்றார்.
பழனி நகர் 1886ஆம் ஆண்டு ஓரு நகராட்சி ஆயிற்று.
ஆரம்பத்தில் கோவை மாவட்டத்தின் பகுதியாக விளங்கிய
இந்நகர் பின்னர் மதுரை மாவட்டத்தின் பகுதியாயிற்று. பழனி
வட்டத்தின் தலைமையிடமாக விளங்கும் இந்நகரின் 1981ஆம்
அண்டு மக்கள் தொகை 64,400 ஆகும்.
பழனி நகரைப்பற்றிய புராண வரலாறு பின்வருமாறு
உள்ளது.
ஓரு காலத்தில் நாரதர் சிவபெருமானுக்கு மாதுளம் பழம்
ஒன்றைக் கொடுத்ததாகவும், சிவபெருமானின் அருகிலிருந்த இவர்
திருக்குமாரர்களான கணபதியும், முருகனும் அப்பழத்தை ஏக
காலத்தில் கேட்கவே, “எவர் இவ்வுலகை முதலாவது வலம்
வருகிறார்களோ, அவருக்குத்தான் இப்பழம்”
என்று சிவன்
கூறினார் என்றும், கணபதி தம் தாய் தந்தையே உலகம் என
அவர்களைச் சுற்றிவிட்டுப் பழத்தைப் பெற்றுக்கொண்டார் என்றும்,
தமக்குப் பழம் கிடைக்காததால் முருகன் தவக்கோலம் பூண்டு
பழனியில் அமர்ந்தார் என்றும், இதனால் சிவனும் உமாதேவியும்,
தங்கள் குமாரனின் கோபம் தணிய ‘ஞானப் பழமாக நீ இருக்கும்
பொழுது உனக்கு வேறு பழம் எதற்கு’ என்று கூறி அன்பு
பாராட்டினார்கள் என்றும் கூறப்படுகிறது. முருகன் பெற்ற
பெயரே, மலைக்கும் ஊருக்கும் ‘பழம் நீ’ என் வழங்கப்பட்டுப்
பின் அச்சொல் மருவி ‘பழநி’ அல்லது பழனி என்றாயிற்று
எனப்படுகிறது.
(பழனம் என்னும் வயல்களால் இப்பகுதி சூழப்பட்டிருந்ததால்,
இப்பகுதி பழனம் என்றழைக்கப்பட்டுப் பின்னர் பழனி
என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவர்.) சங்க இலக்கியம்
குறிப்பிடும் ‘பொதினி’ இன்றைய பழனியேயாகும்.
பழனி முருகன் கோவிலின் அமைப்பும் வரலாறும்
திரு ஆவினன் குடிக் கோவில்
திரு ஆவினன் குடிக் கோவில் என்பது பழனியின்
ஆதிக் கோவிலாகும். சங்ககாலப் புலவரான நக்கீரர் தமது
‘திருமுருகாற்றுப்படை’யில் முருகனின் மூன்றாவது படை வீடாகத்
திரு ஆவினன் குடியைப் போற்றியுள்ளார். இக்கோவிலில்
முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து குழந்தை வேலாயுத
சவாமி
என்ற பெயருடன் விளங்குகிறார். திரு ஆவினன் குடி
முருகனைத் தரிசித்து நன்மை பெறத் தேவர்களும் முனிவர்களும்
வருவதாகத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார்.
மிக்க பழமைமிக்க இக்கோவிலை கி.பி. 1898இல் நாட்டுக்கோட்டை
நகரத்தார்கள் புதுப்பித்துக் கட்டினர். இக்கோவிலின் கோபுரம்
கி.பி. 1968இல் நாட்டுக் கோட்டை நகரத்தார்களால்
அமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. சந்நிதி
முன்னுள்ள மண்டபத் தூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
சந்நிதி முன்னுள்ள மண்டபத்தின் கூரைப் பகுதியில் காணப்படும்
கல்வளையங்கள் இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு
எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

மலைக்கோவில்
பழனிமலை 137 மீட்டர் உயரம் உள்ளது. இம்மலையின்
உச்சியில் தமிழ்த்தெய்வமாம் முருகன் தண்டாயுதபாணி
சுவாமியாக வீற்றிருக்கிறார். பழனிமலைக் கோவில் கால
வரையறைக்கு உட்படாத பழம்பெரும் கோவிலாக உள்ளது.
போகர் என்ற சித்தர் கருவறையிலுள்ள இறைவன் திருவுருவத்தை
ஒன்பது வகைப் பாஷாணத்தை ஒன்றுகூட்டி அமைத்து
மலைக்கோவிலை உண்டாக்கினார் என்று கூறுவர். இப்போக,
சித்தரின் சமாதி மலை உச்சியில் முருகன் சந்நிதியின் தென்மேற்கு
மூலையில் உள்ளது. போகருக்குப் பின் அவரது சீடர்
புலிப்பாணியும்,
அவருக்குப் பின் அவர் மரபில்
வந்தோரும் கருவறைத் தெய்வத்தைப் பூசித்து வந்தனர்.
சேரமான் பெருமாள்
என்ற சேர மன்னர் (கி.பி. 9ஆம்
நூற்றாண்டு) இம்மலைக் கோவிலின் ஆதிப்பகுதியை எழுப்பினார்
என்பர். கருவறையின் வடபக்கச் சுவரில் குதிரையுடன் காணும்
சிறிய புடைப்புச் சிற்பம் சேரமன்னருடையது என்று கூறுவர்.
அடிவாரத்திலுள்ள பாதவிநாயகர் கோவிலைக் கடந்து
மலைப்படிகளில் சிறிது தூரம் வந்தபின் 18ஆம் படிக்கு
அருகிலுள்ள சிற்றாலயம் விநாயகருடையதாகும். இதைச்
சேரமான் பெருமாள் கட்டினார் என்று கூறப்படுகிறது. இவ்
விநாயகர் ‘சேரவிநாயகர்’ எனப்படுகிறார். சேரவிநாயகர்
சந்நிதியின் வாயிலிலுள்ள ஓரு தனிக் கற்சிலையில் காணப்படும்
உருவம், மலைக்கோவில் கருவறையின் வடக்குச் சுவரிலுள்ளது
போல் உள்ளது. இதுவும் சேரமன்னரின் உருவம் எனப்படுகிறது.
சேரமன்னர்கள் சூட்டிக்கொண்ட ‘கோதை’ என்ற பெயரின்
எச்சமாகப் பழனிக்கருகிலுள்ள கோதை மங்கலம் என்னும் கிராமம்
உள்ளது எனப்படுகிறது. பாண்டிய மன்னர்கள், கொங்குச்
சோழர்கள் ஆகியோரின் திருப்பணிகளைப் பழனிக் கோவில்
கொண்டுள்ளது. இன்றைய மலைக்கோவிலின் கருவறைப் பகுதிகள்
‘அவனி வேந்தராமன்’ எனப்படும் ஜடாவர்மன் சுந்தர
பாண்டியனின்
(1251-68) திருப்பணியாகும் என்று கருதப்படுகிறது.
சுப்பிரமணிய விநாயகர் சந்நிதி அருகிலுள்ள நாயக்கர் மண்டபம்
இரண்டாம் பிரகாரத்திலுள்ள பாரவேல் மண்டபம் ஆகியவை
நாயக்கர் காலத் திருப்பணிகளாகும். கி.பி. 1634இல் மதுரை
நாயக்க மன்னர் திருமலையின் தளவாய் இராமப்பய்யன்
பழனிக்குச் சுவாமி வழிபாட்டிற்கு வந்தபொழுது தீர்த்தப்
பிரசாதம் கொடுக்கக் கோவிலில் அந்தணர்கள் இல்லாததால்,
அவர்களைத் தருவித்து அவர்களையே புதிய பூசாரிகளாக
நியமித்தார் என்றும், அதுவரை இருந்து வந்த தமிழ் மரபுப்
பூசாரிகளை இறை பணியிலிருந்து நீக்கினார் என்றும் ஒரு
செப்புப் பட்டயத்திலிருந்து அறியப்படுகிறது.
அடிவாரத்தில் பாதவிநாயகர் சந்நிதிக்கு வடமேற்கிலுள்ள
மீனாட்சியம்மன் கோவில் பழனிப்பகுதி பாளையக்காரர்களால்
அமைக்கப்பட்டதாகும். சமீப காலத்தில் பல பக்தர்களின
நன்கொடைகளினால் பல கட்டடப் பகுதிகள் எழுந்துள்ளன.
அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்லக் கி.பி. 1925க்குப்
பின் செம்மையான மலைப்படிகள் அமைக்கப்பட்டன.
இக்கோவிலின் மிகச்சிறந்த குடமுழுக்கு விழா 1973ஆம்
ஆண்டு நடைபெற்றது. கோவிந்தசாமி நாயுடு என்பவரின்
நன்கொடையால், 1975ஆம் ஆண்டு கார்த்திகை
மண்டபமும், கவுண்டப்ப கவுண்டர்
என்பவர்
நன்கொடையால் 1979ஆம்ஆண்டு வசந்த மண்டபமும்
மலை உச்சியில் கட்டி முடிக்கப்பட்டன.
இந்துப் பண்பாட்டின் ஓரு முக்கிய சின்னமாக
விளங்கும் பழனிமலைக் கோவி
லின் சிறப்புமிக்க அம்சங்கள்
பின்வருவனவாகும்:
1. முருகப்பெருமான் தமிழ்நாட்டு மக்களின் முக்கிய
தெய்வமாகும். தமிழ்நாட்டிலுள்ள முருகனது கோவில்கள்
யாவற்றிலும் புகழ் பெற்றதாகப் பழனி முருகன் கோவில் உள்ளது.
2. கருவறையில் முருகப்பெருமான் ஆண்டிக் கோலத்தில்
எழுந்தருளியுள்ளார். தனது வலது கையில் தண்டம்
பிடித்திருப்பதால் தண்டாயுதபாணி சுவாமி என்
அழைக்கப்படுகிறார்.
3. பங்குனி மாத உத்திர விழாவின்பொழுது பல
இலட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை
தருகின்றனர். கார்த்திகை விழா, கந்தர்சஷ்டி விழா, தைப்பூச
விழா
ஆகியவை இதர முக்கிய வழா நாள்களாகும். திருமணம்,
நேர்த்திக்கடன் செலுத்துதல், தலைமுடி எடுத்தல், காது குத்துதல்
முதலிய மங்கள காரியங்களுக்காக மக்கள் தினமும் வருவதால்
பழனியில் தினமும் விழக்கோலம் உள்ளது எனலாம்.
4.கேரள மன்னன் சேரமான் பெருமாள் இக்கோவிலின்
திருப்பணியில் ஈடுபட்டிருந்ததாலும், கருவறையிலிருக்கும்
முருகன், மலைவாழ் தெய்வமாக இருப்பதாலும், அத்தெய்வம்மேற்குத் திசையில் கேரள நாட்டை நோக்கியிருப்பதாலும்,
கேரள மக்கள் தங்கள் செழிப்புக்குக் காரணமான தெய்வம்
‘பழனிமலை முருகன்’ என்று கருதி இக்கோவிலில் வழிபட
தினமும் ஏராளமாக வருகின்றனர்.
5. மின் அலங்காரம் கொண்ட ‘தங்க ரதத்தில்’ இறைவனை
இரவில் மலையில் இருந்து வழிபடுவது பழனிமலைக் கோவிலில்
சிறப்பான ஒன்றாகும். V.V.C.R முருகேச முதலியார்
என்பவரின் முயற்சியால் 1958ஆம் ஆண்டில் இந்தத் ‘தங்க ரத
வழிபாடு’ ஏற்பட்டது.
6. பொதுவாக இந்துக் கோவில்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட
நேரம் மட்டுமே வழிபாட்டிற்குத் திறந்து வைக்கப்படுகின்றன.
ஆனால், பழனிமலைக் கோவில், நண்பகலில் எவ்வித இடை
வெளியும் இன்றி, அதிகாலைமுதல் இரவுவரை தொடர்ந்து
எல்லா நேரமும் வழிபாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
7. இந்தியாவில் பல மலைக்கோவில்கள் இருப்பினும்
பழனி மலைக்கோவில் ஒன்றில் மட்டுமே ‘விஞ்ச்’ எனப்படும்
இழுவை ரயில் மின்சாதனம் செயல்படுகிறது. இது 1966 முதல்
செயல்பட்டு வருகிறது. 1981இல் மற்றொரு விஞ்சுக்கான
இருப்புப்பாதை (முதல் பாதை அருகில்) அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இங்கு இரண்டு இழுவை ரயில்கள் உள்ளன.
பழனிமலையின் அடிவாரத்தைச் சுற்றிச் செல்லும் கிரி வீதியின்
மேற்குப்பகுதியில் இழுவை ரயில் நிலையம் உள்ளது.
8. தமிழ்நாட்டிலேயே பழனி முருகன் கோவிலில்தான்
மக்கள் மிகுதியான காணிக்கை (உண்டியல்) நிதியைச் செலுத்து
கின்றனர். இந்நிதி கல்விப்பணிக்கும் இதர நற்பணிகளுக்கும்
பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பழனிமலைக் கோவில்
திருப்பதிக்கு அடுத்தபடியாக உண்டியல் வருவாயைப்
பெறுகின்றது.
கலைச் சிறப்பு
1. தண்டபாணி சுவாமியின் கருவறை முற்றிலும்
கல்லினாலானது. கருவறையின் கருங்கல் வேலைப்பாடுகள்
அழகு மிக்கவை.
2. மலைமீது ஏராளமான தூண்களைக் கொண்டுவந்து
மண்டபம் அமைத்திருப்பது சிறப்புமிக்கதாகும். நாயக்கர்
மண்டபத்தின் ஒரு பகுதியிலுள்ள சுப்பிரமணிய விநாயகர்
சந்நிதி
கல் வேலைப்பாடுமிக்கது.
3. பார வேல் மண்டபத்தில் ஒற்றைக் கல்லினாலான சில
தூண் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது பீமசேனன்
புருசா மிருகத்துடன் போராடும் காட்சியைக் கொண்ட
தூண்களாகும்.
4. பாதவிநாயகர் கோவிலையடுத்து மலைப்பாதைப்
படிகள் தொடங்குமிடத்திலுள்ள P.S.G. மங்கம்மாள் மண்டபத்தில்
பல தெய்வங்களின் திருவுருவங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.
5. மலை உச்சியில் கிழக்கு வெளிப்பிரகாரத்தில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள கார்த்திகை மண்டபம், வசந்த மண்டபம்
ஆகியவற்றில் உள்ள தெய்வங்களின் வண்ணச் சுதைச் சிற்பங்கள்
அழகுமிக்கவை. இவை மதுரைச்சிற்பி மாரியப்ப ஸ்தபதியால்
உருவாக்கப் பெற்றவையாகும்.
6. அடிவாரத்தில் பாதவிநாயகர் கோவிலுக்கு வடமேற்கில்
உள்ள மீனாட்சி கோவிலின் தூண்களும், யாளிகளும் சிற்ப
வேலைப்பாடுமிக்கவை. இக்கோவிலின் சந்நிதி முன்பாகப் பழனி
வைகாவூர் நாட்டை ஆண்ட பாளையக்காரர்கள், அவர்களின்
மனைவியர் ஆகியோரது உருவச் சிலைகள் சில உள்ளன.

பழனி நகரிலுள்ள இதர கோவில்கள்
பட்டத்து விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில்,
வேணுகோபாலப் பெருமாள் கோவில், இலக்குமி நாராயணப்
பெருமாள் கோவில், இடும்பன் கோவில், பெரியநாயகி அம்மன்
கோவில் ஆகியவை பழனி நகரிலுள்ள இதர முக்கிய
கோவில்களாகும்.

இடும்பன் கோவில்
திண்டுக்கல்-பழனி சாலையில் பழனி நகருக்குள் நுழையுமுன்
அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரிக்கு அருகில் இடும்பன்
கோவில்
இருக்கிறது. புராண அடிப்படையில் பழனி மலையும்,
பழனிமலைக்கு அருகிலுள்ள இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி
என அழைக்கப்பட்டன. இடும்பன் என்ற அசுரன் இம்மலைகளை
அகத்திய முனிவருக்காக கைலாயத்திலிருந்து பொதிகைக்குக்
காவடிபோல் கட்டித் தூக்கிகொண்டு சென்றதாகவும், செல்லும்
வழியில் இப்போது இடும்பன் மலை இருக்கும் இடத்தில்
களைப்பினால் இறக்கி வைத்ததாகவும், தன் பெற்றோர்களிடம்
கோபமுற்று முருகன் அமர்ந்தபின் மலையைத் தூக்கமுடியாமல்
போகவே இடும்பனுக்கும் முருகனுக்கும் ஏற்பட்ட ஒரு போரில்
இடும்பன் இறந்ததாகவும் இடும்பனின் மனைவி இடும்பியின்
முறையீட்டால் மீண்டும் இடும்பன் உயிர் பெற்றார் என்றும்
புராணம் கூறுகிறது. இடும்பன் இரு வரங்களினால்
பழனிமலையில் இடும்பன் சந்நிதி என்ற இடத்தில் வாயில்
காவலனாக
இடம் பெற்றான் என்றும், இரு மலைகளையும்
தான் காவடிபோல் எடுத்து வந்தது போன்று காவடியுடன் வரும்
பக்தர்கள் முருகனின் அருள்பெற வேண்டும் என்று வேண்டினார்
என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது.
இப்பொழுது இடும்பன் மலையின் அடிவாரத்தில் இருக்கும்
கோவிலை விரிவுபடுத்தி அம்மலையின் உச்சியில் வழிபாட்டிற்கு
ஏற்பாடு செய்யும் நோக்கத்துடன், அம்மலையின்
அடிவாரத்திலிருந்து உச்சிக்குக் கற்படிகள் அமைக்கும் வேலை
நடைபெற்று வருகிறது. காவடியுடன் பழனிமலைக்கு வரும்
பக்தர்கள் முதலில் இடும்பன் கோவிலில் வழிபட்ட பின்னரே
முருகனது கோவிலுக்குச் செல்கின்றனர். இடும்பனின் நினைவால்
இடும்பன் மலைக்கருகில் இடும்பன் குளம் ஒன்று உள்ளது.
பெரியநாயகி அம்மன் கோவில்
பழனி நகரின் மேற்குப் பகுதியில் பெரியநாயகி அம்மன்
கோவில் உள்ளது. இக்கோவில் பழமையான ஒன்றாகும். பழனி,
ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி நாயக்கர் குடும்பத்தினரால்
இக்கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளன. நாட்டுக்
கோட்டை நகரத்தார்களால் இக்கோவிலின் நடராசர் சந்நிதிஅமைக்கப்பட்டது. நாடார் சமூகத்தினரின் திருப்பணியும்
இக்கோவிலில் உள்ளது.
கொடிக்கம்பத்தின் எதிரே சோமாஸ்கந்தர் சந்நிதியும்,
அதன் இருபக்கங்களில் கைலாசநாதர் சந்நிதியும், பெரிய
நாயகி அம்மன் சந்நிதி
யும் உள்ளன. பெரியநாயகி அம்மன்
இக்கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படுகிறார். அம்மன்
சந்நிதியை அடுத்து முத்துக்குமாரசுவாமி சந்நிதி உள்ளது.
கைலாசநாதர் சந்நிதிக்கு எதிரில் நடராசர் சந்நிதி உள்ளது.
கலைச் சிறப்பு
நடராசர் சந்நிதி
நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட நடராசர்
சந்நிதி ஒரு கலைக்கருவூலம் ஆகும். இது முற்றிலும்
பளபளப்பான கருங்கல்லினாலாகியது. நுட்பமான
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. கொடுங்கையின்
வேலைப்பாடு குறிப்பிடத்தக்கது. ‘இரண்டு கம்பி’களைக்
கொண்ட இச்சந்நிதியின் கொடுங்கைகள் உருவில் சிறியனவாயினும்
அழகில் சிறந்தவையே. தெற்கு நோக்கியுள்ள இச்சந்நிதியின் முன்
பகுதியில் மூன்று குரங்குகளுக்கு மூன்று உடல்களும், ஒரே
தலையும் உள்ளதுபோல் அமைக்கபடபட்டுள்ள சிற்பம்,
இதையமைத்த சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகிறது.

நவரங்க மண்டபம்
பெரிய நாயகி அம்மன் கோபுர வாயிலுக்கு வெளியில்
நவரங்க மண்டபம்
உள்ளது. இம்மண்டபம் நாடார்
சமூகத்தினரால் உருவாக்கப்பட்டது. கி.பி.17ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் இம்மண்டபத்தின் ஒரு பகுதிக் கட்டடப் பகுதி
எழுப்பும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுச் சில ஆண்டுகளில்
நிறைவு பெற்று இன்றைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.
நவரங்க மண்டபத்தின் நடுவிலுள்ள ஒரு தூணில்
பத்திரகாளியின் திருவுருவம் உள்ளது. இத்தெய்வம் இங்கு
முக்கியமாக வழிபடப்படுகிறது. இம்மண்டபத்தில் 40 நெடிய
தூண்கள் உள்ளன. முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள
இம்மண்டபத் தூண்களில் தண்டபாணி சுவாமி, சுப்ரமணியர்,
நடராசர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன்
ஆகிய
தெய்வங்களின் திருவுருவங்களும், இரண்டு துவாரபாலர்களின்
சிற்பங்களும் உள்ளன. சில தூண்களின் உச்சிப்பகுதியில் வாயில்
கல் உருண்டைகளுடன் சிங்கத்தின் உருவங்கள் விநோதமாகக்
காட்சியளிக்கின்றன. நவரங்க மண்டபச் சிற்பங்கள் வேலைப்
பாடுமிக்கவை. இவை இம்மண்டபத்தை ஒரு கலைக்கூடமாகக்
காட்சியளிக்கச் செய்கின்றன.கி.பி. 17ஆம் நூற்றாண்டு முதல்
ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழா இம்மண்டபத்தில்
கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி. 1634இல் பழனி மலைக்
கோவிலுக்கு வருகை தந்த திருமலையின் அமைச்சர் இராமப்பய்யன்
நவரங்க மண்டபத்தின் விஜயதசமி விழாவில்
கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பழனி நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் பெரியாவுடையார்
கோவில்
உள்ளது. இங்குள்ள சிவன் பிரகதீஸ்வரர் அல்லது
பெரியாவுடையார் எனப்படுகிறார். இக்கோவில் பாண்டிய,
கொங்குச் சோழ மன்னர்களால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு
முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பழனி நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் சண்முக நதி
என்ற புனிதமாகக் கருதப்படும் நதி ஓடுகிறது.
பழனி நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் பால
சமுத்திரம்
என்ற கிராமம் உள்ளது. இங்கு அகோபிலம்
வரதராஜப் பெருமாள் கோவில்
உள்ளது. இது
கி.பி. 17ஆம் நூற்றாண்டில்
பழனிப் பகுதியை ஆட்சிபுரிந்த பாளையக்காரர்களால்
கட்டப்பட்டது.
பழனி நகரிலிருந்து 24 கி.மீ. தொலைவில் கொழுமம்
என்ற கிராமம் உள்ளது. இங்கு சோளீஸ்வரர் கோவில் உள்ளது.
இது வீரசோழன் என்ற கொங்குச்சோழரால் கட்டப்பட்டதாகும்.
மதுரை நாயக்க மன்னர் திருமலை இக்கோவிலுக்குத் தானம்
வழங்கியதாக இங்குள்ள ஒரு கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.
சோளீஸ்வரர் கோவிலை அடுத்து கல்யாண வரதராஜப்
பெருமாள்
கோவில் உள்ளது.
பழனி நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் ஐவர் மலை
(அயிரவை மலை) உள்ளது. இங்குள்ள குகைத்தளங்களில்
சமணப் பெரியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மலையில் சிறிது
உயரம் சென்றதும் திரௌபதி அம்மனுக்கு ஒரு சிறு கோவில்
உள்ளது. இதனருகிலுள்ள மலைப்பாறையில் 16 சமணச்
சிற்பங்கள் வரிசையாக உள்ளன. இவை மலையைச் செதுக்கி
அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.
சமணச் சிற்பங்கள் சிறிய அளவினவாயிருப்பினும் அழகுற
வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களுக்கு அருகில்
வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள சமணச்
சின்னங்கள், இம்மலைப்பகுதி ஒரு காலத்தில் ஒரு சிறந்த
சமண மையமாக விளங்கியிருந்ததைக் காட்டுகின்றன.
கல்வெட்டுகள்மூலம் இம்மலையிலிருந்து சமண அறத்தைப்
பரப்பிய சமணப் பெரியார்களின் பெயர்கள், கல்வி போதித்த
ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர் பெயர்கள்
அறியப்படுகின்றன. அச்சணந்தி என்ற சமணப் பெரியார்
இங்குள்ள தீர்த்தங்கரர் திருமேனிகளைச் செய்வித்தார்.
மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இரண்டாம்
வரகுண பாண்டியன்
காலத்தில் (கி.பி. 870) இங்குள்ள இரண்டு
சுனைகளைப் புதுப்பிக்க 500 காணம் பொன் கொடுக்கப்பட்டது
என்ற கல்வெட்டுச் செய்தி வரலாற்றுச் சிறப்புடையதாக உள்ளது.
ஐவர் மலையிலுள்ள சமணச் சிற்பங்களைக் காப்பது நமது
கடமையாகும்.பழனி நகரின் மேல்புறம், இந்நகரின் பெரிய பள்ளிவாசல்
உள்ளது. இப்பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள இரு
கோபுரங்கள்
சுமார் 30 மீட்டர் உயரமுள்ளவை. தமிழ்
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பழனிப் பள்ளிவாசல்
கோபுரங்கள் மிகவும் உயரமானவை என்று கூறப்படுகிறது.
இப்பள்ளி வாசலும், கோபுரங்களும் கி.பி. 1923இல் கட்டி
முடிக்கப்பட்டன.
பழனி நகரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் கீரனூரில்
இஸ்லாமிய மக்களின் சிறப்புமிக்க பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இது மஸ்ஜித் மதரசா பரிபாலன சபைக்குரியதாகும்.
இப்பள்ளிவாசலின் வரலாறு 17ஆம் நூற்றாண்டிலிருந்து
உள்ளது எனப்படுகிறது 1923ஆம் ஆண்டில் இப்பள்ளிவாசல்
முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டது. கருங்கல்
வேலைப்பாடுகளுடன் விளங்கும் பள்ளிவாசலும் அதன்
கலைச் சிறப்புமிக்க கோபுரங்களும் கீரனூரின் சிறப்புமிக்க
சின்னங்களாக விளங்குகின்றன.
பழனி நகரின் மத்தியில் புனித மிக்கேல் வானதூதர்
ஆலயம்
உள்ளது. கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கான
இவ்வாலயம் 1934ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.
தென்னிந்திய திருச்சபையினருக்குரிய (C.S.I) ஆலயம் பழைய
தாராபுரம் சாலையில் உள்ளது. அமெரிக்கக் கிறித்தவச் சபையைச்
சேர்ந்த லாரன்ஸ் என்ற பெரியார் 1840ஆம் ஆண்டில் பழனியில்
முதன் முதல் கிறித்தவ வழிபாட்டை நடத்தினார். அவர் வழிபாடு
நடத்திய இடத்தில் 1851ஆம் ஆண்டு ஓர் ஆலயம்
எழுப்பப்பட்டது. டேவிட் வேதமுத்து என்பவர் மறைபோதகராக
இருந்த காலத்தில் (1872-1885) இவ்வாலயத்தின் கட்டடம்
விரிவுபடுத்திக் கட்டப்பட்டது (1876). ஒயிட் என்பவரால்
கிறித்தவ சமயப் பெரியார்களுக்காகப் பழனியில் ஓர் அழகிய
கட்டடம் கட்டப்பட்டது (1857-1863). இக்கட்டடத்தில் தற்பொழுது
பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் சில வகுப்புகள்
அடங்கியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்