தளிஞ்சி





தளிஞ்சி கல்வெட்டுகளும், பெருங்கற்படை ஈமச்சின்னங்களும்

                                                   து.சுந்தரம், கோவை.  


     உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு செக் போஸ்ட்டைக்கடந்ததும் சம்பக்காடு என்னும் ஊர் உள்ளது. சம்பக்காட்டிலிருந்து காட்டிற்குள் சுமார் ஒரு மணி நேர   நடைப்பயணத்தில் நாம் சென்றடையும் மலைக்கிராமமே தளிஞ்சி.
            இணைய தளம் தரும் தகவலின்படி, சுமார் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கிராமம், தேனாறு ஆற்றை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நூற்றைம்பது வீடுகளைக்கொண்டது. புலையர் இன மக்கள் இங்கு வசிக்கிறார்கள். மலைமரசர் என்னும் பழங்குடி இனத்தவரில் சிலரும் இங்கு வசிக்கிறார்கள். சிறிய அளவில் வேளாண்மை நடக்கிறது. மக்கள் வெளியூரில் கூலி வேலைக்குச்செல்கிறார்கள். அமராவதி அணைக்கருகில் உள்ள மானுப்பட்டி பஞ்சாயத்தின்கீழ் வரும் இந்த கிராமத்தில் அரசு உதவியோடு வீடுகளுக்கு சூரிய ஒளிச்சக்தியால் எரியும் விளக்குகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.  கி.பி.15-ஆம்  நூற்றாண்டில் விஜய நகர மன்னர் ஆட்சிகாலகட்டத்தைச்சேர்ந்த கோயில் சிற்பங்களும், செங்கல் இடிபாடுகளும் காணப்படுகின்றன.
    இவ்வாறு, வரலாற்றுப்பின்னணி கொண்ட தளிஞ்சியில், கி.பி. 10-ஆம்  நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு கல்வெட்டு புதிதாகக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடுமலைக்கருகில் உள்ள கல்லாபுரத்தைச்சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் ஜான்சன் கொடுத்த தகவலின்படி, கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் (இக்கட்டுரை ஆசிரியர்) ஜான்சனுடன் தளிஞ்சி சென்று அந்த கிராமத்தின் தலைவரான ராஜன் என்பவரைச்சந்தித்து அவருடன் கல்வெட்டு இருந்த இடம் சென்றார். (கிராமத்தின் தலைவர் “மூப்பன்”  என அழைக்கப்படுகிறார்).
     விவசாய நிலங்களின்  நடுவில் ஓரிடத்தில், கற்சிற்பங்கள் சிதறிக்கிடந்தன. அருகிலேயே இரண்டு துண்டாக உடைந்து கிடக்கும் பலகைப்பாறைக்கல். இரண்டு துண்டுகளிலும் கல்வெட்டு வரிகள் காணப்பட்டன. இரண்டு நந்தி சிலைகளும், ஒரு பெண் தெய்வச்சிற்பமும், ஒரு நாகர் சிற்பமும், மேலும் ஒரு நந்தியின் தலைப்பகுதிச்சிற்பமும் அங்கே குவியலாகக்கிடந்தன. பெண் தெய்வச்சிற்பம் மூன்று பாகங்களாக உடைந்து இருந்தது.





பீடத்தோடு கூடிய பாதப்பகுதி, தலை மட்டும் ஒரு பகுதி, மீதியுள்ள உடல்பகுதி ஆகியவை. நந்தி சிலையைக்கொண்டு, ஒரு சிவன் கோயிலின் அடையாளங்கள் இவை என்றும், அங்கே ஒரு சிவன் கோயில் இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கருதலாம். ஆனால், கல் கட்டுமானத்தால் ஆன கோயில் அங்கே இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கல் தூண்களின் பாகங்களோ, கல் சுவர்களின் பாகங்களோ அங்கே காணப்படவில்லை. ஆனால், ஒருசில செங்கற்களின் பகுதிகள் காணப்பட்டதால் அங்கே செங்கற்கட்டுமானத்தால் ஆன ஒரு கோயில் இருந்திருக்கலாம் என யூகிக்கலாம். கல்வெட்டும் அங்கே காணப்படுவதால் கோயில் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
     கல்வெட்டிருந்த பாறைத்துண்டுகளின்மேலிருந்த மண்ணைத்துடைத்துவிட்டுப்புகைப்படம் எடுத்து ஆய்வு செய்ததில், அக்கல்வெட்டு தென் கொங்குப்பகுதியை ஆட்சி செய்த வீர கேரள அரசனான வீரநாராயணன் அதிசய சோழனுடைய காலத்தைச்சேர்ந்தது எனக்கண்டறிய முடிந்தது. கொங்கு நாடு, பழங்காலத்தில் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளாக இருந்தது. தென்கொங்கு வீரகேரளர்களின் ஆட்சியிலும், வடகொங்கு கொங்குச்சோழர் ஆட்சியிலும் இருந்தன. இவர்கள் சுயாட்சி பெற்று சோழர்களுக்குக்கீழ்ப்படிந்தவர்களாக ஆண்டனர். இவர்கள், இடைக்காலச்சேரர்களைத்தொடர்ந்து ஆட்சி செய்த கேரள மரபினர் ஆகலாம் என்று ஒரு கருத்து உண்டு. தென்கொங்குப்பகுதியில் வீரகேரளர்கள் சுமார் 250 ஆண்டுகள் (கி.பி. 945 1200 வரை) ஆண்டுள்ளனர்.
       வீரகேரள அரசர்களில் முதலாவதாகக்கூறப்படுகின்றவன் வீரகேரளன் வீரநாராயணன் ஆவான். இவன் மகனே நமது தளிஞ்சிக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீரநாராயணன் அதிசயசோழன். இவன், தன் பெயரில் முன்னொட்டாகத்தன் தந்தையின் பெயரைக்கொண்டுள்ளான். இவன் கி.பி. 990 முதல் கி.பி. 1021 வரை 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். எனவே, கல்வெட்டின் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியலாம்.
      தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் நூல்களில் இவனது பெயர் “அதிசய சோழன்எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும், இக்கல்வெட்டில் இவனது பெயர் “அதி ஜெய சோழன்”  என்று இருப்பதைப்பார்க்கும்போது, அதிசயம்” (ஆச்சரியம்) என்னும் பொருளில் பெயர் அமையவில்லை என்பதும், வெற்றியைக்குறிக்கும் “ஜெயம்”  என்னும் பொருளிலேயே பெயர் அமைந்துள்ளது என்பதும் புலனாகிறது. ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய பகுதிகளில் வீரகேரள அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.





ஆனால், வீரநாராயணன் அதிஜெய சோழனின் கல்வெட்டு கோவைப்பகுதியில் முதன்முதலாகக்கிடைத்திருப்பது இதுதான் எனக்கருதலாம்.       கல்வெட்டு எழுத்துகள் முழுவதையும் படிக்கும் அளவு தெளிவாக இல்லை. எனவே, கல்வெட்டின் முழுச்செய்தியும்  தெரியவில்லை. ஆனால், நெல் (கலம் என்னும் அளவையில்) கொடையாக அளிக்கப்பட்டதைக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டில் தளிஞ்சி ஊர்ப்பெயர், “தழிஞ்சி”  எனக்காணப்படுகிறது. இக்கல்வெட்டு இன்னும் விரிவாக ஆராயப்படவேண்டும்.
       மேலும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்று இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சமதளப்பாறைப்பகுதியில், பாறையைக்குடைந்து, சிறிய உரல் போல அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குழியும், அதன் அருகே சதுரமாகக்கோடு செதுக்கி அச்சதுரத்துக்குள் நான்கு வரிகள் செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டும் உள்ளது. அதன் வாசகம் கீழ்வருமாறு:

         “ நாவ வீரன்
           அடியாத்தி
           அடிப்பித்த
           கல் குழி

இதன் காலம் சுமார் 18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். நாவவீரன் என்பவனின்  அடியாத்தி (மனைவியாக இருக்கலாம்) ஒரு கல் குழியை வெட்டிக்கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்குழி, நெல் குத்துவதற்காகப் பயன்படுத்தும் ஒன்று என உடன் வழிகாட்டி வந்த ஊர் மூப்பன் ராஜன்  தெரிவித்தார். அருகிலேயே எதிரில் தெரிந்த ஒரு மலைப்பகுதியைச்சுட்டிக்காட்டி, இது போல் கல்குழிகள் அங்கு நிறைய இருப்பதாகவும், கல்திட்டைகளும் அங்கே இருப்பதாகவும் தெரிவித்தார்.
     இணையதளத்தில் கண்ட செய்தியில் குறிப்பிட்ட விஜய நகர மன்னர் காலக்கோயில் அழிவுகளின் எச்சங்களையும் பார்வையிட்டதில் கீழ்க்கண்ட செய்திகள் தெரிய வந்தன. காணப்பட்ட இடங்கள்: முதலாவதாக, கிருஷ்ணன் கோயில் என்று அழைக்கப்பட்ட இடம். ஒரு மரத்தடிமேடையில், நிறையச்சிற்பங்கள். சில முழுமையாக; சில உடைந்த நிலையில். பெயருக்கேற்ப ஒரு குழலூதும் கிருஷ்ணன் சிலை.  நாற்கரங்கள். முன்னிரண்டு கைகளில் குழலைப்பிடித்த நிலை. பின் கைகளில், வலது கையில் சக்கரம் ஏந்திய நிலை. இடது கை தோளுக்குக்கீழ் ஒன்றுமில்லை. உடைந்த பகுதியும் அங்கு காணப்படவில்லை. இரண்டு தேவியர் சிலைகள். ஒன்று பாதம் உடைந்த நிலையில். இன்னொன்று, தலை உடைந்த நிலையில்.





     
      திருமாலின் சிலை ஒன்று முழுதாக உள்ள நிலையில். வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் ஏந்தியவாறு உள்ளது. இடது காலைக்கிடைமட்டத்தில் இருத்தி, வலது காலைத்தொங்கவிட்டவாறு சுகாசனத்தில் அமர்ந்த நிலை. அருகில், நீள்சதுரப்பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பங்களாகச்செதுக்கப்பட்ட ஏழு மங்கையர் (சப்த மாதர்) சிலை.
      இரண்டாவதாக,கிருஷ்ணன் கோயிலுக்குச்சற்றுத்தொலைவில், மேலும் சில சிற்பங்கள் அடங்கிய பலகைக்கற்கள் காணப்பட்டன. ஜன்னல் பகுதியைப்போல் பள்ளமாக வெட்டி, அந்த உள்பகுதியில் புடைப்புச்சிற்பங்களாகச்செதுக்கப்பட்ட நிலையில் மூன்று சிற்பத்தொகுதிகள். இரண்டில், ஆறு பெண் உருவங்களும், மற்றதில் ஏழு பெண் உருவங்களும். இவை மூன்றும் மாசதிக்கற்களாகும். இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார் தங்கள் உயிரைத் தீப்பாய்ந்து மாய்த்துக்கொண்டதைக்குறிக்கும் நினைவுக்கற்களாகும். அடுத்து இன்னொரு சிற்பம் அரைவட்டவடிவில் அமைந்தது. இது வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். இதில் வீரனும், அவன் மனைவியும் காணப்படுகிறார்கள். மற்றுமொரு சிற்பத்தொகுதியில், வீரன் ஒருவனைப்பல்லக்கில் வைத்துக்கொண்டுபோவதுபோல் சித்திரித்திருக்கிறார்கள். இதுவும் நடுகல் வகையைச்சேர்ந்ததுதான். வீரன் சொர்க்கம் புகுவதாக அமைந்த காட்சி. இறுதியாக, ஒரு சிற்பத்தொகுதி சற்றே மாறுபட்டது. கலை நயமும்,கதை நயமும் கொண்டது. கிருஷ்ணன், கோபியர் குளிக்கும்போது அவர்களுடைய ஆடைகளைக்கவர்ந்து, குளக்கரையில் உள்ள மரத்தில் ஏறி அமர்ந்துள்ளதுபோலும், கோபியர் கிருஷ்ணனிடம் தம் ஆடைகளைத்தருமாறு கைகூப்பி இறைஞ்சி  நிற்பதுபோலும் காட்சியைச்செதுக்கியிருக்கிறார்கள். மரத்தடியில்  நாயின் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. கிருஷ்ணாவதாரத்தில் இக்கதையை கோபிகா வஸ்திராபகரணம் என்று குறிப்பிடுவார்கள். இந்தச்சிற்பங்களெல்லாம் கி.பி. 16 அல்லது 17ஆம்  நூற்றாண்டின் காலத்தைச்சேர்ந்ததாக இருக்கலாம்.
      இறுதியாக, ஊர்த்தலைவரான மூப்பன் ராஜன் கொண்டம்மா கோயிலைக்காட்டி, அக்கோயில் தெய்வம் சக்தி வாய்ந்தது என்றும் தீப்பாய்ந்து இறந்துபோன கன்னிப்பெண் ஒருத்தியை பெண்தெய்வமாக ஊர்மக்கள் வழிபட்டுவருகிறார்கள் என்றும் கூறினார். இக்கோயிலுக்கருகிலேயே,   பெருங்கற்கால  நாகரிகத்தைச்சேர்ந்த ஈமச்சின்னம் ஒன்று  காணப்பட்டது.   
பெருங்கற்காலம் (Mega Lithic Period) சுமார் கி.மு. 1000 கி.மு. 500 என்னும் காலகட்டத்தைக்குறிக்கும். அதாவது, இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். இந்தப்பெருங்கற்காலப்பண்பாட்டைச்சேர்ந்த மக்கள், இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து. அந்த இடத்தில் நினைவுச்சின்னங்கள் அமைத்துத்தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.


நினைவுச்சின்னங்களான அடையாளங்கள் வேறுபட்டிருக்கும். தாழிகள் புதைக்கப்பட்ட இடத்தை மையமாகக்கொண்டு வட்டமாகச்சுற்றிலும் பெரிய பெரிய உருண்டைக்கற்களை வைத்திருப்பார்கள். இந்த அமைப்பினைத் தொல்லியல் அறிஞர்கள் கல்வட்டம் என்பர். இன்னொருவகையில், பெரிய பலகைக்கற்களைக்கொண்டு மூன்று பக்கங்களில் சுவர் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, மேலேயும் பாறைக்கல்லை வைத்து மூடியிருப்பார்கள். இந்த அமைப்பு, கல்திட்டை அல்லது திட்டைக்கல் எனக்குறிப்பிடப்படும்.
       இத்தகைய கல்திட்டைதான் மேலே குறிப்பிட்ட ஈமச்சின்னம்.  மொத்தம் மூன்று கல்திட்டைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கற்களின் கட்டமைப்பு சிதைந்து பாறைகள் விழுந்த நிலையில் உள்ளன. ஒரு அமைப்பு மட்டிலும் முழுமையாகக் காணப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே, மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள தளிஞ்சி ஊரில், மக்கள் வாழ்க்கை இருந்தது என்பது நம் கொங்கு நாட்டுப்பழமைக்குச்சான்றாக அமையும். தளிஞ்சியில் தேனாறு என்னும் ஆறு ஓடுகிறது.  நீர்நிலைகளுக்கு அருகில்   எப்போதுமே நாகரிகவாழ்க்கை இருந்துள்ளது என்பது வரலாற்று உண்மை.
      வரலாற்றுப்பழமை வாய்ந்த தளிஞ்சியின் தொல்லியல் சின்னங்களைப்பாதுகாக்கவும், அகழாய்வுகள் மூலம் மேலும் பல வரலாற்றுச்செய்திகளை வெளிக்கொணரவும் தளிஞ்சியின்  சிறப்புகள் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிச்சத்திற்குவர தொல்லியல் துறை ஆவன செய்யவேண்டும்.





து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 94449 39156  





    
































கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்